தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) அருகே உள்ள நல்லமாங்குடி என்னும் கிராமத்தில் 1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி கைலாசம் தம்பதியருக்கு மகனாக பாலசந்தர் பிறந்தார்.
அவருக்கு எட்டு வயதாக இருக்கையிலேயே அப்போது சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களை விரும்பிப் பார்ப்பார்.பன்னிரெண்டு வயதில் நாடகங்கள் மீது பற்று ஏற்பட, தனது நடிப்பு,எழுத்துத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. ஜுவாலஜி 1949ஆம் ஆண்டு படித்து முடித்த இவர் முத்துப்பேட்டை பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடர்ந்தார்.
1950ஆம் ஆண்டு மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னைக்கு வந்தவர், அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.அச்சமயம், திரு ஒய்,ஜி.பார்த்தசாரதி,மற்றும் பட்டு ஆகியோர் நடத்தி வந்த யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்ஸ் என்ற நாடகக் குழுவில் இணைந்தார்.(இன்றும் ஒய்.ஜி.பி., மகன் ஒய்.ஜி.மகேந்திரன் இக்குழுவை நடத்தி வருகிறார்).
அலுவலகத்தில் இருந்த ரெக்ரியேசன்ஸ் கிளப்பில், ஒரு சமயம் "புஷ்பலதா" என்றொரு நாடகத்தை நடத்தினார்.அதில் வரும் பெண் பாத்திரமான புஷ்பலதா பற்றி அனைவரும் பேசுவர்.ஆனால் கடைசிவரை அப்பாத்திரம் மேடையிலேயே வராது.அந்த நாடகத்தின் ஞாபகமாகவே தன் பெண்ணிற்கு புஷ்பா என்ற பெயரைச் சூட்டினார்.
பின்னர், ராகினி ரிக்ரியேசன்ஸ் என்ற பெயரில் தனது சொந்த நாடக் குழுவை ஆரம்பித்தார்.முதன் முதலாக மேஜர் சந்திரகாந்த் என்னும் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றினார்.ஆனாலும்..அந்நாளில் தமிழ் நாடகங்களுக்கு இருந்த ஆதரவைக் கண்டு அந்நாடகத்தையே தமிழில் மேடையேற்றினார்.இந்நாடகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாய் மெட்ராஸ் டெலிஃபோன்சில் வேலை செய்து வந்த சுந்தராரஜன் என்னும் நண்பர் நடித்தார்.பின்னாளில் அவரே மேஜர் சுந்தரராஜன் என்று அழைக்கப்பட்டு 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார்.மேலும் இவர்களுடன் நாகேஷ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்து வந்தனர்.
அலுவலகத்தில் இருக்கையிலேயே, 1964ல் இவரது நாடகங்களால் கவரப்பட்ட திரு ஆர்.எம். வீரப்பன், பாலசந்தரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்த, அவர் சத்யா மூவிஸிற்காக தான் நடிக்க இருந்த "தெய்வத்தாய் " என்ற படத்திற்கான வசனங்களை இவரை எழுதச் சொன்னார்.அப்படத்தின் இயக்குநர் பி.மாதவன் பின் நீலவானம் என்ற தன் படத்திற்கும் வசனம் எழுதும் பொறுப்பை பாலசந்தருக்குத் தந்தார்.அப்படத்தில் இவர் எழுதிய...
"ஆறுல சாகலாம் அறியாத வயசு
அறுபதிலே சாகலாம் அனுபவித்த வயசு..
ஆனால்..பதினாறில் சாகறது என்பது...'
என்ற வசனம் மக்களிடம் பிரபலமானதுடன்..இதை எழுதியது யார்? என மக்கள் பாலசந்தரை அறிந்தனர்.
பாலசந்தர் அடுத்து சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி,மெழுகுவர்த்தி, எதிர் நீச்சல், நவக்கிரகம், நாணல் ஆகிய வெற்றி நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.இவர் நாடகங்களுக்கு ரசிகர்கள் சினிமாவிற்காக திரையரங்குகளில் கள்ளமார்க்கெட்டில் டிக்கட் வாங்குவது போல டிக்கெட் வாங்கி வந்தனர் என்பது இங்கே கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவரின், சர்வர் சுந்தரம் நாடகத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அதற்கான உரிமைகளை அவரிடம் இருந்து வாங்கினார்.பாலசந்தர் கதை ,வசனம் எழுத அந்நாளில் பிரபலமாய் இருந்த இரட்டையர்கள் என அழைக்கப் பட்ட கிருஷ்ணன்- பஞ்சு ஆகியோரை படத்தை இயக்கச் சொன்னார்.இந்தப் படம் மூன்றாவது சிறந்தப் படமாகத் தேர்வாகி அதற்கான சான்றிதழைப் பெற்றது.மேலும் அந்த ஆண்டு சிறந்த தமிழ்ப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றது.
உணவகத்தில் சர்வராய் இருந்த அழகற்ற வாலிபன் ஒருவன் , அந்த உணவகத்தின் முதலாளி மகள் தன்னை விரும்புவதாய் நினைத்து காதல் வயப்படுவதும், அதனால் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அவனது நண்பன் உதவ சினிமா நடிகன் ஆவதாய் கதை
பாலசந்தரின் ஒவ்வொரு படைப்பும் மனித உறவுகளுக்கு இடையே ஆன சிக்கல்கள், பிரச்னைகள் ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டே அமைந்தவை ஆகும்.
மேஜர் சந்திரகாந்த் நாடகம் ஹிந்தியில் "ஊஞ்சே லாக்" என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.
இதனிடையே முக்தா ஃபிலிம்ஸின் "பூஜைக்கு வந்த மலர்" என்ற படத்திகான வசனம் எழுதும் வாய்ப்பினையும் பெற்றார்.
நாடகம், நாடகக் கலைஞர்கள் என்றால் பாலசந்தருக்கு கடைசிவரை பிரியமாய் இருந்தது.
No comments:
Post a Comment