Thursday, February 26, 2015

47) அரங்கேற்றம் குறித்து கேபியின் பத்திரிகைப் பேட்டி



புரட்சிகரமான கதையைக் கொண்ட 'அரங்கேற்றம்' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

'ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.'

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், 'தெய்வத்தாய்' முதல் 'வெள்ளி விழா' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் 'அரங்கேற்ற'த்தில் தொடங்குகிறது.

இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. 'ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

'இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே 'அரங்கேற்றம்.'

வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

'களத்தூர் கண்ணம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். 'கலாகேந்திரா' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.'

இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

'அரங்கேற்றம்' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 'அரங்கேற்றம்' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

(நன்றி- மாலைமலர்)

No comments:

Post a Comment