Monday, January 5, 2015

4- எதிர் நீச்சல்



மேடையில் மாபெரும் வெற்றி பெற்றிருந்த "எதிர்நீச்சல்" திரைப்படமானது 1968ல். பாலசந்தரின் கதை, வசனம் ,இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் இது.

நாகேஷ், ஜெயந்தி,சௌகார் ஜானகி,ஸ்ரீகாந்த்,முத்துராமன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மாது ஒரு ஆதரவற்றவன்.பல குடியிருப்புகளைக் கொண்ட ஒரு வீட்டு மாடிப்படியின் அடியில் உள்ள இடத்தில் வசிப்பவன்.அந்த வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் வேண்டிய வேலைகளைச் செய்து கொடுப்பவன்.அப்படியே படிப்பையும் தொடர்பவன்.அவனை, அனைவரும் படுத்தும் பாட்டை எண்ணி வருத்தப்பட்ட மேஜரும், முத்துராமனும் , அவன் திடீரென பணக்காரன் ஆகிவிட்டதாக ஒரு பொய்யைச் சொல்லப் போக நிலைமையே மாறுகிறது.இதனிடையே, மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தியை மாதுவிற்கு மணமுடிக்கும் ஏற்பாடும் நடக்கிறது.இப்படத்தில் முத்துராமன், மலையாள நாயராக நடித்திருப்பார். (நாடகத்தில் இப்பாத்திரத்தை நடித்த ராமன் என்பவர் பின்னாளில் நாயர் ராமன் என்றே குறிப்பிடப்பட்டார்).பாலசந்தரின் ஒவ்வொரு படத்திலும் சிறுசிறு பாத்திரங்களும் மக்களால் ரசிக்கப்படும், பேசப்படும் பாத்திரங்களாகவே அமையும்.

"அடுத்தாத்து அம்புஜம்" சேதி கேட்டோ.." "வெற்றி வேண்டுமா..போட்டுப்பாரடா எதிர்நீச்சல்" ஆகிய பாடல்கல் குறிப்பிடப்பட வேண்டியன ஆகும்.

இதே ஆண்டு வந்த இவரது மற்றொரு வெற்றிப்படம், "தாமரை நெஞ்சம்" வங்கப் படக்கதை ஒன்றை தழுவியது ஆனாலும், தமிழில் பாலசந்தரின் வசனங்களும், இயக்கமும் இப்படத்தையும் வெற்றிப் படமாக்கின.ஜெமினி கணேசன்,சரோஜா தேவி,வாணிஸ்ரீ, நாகேஷ் ஆகியோர் பங்கேற்றி இருந்தனர்.

வானிஸ்ரீயும், சரோஜா தேவியும் தோழிகள்.ஜெமினியை , சரோஜாதேவி விரும்ப வாணிஸ்ரீயும் விரும்புகிறார்.தோழிக்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறார் சரோஜாதேவி.ஒரு கட்டத்தில் விஷயம் வெளியே தெரிய, எழுத்தாளரான சரோஜாதேவி, கதையின் கடைசி அத்தியாயத்தை நாகேஷிற்கு சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு தூக்க மாத்திரையை விழுங்குகிறார்.படத்தில் நடித்த பாத்திரங்கள் மட்டுமின்றி, தியேட்டரில் ஒவ்வொரு ரசிகனும் இருக்கையின் நுனிக்கு வரும் அளவு அழகாக படமாக்கப்பட்டிருந்த்து கிளைமாக்ஸ்.

இப்படத்தில், :"அடிப்போடி பைத்தியக்காரி' என்ற பாடல் ஹிட் சாங்க் ஆகும்.ஒரிடத்தில், நீ எப்படிம்மா இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிற என்ற கேள்விக்கு, சரோஜாதேவி பதில் சொல்கிறார்.

"துக்கம் மேலிடுகையில் "மட மட' என ஒரு சொம்பு தண்ணீரை குடிச்சுடுவேன்.துக்கம் அடங்கிடும்..சிரித்திடுவேன்" .இந்த வசனம் விமரிசனங்களில் பாராட்டப் பட்டது.

இவ்வாண்டு இந்த இரண்டு படங்களுக்குமான சிறந்த வசனகர்த்தா விருதை தமிழக அரசு பாலசந்தருக்கு வழங்கியது.

இதே ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசன்  பாமாவிஜயத்தை தெலுங்கில் ("Bhalekodalu") பாலசந்தர் இயக்கத்தில் தயாரித்தார். ஹிந்தியில் "teen bahuraniyan' என்ற பெயரிலும் வந்தது.

இதே ஆண்டு பாலசந்தரின் "சுகதுக்கலு' என்ற தெலுங்கு படமும் வந்தது

No comments:

Post a Comment