Thursday, March 12, 2015

என்னுரை



K.பாலசந்தர்

திரையுலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்.இயக்குநர் சிகரம் என்று போற்றப்பட்டவர்.

K.பாலச்ந்தர்

தமிழ் மேடை நாடக உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.தனது 80ஆவது வயதுகளிலும் மேடை நாடகம் எழுதி...அதன் அரங்கேற்ற நிகழ்ச்சியில்..அதன் வெற்றிக்காக மேடையில் இங்கும் அங்கும் அலைந்து நடிகர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்.

இவரது பல படங்கள் சர்ச்சைக்கு உள்ளானவை.ஆனாலும் பாராட்டப்பட்டவை.யாருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர்.ஆகவே தான் கடைசி வரை வெற்றி அன்னை அவரை விட்டு விலகவில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்.

கதாநாயகர்களையே மையமாக வைத்து, கதாநாயகிகளை ஊறுகாயைப் போல காட்டி வந்த வெள்ளித்திரையில், பெண்களை மையப்படுத்திய கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கான இயக்குநர்களில் ஒருவர்.

இவரைப் பற்றி, இவர் திரைப்படங்கள் பற்றி ஒரு டயரி குறிப்புபோல புத்தகம் வெளியிட்டால் என்ன? என்ற எண்ணத்தின் வடிகாலே இந்நூல் எனலாம்.

இவரைப் பற்றி எழுத வேண்டும் என எனக்குத் தோன்றியதற்கான மூன்று காரணங்கள்...

1) பாலசந்தரின் தீவிர ரசிகன் நான்

2) அவர் இயக்கியுள்ள அனைத்துத் தமிழ்ப்படங்களையும் பார்த்தவன் நான்

3)அவருக்கு உயிர் மூச்சாய் இருந்த நாடக மேடை எனக்கும் உயிர்.இன்றும், தமிழ் நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து வருபவன்.என் நாடகங்கள் சிலவற்றை வந்து கேபி பார்த்து பாரட்டியுள்ளார்.

அவரைப் பற்றி இணைய வாயிலாக அறிந்தவை, ஊடகங்களில்  வந்தவை, நண்பர்களின் வாயிலாகக் கேட்டவை ஆகியவற்றைத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளேன்.

தீவிர ரசிகனாய் இருந்தாலும் நடுநிலைமையுடன் தான் எழுதியுள்ளேன்.

இந்நூலை என் பெருமதிப்பிற்குரிய,மரியாதைக்குரிய இயக்குநர் பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்

அன்புடன்

டி.வி.ராதாகிருஷ்ணன்
   

Thursday, February 26, 2015

47) அரங்கேற்றம் குறித்து கேபியின் பத்திரிகைப் பேட்டி



புரட்சிகரமான கதையைக் கொண்ட 'அரங்கேற்றம்' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

'ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.'

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், 'தெய்வத்தாய்' முதல் 'வெள்ளி விழா' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் 'அரங்கேற்ற'த்தில் தொடங்குகிறது.

இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. 'ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

'இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே 'அரங்கேற்றம்.'

வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

'களத்தூர் கண்ணம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். 'கலாகேந்திரா' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.'

இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

'அரங்கேற்றம்' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 'அரங்கேற்றம்' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

(நன்றி- மாலைமலர்)

Sunday, February 15, 2015

46)பாலசந்தரும்..அறிஞர் அண்ணாவும்



பாலசந்தருக்கு அறிஞர் அண்ணாமீது ஒரு தனி அன்பு உண்டு.

இருகோடுகள் படத்தில் கலெக்டர் ஜானகி முதல்வரை சந்திப்பதைப் போன்ற காட்சி ஒன்று வரும்.அண்ணா அப்போது உயிருடன் இல்லை ஆனால்..கேபி அண்ணாவின் மூக்குக் கண்ணாடியைக் காட்டி, சிவகங்கை சேதுராஜன் என்பவரை அண்ணா போல பேச வைத்திருந்தார்.,

 கேபியும், அண்ணாவும் பற்றி கலைஞர் கூறியது-

1941 - 42 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழில் `நன்னிலம் நண்பர்’ என்ற தலைப்பில் வாரம் தோறும் ஒரு கட்டுரை வெளிவரும். அந்த நன்னிலம் நண்பர் யாரென்றால், நமது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலம் என்ற ஊரில் பள்ளி மாணவராய் இருந்து படித்து பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விளக்கமாக புரிந்து கொள்வதற்காக, அண்ணா, `திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து கேள்விக்கணைகள் தொடுத்தவர். கே.பாலச்ந்தர்
!
அவர் தன்னுடைய பகுத்தறிவு இயக்கம் பற்றிய சந்தேகங்களையும், திராவிட இயக்கம் பற்றிய கருத்துக்களையும் விரிவாக தெரிந்து கொள்வதற்காக அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் அளித்து அண்ணா அவர்கள் வெளியிட்ட அந்தக் கருத்துக்கள் வாரந்தோறும் வெளிவந்தது. அதன் மூலம் நான் பாலசந்தரை தெரிந்து கொண்டு, அந்த 41-42 ஆண்டுகளிலேயே எனக்கும் அவருக்கும் நட்பும் நல்ல பழக்கமும் ஏற்பட்டது. அந்த சம்பவங்களை அவரும் நானும் அண்மைக் காலத்திலே கூட மறவாமல் ஒவ்வொரு உரையாடலிலும் பதியவைத்திருக்கிறோம் என்று கலைஞர் கருணாநிதி,தெரிவித்துள்ளார்.

Thursday, February 5, 2015

45) தொலைக்காட்சித் தொடர்கள்



திரையுலகில் பாலசந்தர், ஒரு அசைக்க முடியா இடத்தைப் பிடித்திருந்தாலும், தொலைக் காட்சியிலும் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது.

அதற்கான காரணமாக கேபி சொன்னது" அனைத்து மக்கள் வரவேற்பறைக்கும். எனது தொடர்கள் சென்று அடைவதால்..என் படைப்புகள் அதிக மக்களிடையே சென்றடைகிறது என்பதாகும்.

இவரது தொடர்கள் பொதிகை,சன், ராஜ், ஜெயா, விஜய் என அனைத்து சேனல்களிலும் வந்துள்ளன.

அவரது "ரயில் சிநேகம்:" கையளவு மனசு, ரமணி vs ரமணி, ஒரு கூடை பாசம், காதல் பகடை, பிரேமி, ஜன்னல், அண்ணி என அனைத்துத் தொடரும் வெற்றி பெற்றன.திரையைப் பொலவே இதிலும் பெண்ணீயம் பேசப்பட்டது

பிரேமி என்னும் தொடரில் முக்கியப் பாத்திரம் ஏற்று கேபி நடித்தார்.

சஹானா என்ற தொடரில் சிந்து பைரவியின் இரண்டாம் பாகம் பேசப்பட்டது..

அதுமட்டுமின்றி, இதிலும் பல நடிகர்களுக்கு, பல புது இயாக்குநர்களுக்கு வாய்ப்பளித்தார் கேபி.இன்றளவும் அவரது நிறுவனமான கவிதாலயம் சார்பில் தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அவரது மகன் கைலாசம். மின்பிம்பங்கள் என்ற நிறுவனம் மூலம் தொடர்களைத் தயாரித்தார்.

இன்று புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்.

கேபியின் இளைய மகன் பிரசன்னா ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்.ஒரு பெரிய வங்கியில் நிர்வாக அதிகாரியாய் உள்ளார்.


Wednesday, February 4, 2015

44) பாலசந்தர் பெற்ற விருதுகள்



1) 1987ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்

2)1969 ஆம் ஆண்டு ..இருகோடுகள் படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசியவிருது

3)1975ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது

4)1981 ஆம் ஆண்டு தண்ணீர் தண்ணீர் படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது

5)1984 ஆம் ஆண்டு அச்சமில்லை அச்சமல்லைப் படத்திற்கு சிரந்த திரைக்கதைக்கான தேசிய விருது

6)1988 ஆம் ஆண்டு "ருத்ரவீணா" (உன்னால் முடியும் தம்பி) தெலுங்கு படத்திற்கான நர்கீஷ் தத் விருது..தேசிய ஒருமைப்பாட்டிற்கானது

7)1991 ஆம் ஆண்டு ஒரு வீடு இரு வாசல் படத்திற்கான சமூக நல்லிணக்கத்திற்காக தேசிய விருது

8)ரோஜா படத்திற்காக 1992 ஆண்டு சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கீஷ் தத் தேசிய விருது

9)1981 ஆம் ஆண்டு ஏக் துஜே கேலியே படத்திற்கான சிறந்த திரைக்கதைக்கான ஃபிலிம் ஃபேர் விருது

10)1974ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர் கதைக்காக சிறந்த தமிழ் இயக்குநர் ஃபிலிம் ஃபேர் விருது

11)1975 அபூர்வராகங்கள் சிறந்த தமிழ் இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

12)1978 மரோசரித்ராவிற்கு சிறந்த தெலுங்கு இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

13)1980 ஆம் ஆண்டு வறுமையின் நிறம் சிவப்பு படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

14)தண்ணீர் தண்ணீர் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது

15)1984 சிறந்த படத்திற்காக "அச்சமில்லை அச்சமில்லை" க்கு ஃபிலிம் ஃபேர் விருது

16)1985 சிந்து பைரவி..சிறந்த படம் என ஃபிலிம் ஃபேர் விருது

17)1989 ஆம் ஆண்டு சிறந்த இயக்குநர் என "புதுப் புது அரத்தங்கள்" படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருது

18)வானமே எல்லை படத்திற்கான சிறந்த இயக்குநர் ஃபிலிம் ஃபேர் விருது 1992 ஆம் ஆண்டு

19)தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது 1994 ஆம் ஆண்டு

20)1973ல் தமிழக அரசின் கலைமாமணி விருது

21)1992ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய "அறிஞர் அண்ணா விருது"

22)2005 ஆம் ஆண்டு சத்யபாமா யூனிவெர்சிடி வழங்கிய "டாக்டரேட்" பட்டம்

23) 2006 ஆம் ஆண்டு அழகப்பா யூனிவெர்சிடி வழங்கிய "டாக்டரேட்" பட்டம்

24)சென்னைப் பலகலைக் கழகம் வழங்கிய டாக்டரேட் பட்டம்

25)1968 ஆம் ஆண்டு சிறந்த எழுத்தளாருக்கான தமிழக விருது "எதிர் நீச்சல்" தாமரை நெஞ்சம் படத்திற்காக

26)தப்புத்தாளங்கள் படத்திற்காக 1978 ஆண்டு சிறந்த வசனகர்த்தாவாக தமிழக அரசின் விருது

27)வறுமையின் நிறம் சிவப்பு படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது

28)1982 ஆம் ஆண்டுதமிழக அரசின்  அக்னி சாட்சி படத்திற்கு சிறந்த படம் என இரண்டாம் பரிசு விருது

29)1989 ஆம் ஆண்டு புதுப் புது அர்த்தங்கள் படத்திற்கு சிறந்த இயக்குநர் என தமிழக அரசின் விருது

30)1992 ஆம் ஆண்டு சிறந்த படம் என "ரோஜா" படத்திற்கு தமிழக அரசு விருது

31)ஜாதிமல்லி படத்திற்கான 1993 ஆம் ஆண்டு சிறந்த படத்த்ற்கான விருது

32)1976 அந்துலேனி கதா சிறந்த படம் (மூன்றாம் பரிசு) என ஆந்திர அரசின் நந்தி விருது

33)1981 ஆம் ஆண்டு 'tholikodi koosindi' சிறந்த படம்(இரண்டாம் பரிசு) என ஆந்திர அரசின் நந்தி விருது

34) "தொலிகொடி கூசிந்தி" படத்திற்கான சிரந்த இயக்குநருக்கான ஆந்திர அரசின் விருது

35)1982 ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான ஆந்திர அரசின் விருது

36)ஏ என் ஆர் தேசிய விருது

37)1981 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

38) மத்திய அரசால்...திரையுலகில் சாதனை புரிந்தோர்க்கான உயரிய விருதான "தாதா சாஹேப் பால்கே' விருது 2011 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இவையெல்லாவற்ரையும் தவிர்த்து கணக்கில் வராத பல விருதுகளை கேபி வாங்கிக் குவித்துள்ளார்.

இவர் படத்தில் நடித்ததற்காக  நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளதில் இயக்குநரின் பங்கும் உண்டு எனலாம்

43-பாலசந்தர்-84


எண்பத்தி நாலு வயதில் அமரரான பாலசந்தர் பற்றி 84 சிறு குறிப்புகள்

1) 50 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகில் நிலைத்து நின்ற ஒரே இயக்குநர்

2) தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என அவரின் அனைத்து படங்களிலும் B.S.லோகநாத் இருந்தவரை ஒளிப்பதிவாளராக அவரையே விரும்பினார் கேபி.

3)ஆரம்பக் காலங்களில் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நான்கு புதுமுகங்களையாவது அறிமுகப்படுத்திய இயக்குநர் இவர் ஒருவரே

4)குழந்தை நட்சத்திரமாக 5 படங்களில் நடித்த கமல் ஹாசனை, 1973ல் அரங்கேற்றம் படத்தின் மூலம் இளைஞனாக அறிமுகப் படுத்தினார்.

5) தெலுங்கில், மரோசரித்ரா மூலமும், ஹிந்தியில் ஏக் துஜே கேலியே மூலமும் கமலை அறிமுகப்படுத்தினார்.

6) அவரது "மேஜர் சந்திரகாந்த்" நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரான "ரஜினி காந்த்" ஐ சிவாஜிராவ் என்ற நடிப்புக் கல்லூரி மாணவனுக்குச் சூட்டி தனது "அபூர்வ ராகங்கள்' படத்தில் 1975ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

7)கன்னடப் பட இயக்குநர் S.R.புட்டண்ணா வை தனது ஆதர்ச இயக்குநர் என்று சொல்வார் கேபி

8)சரிதாவை 1978ல் மரோசரித்ரா மூலம் தெலுங்கிலும், தப்புத் தாளங்கள் மூலம் தமிழிலும், அதே தப்புத்தாளங்கள் மூலம் கன்னடத்திலும் ஆகிய மூன்றுமுறை மூன்று மொழிகளிலும் அறிமுகப்படுத்தினார்

9)மனதில் உறுதி வேண்டும் மூலம் 12 நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியது ஒரு மாபெரும் சாதனை

10) 102 படங்களில் இவர் உழைப்பு இருந்திருக்கிறது.82 படங்களை இயக்கியுள்ளார்.65 நடிகர், நடிகைகளையும் 36 தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்....

11) எந்த சாக்குப் போக்கையும் ஏற்கமாட்டார்.கறாரானவர்.சொன்ன வேலையை, சொன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என்பார்.அவர் அலுவலகத்தில் கூட ""I am not interested in excuses" என எழுதி வைத்திருப்பார்.

12)"கமலுக்கு நான் தான் குரு என்பார்கள்.ஆனால் என் இடத்தில் யார் இருந்திருந்தாலும்..கமல் இந்த உயரத்தை எட்டியிருப்பார்" என்பார்.

13) பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியத்தை நடிகராக..ஒரு மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக "மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகப் படுத்தினார்.

14)1970களில் பாலசந்தருடன் இணைந்து அவருக்கு உதவியாளராக இருந்த அனந்துவை தன் வலக்கை என்பார்

15)பெண்ணின் பிரச்னைகளை சமூகத்தின் பிரச்னையாக காட்டிய இயக்குநர் இவர்.

16) தமிழ் சினிமாவில் பாரதி,திருவள்ளுவரின்  படைப்புகளை மிக அதிகமாக மரியாதைக் காட்டியவர் இவர்

17)பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.

18)அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.அண்ணா அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் 'எதிர் நீச்சல்"

19) சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின்`ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடித்தார்..

20)தேசிய விருது,பத்மஸ்ரீ, மாநில விருது,அண்ணா விருது,கலைஞர் விருது,கலைமாமணி,ஃபிலிம் ஃபேர் விருதுகள்,பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள் ஆகிய பல விருதுகள் வாங்கியவர்.
  மைய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே அவார்ட் விருதும் பெற்றவர்

21)கல்லூரிப் படிப்புக்குப் பின் முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்'அதை "தென்றல் தாலாட்டிய காலம்" என்பார்,

22)தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம்.யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும், தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்வாராம்.

23) ஸ்ரீதேவி,ஜெயப்ரதா,சரிதா,சுஜாதா,ஸ்ரீபிரியா,ஜெயசுதா,ஜெயசித்ரா,கீதா,ஸ்ரீவித்யா,சுமித்ரா,ஜெயந்தி,மதுபாலா,ரம்யா கிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகைகள் பட்டியல் இன்னும் நீளம்.

24)எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம், சிவாஜி கணேசன் நடித்த நீலவானம் படத்திற்கு வசனம் மற்றும் சிவாஜி நடிக்க "எதிரொலி" படத்திற்கு கதை, வசனம் இயக்கம்.இவையே சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இவரின் கலைப்பயணம்

25) பாசமலர், குங்குமம் படங்களைத் தயாரித்த மோகன் ஆர்ட்ஸ் இவரின் மெழுகுவர்த்தி என்னும் நாடகத்தைப் படமாக எடுப்பதாகவும், அதில் எம்.ஜி.ஆர்., சௌகார் ஜானகி நடிப்பதாகவும் இருந்தது.படம் பூஜைக்குப் பின் நின்றுப் போனது.

26)மலையருவியும்,கடற்கரையும் இவர் படங்களில் நிச்சயம் இருக்கும்."அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்கள் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் காட்டி இருப்பார்.

27)விநாயகர்தான் இஷ்ட தெய்வம்.பள்ளி நாட்களில் தெருமுனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு.

28)திரைத்துறையில் தான் பெரிய உயரத்திற்கு வந்ததைத் தன் அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு

29)மற்றவர்களது படங்களைப் பார்த்து அவை மனதைப் பாதித்து விட்டால்...உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவதோடு, அவர்களை நேரில் பார்த்தும் பாராட்டுவார்

30)பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிட, பாரதிராஜா பதறிவிட்டாராம்

31)ஷூட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார்.இல்லாவிட்டால் ஆறுமணி.இவரின் சுறுசுறுப்பை இளைஞர்களிடம் கூட காண முடியாது..

32) பெப்சி தலைவராக இருந்த போது நீண்ட நாள் பிரச்னைகளைக் கூட சுமுகமாக தீர்த்துவைத்த பெருமை  இவருக்கு உண்டு

33)சென்னைத் தொலைக்காட்சியில் வந்த இவரது "ரயில் சிநேகம்"இன்றளவும் பேசப்படும் தொடராக அமைந்தது.

34)பாலசந்தர் தனக்குப் பிடித்த நடிகருக்கு குறிப்பிட்ட படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்கமுடியாமல் போனால், அவரை டப்பிங் ஆவது பேச வைத்துவிடுவாராம்

35) ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.

36)1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்

37) இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

38)தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

39)1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது

40)பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது

41) பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை.

42)கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும்.  பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.

43)பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

44)ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டுப் பெற்றது. இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்

45)இருகோடுகள் படம் சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.பாலசந்தர் பெற்ற முதல் தேசிய விருது இதுவாகும்.

46)வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் 'சுகி' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் 'வாழ்க்கை அழைக்கிறது' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் 'அவள் ஒரு தொடர்கதை' என்ற பெயரில்பாலச்ந்தர் படமாக்கினார்

47)பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், 'சினிமாவா? வேலையா?' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். 'வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார்.

அப்போது ஏவி.எம்., 'உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்' என்று கூறினார்.

இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்

48) சில வருடங்கள் கழித்து ஏ.வி.எம்., தனக்குக் கொடுத்த அதே போன்ற நம்பிக்கையை, எம்.ஆர்.விஸ்வநாதன் என்கின்ற விசுவிற்கு அளித்து அவரை திரைப்படத்திற்கு அழைத்து வந்தார் கேபி

49)அவள் ஒரு தொடர்கதை இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது

50)சாதாரண ரசிகர்கள் எழுதும் கடிதத்தையும் பாதுகாத்து வருவது இவர் வழக்கமாகும்

51)மௌனகீதங்கள் படத்தின் போது சரிதாவிற்கும், பாக்யராஜிற்கும் கால்ஷீட் பிரச்னையோ, அல்லது சம்பளப் பிரச்னையோ காரணமாய் சர்ச்சை ஏற்பட, பாலசந்தர் தலையிட்டு சரிதாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம்

52)சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால் அதற்கு என்ன தகுதி வேண்டும்? என ஒருமுறை கல்கண்டு பத்திரிகை பேட்டியில் கேட்க கேபி அளித்த பதில்"சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால்..அவர் மனிதர்களைப் படிக்க வேண்டும்.உணர்வுகளைப் படிக்க வேண்டும்..இந்த இரண்டையும் கூர்மையாக படிப்பவர், கவனிப்பவர் சினிமாவில் இயக்குநர் ஆகலாம்

53)தமிழ்ப் படங்களில் வெள்ளையாக அழகான வடிவுடையவர்கள் மட்டுமே கதாநாயகன் ஆகமுடியும் என்ற நிலையில் கறுப்பு நிற ரஜினி, முரளி ஆகியோரை கதாநாயகன் ஆக்கினார்

54)பாலசந்தர் தன் நாடகங்களைத் தவிர விசுவின் :"பட்டிணப்பிரவேசம்" ஜோசப் ஆனந்தனி"ன் இருகோடுகள், கோமல் சுவாமினாதனின் "தண்ணீர் தண்ணீர்' கிரேசி மோகனின் மேரேஜ் மேட் இன் சலூன் (பொய்க்கால்குதிரை) ஆகிய நாடங்ககளையும் திரைப்படமாக்கியுள்ளார்.

55)வழக்கமாக இவரது நாடகங்களை அரங்கேற்றம் செய்யும் "கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் செயலாளர் "கார்த்திக் ராஜகோபால்"அமரரான போது.."என் தந்தையை இழந்துவிட்டது போல உணர்வதாக" க்கூறி மிகவும் வருத்தப்பட்டார்.

56)கர்நாடக சங்கீதத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்கவே "சிந்து பைரவி" படம் எடுத்ததாகக் கூறுவார்

57)கண்ணதாசன் இறந்தபோது பாலசந்தர் சென்று பார்க்கவில்லை.அதற்குக் காரணம், "நான் யார் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளேனோ அவரை அவர் காலமானபின் பார்க்க மாட்டேன்.அவருடன் பழகியக் காலத்தில் சிரித்துப் பேசிய முகம் என் மனதில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன்" என்றார்

58)கல்கி இதழில் "மூன்று முடிச்சு' என்ற தொடரையும், விகடனில் "ஆசையிருக்கு தாசில் பண்ண" என்ற நாடகத் தொடரையும் எழுதியுள்ளார்

59)இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன

60)  பிரபல சமுக ஊழியர், சுற்றுப்புற சுழல் ஆர்வலர் எம்.,எஸ்.உதயமூர்த்தி, பாலசந்தரின் கல்லூரித் தோழர்.அவருடைய 'உன்னால் முடியும் நம்பு" என்ற நம்பிக்கைத் தொடர் கேபியைக் கவர, தன் படம் ஒன்றிற்கு 'உன்னால் முடியும் தம்பி" என்ற பெயரை வைத்ததுடன், அதில் வரும் கதாநாயகன் பெயரை "உதயமூர்த்தி:" என்றே வைத்தார்.

61)இவர் இயக்கிய ஹிந்தி திரைப்படங்கள் ஏக் துஜே கேலியே - தெலுங்கில் மரோசரித்ரா
ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு
ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்

62) எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்! என்று பெருமையுடன் சொவார்
'
63)‘மை ஃபிலிம் இஸ் மை மெசேஜ்’ என்று தனது திரைப்படங்களில் பட்டவர்த்தனமாக சொன்னவர்.

64)ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன்.

65)கேபி எப்போதும் தன் படங்களுக்கு பெரிய நடிகர்களை நம்பிக் கொண்டிருப்பதில்லை.இன்னும் சொல்லப் போனால் புதுமுகங்களையே அதிகம் உபயோகப்படுத்தி இருப்பார்.தன் படைப்பின் மீது அவ்வளவு நம்பிக்கை.

66)தமிழ் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வந்துக் கொண்டிருந்த நேரத்தில் ,நேரடித் தெலுங்கு படத்தை இயக்கிய முதல் தமிழ் இயக்குநர் இவர்தான்

67)பாலசந்தர் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு இருந்த நாடக ஆர்வத்தைப் பார்த்து, தனது INAதியேட்டருக்கு நாடகம் எழுதித் தரச் சொன்னார் வி.எஸ்.ராகவன்.பாலசந்தர் அவருக்கு எழுதிய நாடகம் "சதுரங்கம்"

68) மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைப் பார்க்க எம்ஜியார் ஒருமுறை வந்திருந்தார்.அந்நாடகத்தில் வரும் ஒரு வசனம், "அரசியல்வாதிகளின் கையில் அரசியல் இருக்ககூடாது" என்பதாகும்.ஆனால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த எம்ஜியார் என்ன நினைப்பாரோ என கேபி நினைத்தார்.ஆனால் எம்ஜியார் பேசுகையில், "அரசியல்வாதிகளின் கைகளில் அரசியல் இருக்கலாம்...ஆனால் அயோக்கியர்கள் கையில்தான் இருக்ககூடாது" என்றார்.தன் வசனத்தை சரியாகப் புரிந்து கொண்டதை அறிந்து மனம் மகிழ்ந்தார் இயக்குநர்..
 

69)சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

70)'எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார் கேபி.

71)1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார்.

72)'நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

அவர் சிரித்துக்கொண்டே, 'பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

73)கலாகேந்திரா' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு என்பார்.

 74) கமல், ரஜினி இருவரும் வெகுதூரம் சென்றுவிட்டனர்.இனி அவர்கள் என் இயக்கத்தில் நடிப்பது கடினம், என்று சொன்ன கேபி..அவர்கள் இருவரும் இணைத்து..நான் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்றார்..

75)கதை, திரைக்கதை, வசனம், டைரக்க்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

76)நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

'1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

'சந்தர்ப்பம் இல்லை' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்க்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

77)ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

'ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

78)பாலசந்தருடன் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலைசெய்து, கேபி திரைக்கு வந்ததும் அவருக்கு உதவியாளராய்., வலது கரமாய் திகழ்ந்தவர் அனந்து.அவர் மறைவி கேபிக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி.அனந்து மறைவுப் பற்றி கேபி சொன்னது  "என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.'"

79)தன்னை பாராட்டுபவரகளை விட, தான் மற்றவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அதிகம் கொள்வார்

80)படைப்பாளின்னா, அவனுக்கு என்று , ஒரு கம்பீரமான தோற்றம்,தைரியம் இருக்கணும்னு சொல்வார்

81)குற்றம், குறைகளைக் கண்டால், அவரால் பொறுத்து கொள்ளமுடியாது.

82)இயக்குநரின் மகன் கைலாசம் தனது 53ஆவது வயதில் ஆகஸ்ட்15 ஆம் நாள் அமரரானார்.அவர், மின்பிம்பங்கள் என்ற நிறுவனத்தின் சார்பில் பல தொலைக்காட்சித் தொடர்களை எடுத்தவர்.இவரது மரணம் கேபியை மிகவும் தாக்கிவிட்டது

83) சில சமயங்களில், ஆலமரத்தின் நிழலில் மரங்கள் வளராதது போல கைலாசத்தின் வளர்ச்சிக்கு தான் தடையாய் உள்ளோமோ என கேபி நினைப்பாராம்.

84)1930 ஜூலை 9ஆம் நாள் பிறந்த கேபி 23-12-14 ஆம் நாள் தனது 84 வயதில் உலக வாழ்வில் இருந்து ஒய்வு பெற்றார்.9 தேசிய விருதுகள், 13 ஃபிலிம் ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ , ஏஎன்ஆர் தேசியவிருது மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளைப் பெற்றவர்.
இந்தியா ஒரு ஒப்புயர்வற்ற திரைப்பட இயக்குநரை, படைப்பாளியை இழந்தது.





Tuesday, February 3, 2015

42- கவிதாலயாவில் பிற இயக்குநர்கள்



கலாகேந்திரா என்ற நிறுவனத்தின் சார்பில் திரு துரைசாமி, திரு கோவிந்தராஜன் ஆகியோருக்கும், ஸ்ரீ ஆண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் திரு இராம,அரங்கண்ணல் அவர்களுக்கும், பிரேமாலயா சார்பில் திரு வெங்கட்ராமன் அவர்களுக்கும் கேபி அதிகப் படங்களை எழுதி, இயக்கியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு, கே,பாலசந்தர், புஷ்பா கந்தசாமி மற்றும் ராஜம் பாலச்ந்தர் ஆகிறோர் சார்பில் "கவிதாலயா" என்ற பெயரில் படத்தயாரிப்பு, பட வெளியீடு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

கவிதாலயா மூலமாக கேபியின் பல படங்கள் வந்தன.

தவிர்த்து, திரு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி காந்த நடிக்க நெற்றிக்கண்,புதுக்கவிதை,நான் மகான் அல்ல,ராகவேந்திரர் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களும், கமல் நடித்த "எனக்குள் ஒருவன்" படமும் இந்நிறுவனம் சார்பில் வெளிவந்தன.

மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் முத்து ஆகிய படங்கள் வந்தன.சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை வந்தது

தவிர்த்து,பிற இயக்குநர்களுக்கும் கேபி இந்நிறுவனம் சார்பில் படம் இயக்க சந்தர்ப்பம் அளித்தார்.அந்த இயக்குநர்கள் பெயரும், அவர்கள் எடுத்த படங்களும் ...


விசு - மணல் கயிறு,அவள் சுமங்கலிதான், திருமதி ஒரு வெகுமதி,வரவு நல்ல உறவு
அமீர்ஜான்- பூ விலங்கு,சிவா, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
வசந்தபாலன் - ஆல்பம்
மௌலி- அண்ணே அண்ணே
அனந்து -சிகரம்
வசந்த் - நீ பாதி நான் பாதி, அப்பு
அகத்தியன்-விடுகதை
சரண்- இதயத் திருடன்
பாலசேகரன்- துள்ளித் திரிந்த காலம்
ஹரி- அய்யா, சாமி
செல்வா- பூ வேலி,ரோஜாவனம்
ராம நாராயணன்- ராஜகாளியம்மன், ஸ்ரீ ராஜ ராஜெஸ்வரி
ரமணா- திருமலை
பேரரசு- திருவண்ணாமலை