1969ல் வந்த KBயின் படங்கள்...
பூவா தலையா, இரு கோடுகள்,sattekalapu satteya (telegu), chiranjeevi (telegu)
பூவா தலையா பாலசந்தரின் நண்பர் அரங்கண்ணல் தயாரிப்பில் வந்த படம்.பாலச்சந்தர் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியும் இருந்தார்.இதில் ஜெமினி கணேசன்,ஜெயஷங்கர், நிர்மலா, ராஜஸ்ரீ, வரலக்ஷ்மி மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
பணக்கார,ஆணவம் நிறைந்த மாமியாரை ஜெயஷங்கரும் நாகேஷும் அடக்குவது போன்ற கதையமைப்பைக் கொண்ட இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.
"மதுரையில் பிறந்த மீன் கொடியை" என்று ஆரம்பித்த, ஒரு பெண்ணை தமிழகத்திற்கு ஒப்பிட்டுப் பாடப்பட்ட , வாலி எழுதி, சௌந்தரராஜன் பாட விஸ்வனாதன் இசை அமைத்திருந்த பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
அடுத்ததாக...
சென்னை நாடக மேடைகளில், நடிகை பண்டரிபாய் நடிக்க, ஜோசப் ஆனந்தன் என்பவர் எழுதியிருந்த இருகோடுகள் என்ற நாடக உரிமையைப் பெற்று அதே பெயரில் திரைப்படமாக்கினார் கேபி.
இப்படத்தில், ஜெமினி கணேசன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.சுகமோ, துக்கமோ, படிப்போ எதுவாயினும் அது ஒரு சிறு கோடாய் இருந்தால்..அதன் அருகே சற்று பெரியகோடு இட்டால்..சுகமெனில் அதிகரிக்கும், துன்பமெனில் குறையும்..படிப்பு எனில் படிப்பறிவு வளரும்..சின்னக்கோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்னும் தத்துவத்தை உணர்த்தியது இப்படம்.
ஜெமினி, சௌகாரை காசியில் இருந்த போது காதலித்து மணமுடிக்கிறார்.ஆனால் சௌகார் பிள்ளைப்பேறு அடைந்த வேளையில் அவரிடமிருந்து ஜெமினி பிரிய நேரிடுகிறது.துக்கத்தில் இருந்த சௌகாரை, அவரது தந்தை வி.எஸ்.ராகவன் மேல் படிப்புப் படிக்கச் சொல்லி ஐ,ஏ.எஸ்., ஆக்குகிறார்.சென்னை வந்த ஜெமினி, ஜெயந்தியை மணமுடிக்கிறார்.அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராக ஜெமினி பணிபுரிகிறார்.இந்நிலையில், சென்னைக்கு கலெக்டராக வரும் சௌகார், ஜெமினியைப் பார்க்கிறார்.ஒருசமயம், தண்ணீரில் சௌகார் குழந்தையும், ஜெயந்தியின் குழந்தையும் நீந்தி விளையாடுகையில் ஜெயந்தியின் குழந்தை மூழ்கி இறக்கிறது.அதே நேரம், சௌகாரைப் பற்றி அறிந்த ஜெயந்தி,அவரைத் தன் சகோதரியாய் ஏற்கிறார்.கடைசியில், சௌகார் தன் குழந்தையை ஜெயந்தியிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு செல்வதாகக் கதையமைப்பு இருக்கும்.
"புன்னகை மன்னன் பூ விழி கண்ணன்' என்ற பாடல் இவர்கள் கதையை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது போல அமைந்தது இப்பாடலின் சிறப்பு.இசை வி.குமார்.பாலசந்தர் தன் நாடகங்களுக்கு இசையமைத்த குமாருக்கு தன் ஆரம்பகாலப் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை அளித்தார் என்பது இங்கே பதிவு செய்கிறேன்.மேலும், என்.பாலகிருஷ்ணன் இவரது பல படங்களுக்கு ஒளிப்பபதிவாளராக இருந்தார்.
நான் ,முன்னரே சொன்னாற்போல திராவிட இயக்கத் தலைவர்களிடம் பாலசந்தருக்கு இருந்த பற்றிற்கு மற்றுமொரு உதாரணம்.
இப்படத்தில், கலெக்டர், முதலமைச்சரை சந்திப்பது போல ஒரு காட்சி.
அக்காட்சியில், முதல்வரைக் காட்டாது, அவரது மேசையில் அவரின் மூக்குக் கண்ணாடியை வைத்துவிட்டு, சிவகங்கை சேதுராஜன் என்பவரை, அறிஞர் அண்ணா போல பேசச் சொல்லி படமாக்கியிருப்பார் கேபி.அது அந்நாளில் மிகவும் பாராட்டப்பட்டது.
இருகோடுகள் படம் சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.பாலசந்தர் பெற்ற முதல் தேசிய விருது இதுவாகும்.
No comments:
Post a Comment