அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை ஆகிய படங்களுக்குப் பிறகு 'அ' வரிசையில் வந்த படம் அபூர்வராகம்.ஆண்டு 1975.
கமல்ஹாசன்,ஸ்ரீவித்யா,சுந்தரராஜன்,ஜெயசுதா,நாகேஷ் இவர்களுடன் சிவாஜிராவ் என்ற நடிகர் இப்படத்தில் அறிமுகமானார்.மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், மேஜரின் இரண்டு மகன்களில் ஒரு மகனின் பெயர் "ரஜினிகாந்த்.அந்தப் பெயரையே சிவாஜிராவிற்கு திரைப்படப் பெயராக்கினார் பாலசந்தர்.மோதிரக் கைகளால் குட்டப்பட்ட அந்நடிகர் பின்னர் மக்களால் சூப்பர் ஸ்டாராக ஆக்கப்பட்டார்.பாடகியாக வந்த ஸ்ரீவித்யாவின் கச்சேரி நடைபெறும் அரங்கில், அவரை விட்டு ஓடிய கணவனாக ரஜினி..அரங்கின் பெரும் கதவுகளைத் திறந்து அரங்கினுள் வருவது போன்ற முதல் காட்சி அவருக்கு.பின்னாளில் அவரை திரையுலகம் வரவேற்கப் போவதை முன்னதாகச் சொல்வது போல இக்காட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அபூர்வராகங்கள் படக்கதையின் கரு கொஞ்சமும் கற்பனையும் செய்துப் பார்க்க முடியாதது.
பிரசன்னா, தன்னைவிட மிகவும் மூத்த இசைப்பாடகி பைரவியைக் காதலிக்கிறான்.இருவரும், ஒரு கட்டத்தில் மணமுடிக்கலாம் என எண்ணுகையில், பிரசன்னாவின் தந்தை ஒரு இளம் பெண்ணை விரும்புகிறார்.அப்பெண் பைரவியின் மகள்.இந்நிலையில்..என்னவாகும்..என்பதை பாலசந்தர் தனக்கே உரித்த பாணியில் படத்தை முடித்திருப்பார்.
பிரசன்னாவாக கமல்ஹாசனும், பைரவியாக ஸ்ரீவித்யாவும், அவரது மகளாக ஜெயசுதாவும், பிரசன்னாவின் தந்தையாக மேஜரும் நடித்திருப்பர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் எழுதியிருந்த, "அதிசய ராகம்" என்ற பாடலை ஜேசுதாசும்,"கேள்வியின் நாயகனே" என்ற பாடலை வாணி ஜெயராமும், "ஏழு ஸ்வரங்களில்' என்ற பாடலை வாணி ஜெயராமுடன், சசிரேகாவும் பாடியிருப்பர்.
இப்படம் தெலுங்கில், தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் "Thoorpu Padamara" என்ற பெயரில் வந்தது.
ஹிந்தியில், பாலசந்தர் இயக்கத்திலேயே "Ek nai paheli" என்ற பெயரில் வந்தது.
1975ஆம் ஆண்டு தமிழில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது இப்படம்.அதைத்தவிர, சிறந்த இயக்குநர் என கேபிக்கும்,சிறந்த பட விருதையும், கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் ஃபிலிம் ஃபேர் பெற்றுத் தந்தது.
இப்பட ஒளீப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்திற்கும், சிறந்த பெண் பாடகியென வாணி ஜெயராமுக்கும் தேசிய விருதினை இப்படம் பெற்றுத் தந்தது.
பாலசந்தரின் மறக்க முடியா படைப்புகளில் இப்படத்திற்கும் முக்கிய இடமுண்டு.
No comments:
Post a Comment