Saturday, January 31, 2015

36- கல்கி

                   

செல்லம்மா ஒரு பாடகி.ஆனால் அவளது கணவன் பிரகாஷோ அவளை மிகவும் கொடுமைப் படுத்துபவன்.அவர்களுக்கு குழந்தை இல்லை.அதனாலேயே அவனும், அவனது தாயும் அவளைப் படாத பாடு படுத்துகின்றனர்.அவள் பாடுவதை நிறுத்த வேண்டும் என்கின்றனர்.ஆனால்..ஒரு கட்டத்தில் அவனது ஹிம்சை பொறுக்க முடியாமல் அவள் விவாகரத்து பெற்று விடுகிறாள்.

அவன், இரண்டாவதாகக் கற்பகம் என்பவளை மணக்கிறான்.அவளோ அப்பாவி.பிரகாஷின் அனைத்து கொடுமைகளையும் பொறுத்து கொள்கிறாள்.

செல்லம்மா, தனியாக கோகிலா என்னும் சமையல்காரப் பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாள்.

கல்கி என்னும் பெண் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள்.அவளுடன் வேலைப் பார்க்கும் பரஞ்சோதி என்பவன் அவளை விரும்ப, அவள் தவிர்த்து வருகிறாள்.

செல்லம்மாவிற்கு கல்கியின் நட்புக் கிடைத்ததும், கல்கி அவளது வீட்டிலேயே, பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாகிறாள்.

செல்லம்மாவின் கதையைக் கேட்டதும், கல்கி, பிரகாஷூடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறாள்.பின், அவனை மணந்து கொண்டு... அவனை துன்புறுத்த ஆரம்பிக்கிறாள்.பிரகாஷ் அவளுக்கு அடங்கிப் போகும் நிலை.அவன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு, அவனது வாழ்விலிருந்து விலகுகிறாள்.

அந்தக் குழந்தையை செல்லம்மாவிற்கு பரிசாகக் கொடுக்கிறாள்.

குழந்தைப் பெற்றுத் திரும்பிய கல்கியை, முற்போக்குச் சிந்தனையுடன் பரஞ்சோதியும் மணக்கத் தயாராய் இருக்கிறான்.

பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும்,பாலசந்தரின் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்தது.

தேவா இசை.

இப்படத்தில் கீதா, செல்லம்மாவாகவும், கற்பகமாக ரேணுகாவும், கல்கியாக ஸ்ருதியும், பிரகாஷாக ,பிரகாஷ்ராஜும், பரஞ்சோதியாக ரஹ்மானும் நடித்தனர்.

பாலசந்தர் சினிமா இயக்குநராக ஒரு காட்சியில் வருவார்.

35- டூயட்

             

1994ஆம் ஆண்டு வந்த  வெற்றி படம் டூயட்

குணாவும், சிவாவும் சகோதரர்கள்.அவர்கள் ஒரு பிரபல இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.சிவா காதலிக்கிறான்.குணாவை காதலிக்கும் பெண் குணா குண்டாக இருப்பதைக் கேலி செய்து வருபவள்.ஒருசமயம், சிவாவின் காதல் தோல்வியுற, அவன் மனம் உடைகிறான்.அவனுக்கு ஆறுதல் சொல்ல, இட மாற்றம் வேண்டுமென அவர்கள் இடம் மாறுகிறார்கள்.குணாவின் தந்தைக்கு ஊருக்குத் தெரியாமல்சீதம்மா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது.அவர் இறக்கையில் சீதம்மாவிற்குப் பிறந்த பெண்ணை குணா காப்பாற்ற வேண்டும் என வாக்குறுதியைப் பெறுகிறார்.

தாயில்லா குணா, சீதம்மாவை, அவள் பெண்ணுடன் தன்னிடம் வந்து இருக்கும்படிக் கூறுகிறாள்.ஆனால், சீதம்மா அவர்களுக்குள் இருக்கும் உறவுத் தெரியக் கூடாது எனச் சொல்லி, ஒரு சமையல்காரியாய் வீட்டினுள் நுழைகிறாள்.

குணா, சாக்ஸஃபோன் வாசிப்பவனாகவும்,பாடலாசிரியனாகவும்,இசை இயக்குநன் ஆகவும் இருக்கிறான்.ஆனால் சிவா பாடுபவனாக உள்ளான்.

குணாவின் பக்கத்து வீட்டில் அஞ்சனா என்னும் நடன இயக்குநர் வசிக்கிறாள்.குணா, சிவா இருவருமே அவளிடம் காதல்வயப் படுகின்றனர்.சிவாவோ, அவளைத் தேடிப் போய் தன் காதலைச் சொல்கிறான்.ஒருநாள் அவள் சாக்ஸோஃபோன் இசைக் கேட்கிறாள்.அது சிவா வாசிப்பதாய் எண்ணுகிறாள்.அதனால் அவள் சிவாவை விரும்ப ஆரம்பிக்கிறாள்.சிவாவும், சாக்ஸோஃபோன் வாசித்தது தான் தான் என பொய் சொல்கிறான்.குணாவோ தான் குண்டாய் இருப்பதால், நேரடியாக அஞ்சனாவைப் பார்க்காது, அவளின் தந்தையிடம் நட்புக் கொண்டு அவளின் காதலைப் பெற நினைக்கிறான்.இதனிடையே குணாவிடம் அஞ்சனா, "சாக்ஸஃபோன் இசைக் கேட்டதாயும், அதைத் தான் விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் அவள் விரும்புவது தன்னைத்தான் என எண்ணுகிறான் குணா.

இந்நிலையில், சினிமா நடிகர் திலீப் அஞ்சனாவை விரும்ப, அவனுடன் அஞ்சனா பழகுவது சிவாவிற்குப் பிடிக்கவில்லை.தவிர்த்து அஞ்சனாவை மையமாகக் கொண்டு சிவா, குணா இருவரிடையே தகராறு வர, சீதம்மா அஞ்சனா சிவாவையே விரும்புவதாகக் கூறுகிறாள். மேலும்,சிவா, தோல்வியைத் தாங்கமாட்டான் எனக் கூறி  .குணாவிடம் அவளை மறக்கக் கூறுகிறாள்.

ஒருநாள், அஞ்சனாவிற்கு, சிவா சாக்ஸோஃபோன் வாசிக்கிறேன் என்று சொன்னது பொய் என அறிகிறாள்.மேலும், தன்னால் அவர்களுக்குள் சண்டை வேண்டாம் என்றும், தன் மீது உள்ள காதலை அவர்கள் விட்டுவிட வேண்டும் எனவும் கூறுகிறாள்.

இதனிடையே, திலீப் அஞ்சனாவிடம், தன்னை மணக்கும்படிச் சொல்கிறான்.அவள் மறுக்க, அவனோ..ஊடகங்களுக்கு விரைவில் அஞ்சனாவை தான் மணக்க இருப்பதாகப் பேட்டி கொடுக்கிறான்.அதைப் பார்த்த குணா, அஞ்சனா தன்னையும், சிவாவையும் ஏமாற்றியதாக சொல்கிறான்.ஆனால், அஞ்சனாவும், அவளது தந்தையும் இதை மறுப்பதுடன், அவள் தந்தை அஞ்சனா சாக்சோஃபோன் இசையில் மயங்கியே, அதை வாசிப்பவனை விரும்பியதாகவும், அதனால் குணா அவளை மணக்க வேண்டும் என்கிறார்.திலீப் அஞ்சனாவைக் கடத்த, குணா அவனிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான்.திலீப் குணாவை மலையுச்சிலிருந்து தள்ளிவிட முயலுகையில் குணாவைக் காப்பாற்றி சிவா உச்சியிலிருந்து விழுந்து மடிகிறான்.

இறுதியில் குணா, அஞ்சனாவை மணக்கிறான்.

குணாவாக பிரபுவும், ரமேஷ் அரவிந்த் சிவாவாகவும், அஞ்சனா வாக மாதுரி தீக்க்ஷித்தும், திலீப்பாக பிரகாஷ்ராஜும் நடித்தனர். மற்றும் சார்லி, சரத்பாபு செந்தில் நடித்தனர்.கமல்ஹாசன் சிறப்புத் தோற்றம்.
பிரகாஷ்ராஜிற்கு இது முதல் படமாகும்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

அஞ்சலி..அஞ்சலி - எஸ்.பி.பி., சித்ரா
வெண்ணிலவின் தேரில் ஏறி - ஜேசுதாஸ்
மெட்டுப்போடு - எஸ்.பி.பி., பி.சுசீலா
கத்திரிக்காய்..கத்திரிக்காய் - சுஜாதா, பிரசன்னா
குளிச்சா குத்தாலம்- எஸ்.பி.பி.,  அகியோர் பாடினார்.

படத்தின் தலைப்பு சாக்ஸோஃபோன் இசையை கதரி கோபால்நாத் வாசித்தார்.மற்ற சாக்ஸோஃபோன் இசை ராஜு வாசித்தார்.

தெலுங்கில் இதே பெயரிலும், ஹிந்தியில் "Tu hi mera dil' என்ற பெயரிலும் வந்தது.

Friday, January 30, 2015

34- ஜாதிமல்லி

   

குஷ்பூ நடித்து பாலசந்தர் கதை வசனம் இயக்கத்தில் வந்த படம் ஜாதிமல்லி

கஜல் (Ghazel) பாடகி குஷ்பூ.அவரது தாய் கொலை செய்யப்பட்டதால், அந்த துக்கத்தை மறக்க மலை வாசஸ்தலம் ஒன்றிற்குச் செல்கிறாரங்கு ஒரு வாடகைகார் ஓட்டுநரைச் (முகேஷ்) சந்திக்கிறாள். அவரது தந்தை மனைவியைக் கொன்று விட்டு ,குடி மயக்கத்தில் குழந்தைகளையும் கொன்றார் என்ற செய்தியைக் கேட்டு..தனதுத் துயரத்தை விட அவன் துயரம் எவ்வளவு அதிகம் என எண்ணி தன் துயரத்தை மறக்க முயலுகிறார் குஷ்பூ.பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாகத் தங்குகிறார்.

வினீத், யுவராணி தங்களை மாஸ்கோ, பெர்லின் எனச் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்.இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் முகேஷையும், குஷ்பூவையும் சேர்த்து வைக்க முயலுகின்றனர்.

ஒருநாள் முகேஷ், குஷ்பூவிடம்..தனது தந்தைப் பற்றித் தான் சொன்னது மிகைப்படுத்தப்பட்டது என்கிறான்.குஷ்பூவிற்கு உள்ள துக்கத்தை மறக்கடிக்க வேண்டும் எனில், அதைவிட ஒரு பெரிய துக்கத்தைச் சொல்ல வேண்டும் என்றதால் அப்படிச் சொன்னதாகக் கூறி ,தன்னை மன்னிக்கச் சொல்கிறான்.மேலும், தான் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும், ஆனால், அங்கு சொத்துத் தகராறால்..நிம்மதி இல்லாமல் இருந்ததால்..அதையெல்லாம் விட்டுவிட்டு வந்து விட்டதாகவும் சொல்கிறான்.

இதனிடையே, வட இந்தியாவிலிருந்து வரும் ஒருவன் குஷ்பூவின் இசையைக் கேட்கிறான்.மேலும் அவளுடன், முகேஷிற்குத் தெரியாத ஹிந்தியில் பேசி  சிரிப்பது, அவர்கள் Ghazel பற்றி பேசுவது எல்லாம் முகேஷிற்கு அவனிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது.அதனால் குஷ்பூவுடன் சண்டையிட்டு பிரிகிறான்.

நாளடைவில், வட இந்தியனின் செயல்பாடுகள் வெறுப்பை ஏற்படுத்த, குஷ்பூ முகேஷிடம் செல்ல விரும்புகிறாள்.

ஒரு சமயம், மதக்கலவரம் வெடிக்கிறது.வேறு வேறு மதத்தைச் சார்ந்த வினீத், யுவராணி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகின்றனர்.அப்போது மத வெறியர்களைக் கண்டு, எங்கள் ரத்தத்தை வைத்து எந்த மதம் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.இறப்பதற்கு முன் அவர்கள் முகேஷ், குஷ்பூவை இணைத்து வைக்கிறார்கள்.

மரகதமணியின் இசை.எஸ்.பி.பி.பாடிய "சொல்லடி பாரதமாதா" என்ற பாடல் இனிமை.

33- வானமே எல்லை

               

1992ல் வந்த படம் வானமே எல்லை.திரைக்கதை, வசனம், இயக்கம் கேபி.

இப்படத்தில் ஆனந்த் பாபு,பானுப்பிரியா,ரம்யா கிருஷ்ணன், மதுபாலா,ராஜேஷ்,பப்லு பிருதிவிராஜ் மற்றும் விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்தனர்.

இளவயதுடைய ஐவரின் கதை இது.

ஆனந்த் பாபு, ஒரு நீதிபதியின் மகன்,அவனுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் எல்லாம் அவனது தந்தைக்கு லஞ்சமாகக் கொடுக்கப் பட்டவை என்பதை அறியாதவன்.ஒருநாள் அவன் ரோபோவாக நடித்த ஊழல் பற்றிய வீடியோவைப் பார்த்த நண்பர்கள், உன் தந்தையே பெரிய ஊழல் பேர்வழி என்கின்றனர்.அதனால் கோபமடைந்தவன், நண்பர்கள் சொல்வது உண்மையானால்..தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுகிறான்.வீட்டிற்குள் நுழையும் போது அவன் தந்தை ஒரு வழக்கிற்காக லஞ்சம் வாங்குவதைப் பார்த்துவிடுகிறான்.அவனது தந்தை அவனிடம் அதை நியாயப்படுத்துகிறார்.அவனது தாயும் , வாழ்வில் வசதிகள், பங்களா,கார் மற்றும் அவன் வைத்திருக்கும் யமகா பைக் அனைத்தும் லஞ்சத்தில்தான் வாங்கப்பட்டவை என்கிறாள்.மேலும், பணம் இல்லையெனில் அவன் இரு சகோதரிகளுக்கு மணமுடிப்பது எப்படி? என்கிறாள். தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை எரித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் ஆனந்த்பாபு.

பப்லு ஒரு பணக்கார வியாபாரியின் மகன்.தாய் இல்லாதவன்.அவன் சுகுணா என்ற  ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண்ணைக்(விசாலி கண்ணதாசன்) காதலிக்கிறான்.ஆனால், அவன் தந்தை அக்காதலை எதிர்ப்பதோடு அவனுக்கு ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்க விரும்புகிறார்.ஆனால். பப்லு, தன் முடிவில் உறுதியாய் இருப்பதால், தந்தையில்லாத சுகுணாவின் தாயை தான் மணந்து , சுகுணாவை, பப்லுவின் அண்ணனாக ஆக்குகிறார்.இதனால் மணமுடைந்த பப்லு வீட்டை விட்டு வெளியேறுகிறான். சுகுணா, அவர்களை வேறுவிதமாய் பழி வாங்குகிறாள். தான் ஒரு பணக்கரப் பெண் எனக் கூறிக்கொண்டு குடி பழக்கத்திற்கு ஆளாகிறாள்.

மதுபாலாவை வயதான ஒருவனுக்கு மணமுடிக்க முயலுவதால் அவரும் விட்டை விட்டு ஓடி விடுகிறாள்

ஆனால் ரம்யாவோ, பாலியல் பலாத்காரத்தால் கற்பிழக்கிறாள்.

வேறொருவன், வேலையில்லாதன்.அவன் சார்ந்துள்ள ஜாதியால் வேலை கிடைக்கவில்லை.

ஆகிய ஐவரும் எதேச்சையாக ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.100 நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு 101ஆம் நாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என தீர்மானிக்கின்றனர்.

ஒருகட்டத்தில், வேலையில்லாதவன், தற்கொலை எண்ணத்தை விட்டு, இவர்கள் மனதையும் மாற்ற விரும்புகிறான்.ஆனால் அதற்கு மற்றவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.அத்னால் மனமுடைந்தவன் ஒருநாள்  தற்கொலை செய்து கொள்கிறான்.

இதனிடையே, அவர்கள் தங்கியிருந்த இடத்தின் வாசலில் ஒரு குழந்தை கிடக்கிறது.அவர்கள் குழந்தையைக் கண்டதும் உணர்ச்சிவசப்படுகின்றனர்.அப்போது இறந்த நண்பனின் தந்தை ராஜேஷ் அங்கு வருகிறார். தன் மகன் இறக்க அவர்கள் நால்வரேக் காரணம் என பழி சுமத்துகிறார்.தற்கொலை முனைக்கு நால்வரும் செல்கின்றனர்.அங்கு இறந்த நண்பனைக் காணுகின்றனர்.அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற தான் ஆடிய நாடகமே தான் இறந்தது போல நடித்தது என்கிறான்.அவனின் தந்தையும் மற்றவ்ர்களுக்கு புத்தி சொல்வதுடன் அவர்களை ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.

அங்கு உடல் ஊனமுற்றவர்கள் தங்கள் ஊனத்தை மறந்து சந்தோஷமாக தங்களால் முடிந்த வேலையை செய்து வருவதைக் காண்கின்றனர்.அவர்கள் சாதனைகளைப் பார்த்து விட்டு...அவர்களும் சாதனை இளைஞர்களாக மாற வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.

மரகதமணி இசையில், "அட யாரிங்கே மனிதன்" "கம்பங்காடே கம்பங்காடே" நாடோடி ,மன்னர்களே, நீ ஆண்டவனா, சிறகில்லை ஆகிய பாடல்கள் ஹிட்.

பாலசந்தரின் வெற்றிப் பட வரிசையில் இதற்கும் இடமுண்டு.

இப்படத்திற்கு சிறந்த இயக்கிநருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

இதே ஆண்டு வந்த மற்றொரு படம் "dilon ka rista" 

Thursday, January 29, 2015

32- அழகனும்...ஒரு வீடு இரு வாசலும்

       


1990 ஆம் ஆண்டு வந்த படம்.

ஒரு வீடு, இரு வாசல்..

படத்தின் பெயரே சொல்லிவிடுமே...ஒரே திரைப்படத்தில்..இரு வேறு, வேறு கதைகள்.

கணேஷ், குமரேஷ் இரு வயலின் வித்வான்களும் நடித்தனர்.யாமினி என்ற நடிகையும் நடித்தார்.அனுராதா ரமணனின் கதையைத் தழுவியது இது.திரைக்கதை, இயக்கம் பாலசந்தர்.

அடுத்தது துணை நடிகர்கள் பற்றியது.ஆணாதிக்க சமுதாயத்தின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லப்பட்டது.இசை வி.எஸ்.நரசிம்மன்

அடுத்து வந்த படம் அழகன்

அழகப்பன் ஒரு உணவு விடுதி நடத்தி வருபவன்.நடுத்தர வயது.அவனுக்கு நான்குக் குழந்தைகள்.கல்லூரி மாணவியான ஸ்வப்னா அழகப்பனிடம் காதல் கொள்கிறாள்.ஆனால், இருவருக்குமிடையே உள்ள வயது வித்தியாசத்தைச் சொல்லி அழகப்பன் அவளுக்கு அறிவுரைச் சொல்கிறான்.படிக்காத அழகப்பன் ஒரு டுடோரியல் காலேஜில் படிக்கிறான்.அங்கு ஆசிரியை கண்மணி.அவனை விரும்புகிறாள்.அவளையும் மறுக்கிறான் அவன்.பிரியா ரஞ்சன் என்னும் பரதநாட்டியப் பெண், அழகப்பனை விரும்புகிறாள்.அழகப்பனும் அவளை விரும்பினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ தடுக்கிறது.

இதனிடையே அழகப்பனின் கார் ஓட்டுநர் மூலம் குழந்தைகள் அவனுடையவை அல்ல, அவனது வளர்ப்புக் குழந்தைகள் எனத் தெரிய வருகிறது.அழகப்பனின் தந்தைப் பாசம் அறிந்து கொண்ட ஸ்வப்னா தானும் அழகப்பனை அப்பா என அழைப்பதுடன்..மற்ற நான்கு குழந்தைகளுடன் சேர்ந்து அழகப்பனையும், பிரியா ரஞ்சனையும் தொலைபேசியில் பேச வைக்கிறாள்.

இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

அழகப்பனாக மம்மூட்டி,பிரியா ரஞ்சனாக பானுப்பிரியா,ஸ்வப்னாவாக மதுபாலா, கண்மணியாக கீதா மற்றும் ஓட்டுநராக பப்லு பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

கேசி ஃபிலிம்ஸ் கோவை செழியன் தயாரிப்பு.

மரகதமணி இசையில்

சங்கீத ஸ்வரங்கள் (எஸ்,பி.பி., சந்தியா),சாதி மல்லிப் பூச்சரமே (எஸ்.பி.பி) மழையும் நீயே (எஸ்.பி .பி),துடிக்குதடி நெஞ்சம் தெம்மாங்கு பாட(எஸ்.பி.பி, சித்ரா),தாதிதோம் (சித்ரா) ஆகிய பாடல்கள் ஹிட்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சி இரவு முழுதும் எடுக்கப்பட்டது.

Wednesday, January 28, 2015

31-புதுப்புது அர்த்தங்கள்

                 

மணிபாரதி ஒரு பிரபலமான மெல்லிசைப்பாடகன்.அவனது மனைவி கௌரி.தன் கணவன் தனக்கு மட்டுமே உரியவன் என்று அதீத அன்பு கொண்டவள் கணவன் மீது. ஆனால் அந்த எண்ணமே கணவனின் பெண்ரசிகைகளைப் பார்க்கையில் சந்தேகத்தையும் ஏற்பட வைக்கிறது.அதற்கேற்றாற் போல அவளது தாயும் அவ்வப்போது சந்தேகத்தி உண்டாக்கிறாள் கௌரியின் மனதில்.இவர்களுடைய அதிகாரம்.சந்தேகம்..ஆகியவற்றை பொறுக்கமுடியாமல் மணிபாரதி வீட்டைவிட்டு ஓடுகிறான்.

வடக்கே போய்..ஒரு உணவகத்தில் வேலை செய்கிறான்.

அதே நேரம் ஜோதி என்னும் பெண் ஒருத்தி, தன் கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

கோவாவில், மணீபாரதியும், ஜோதியும் சந்திக்கின்றனர்.அவர்களிடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.அங்கு வயதான ஒரு மலையாளி தம்பதியினரை சந்திக்கின்றனர்.அவர்களிடையே இருக்கும் அந்நியாந்நியமும், காதலும் இவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனிடையே, மணிபாரதியின் செயலாளரிடமிருந்து மணிபாரதிக்கு, கௌரி உடல்நலமில்லாமல் இருப்பதாகச் செய்தி கிடைக்கிறது.உடனே, அவன், ஜோதியுடன் கௌரியைப் பார்க்க வருகிறான்.ஆனால் ஜோதியை கௌரி பார்க்க விரும்பவில்லை.மணிபாரதி அதற்காக கௌரியைக் கோபிக்க, அவள் அவனிடம் இருந்து விவாகரத்து கோருகிறாள்.பின் கௌரி தான் ஒரு கிரிக்கெட் வீரனை மணக்க முடிவெடுக்கிறாள். ஆனால், அவனோ திருமணமானவன் எனக் கூறி யமுனா என்ற பெண் திருமண மண்டபத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால் உடல்நலம் பாதிக்கப் பட்ட கௌரியைப் பார்க்க மணிபாரதி வருகிறான். ஜோதியை, மணிபாரதி மணமுடிக்க இருப்பதை அறிந்த ஜோதியின் கணவனும் அவளைத் தேடி வருகிறான்.அப்போதுதான் ஜோதி, தன் கணவன் தன்னை தன் உயிரினும் மேலாக நேசிப்பதை உணருகிறாள்.

கௌரியும் மனம் மாறி மணீபாரதியுடன் இணைகிறாள்.

மணிபாரதியாக ரஹ்மானும், ஜோதியாக சித்தாராவும், கௌரியாக கீதாவும், கௌரியின் அம்மாவாக ஜெயசித்ராவும், மணிபாரதியின் செயலராக விவேக்கும் நடித்தனர்.வயதான தம்பதிகள் பாத்திரத்தில் பூர்ணம் விஸ்வநாதனும், சௌகார் ஜானகியும் நடித்தனர்.இளையராஜாவும் ஒரு பாடல் காட்சியில் வருவார்.

இளையராஜா இசையில்..


எடுத்து நான் விடவா..._ எஸ்.பி.பி., இளையராஜா
எல்லோரும் மாவாட்ட-எஸ்.பி.பி.,ஷைலஜா
குவாயூரப்பா   - எஸ்.பி.பி., சித்ரா
கல்யாணமாலை -1 -இளையராஜா, எஸ்.பி.பி.,
கல்யாணமாலை-2 - எஸ்.பி.பி.,
கேளடி கண்மனி  - எஸ்.பி.பி.

ஆகியோர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை.

சிறந்த இயக்குநர் என ஃபில்ம் ஃபேர் விருதும்
தமிழ் மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் பாலசந்தருக்குக் கிடைத்தது.

1989ஆம் ஆண்டு வந்த் கேபியின் படம் இது.

Tuesday, January 27, 2015

30 - உன்னால் முடியும் தம்பி

                           
1988ல் வந்த படம் ருத்ரவீணை.கதை, இயக்கம் கேபி.சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர்.இளையராஜா இசை.

இப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.

சிறந்த படத்திற்கான தேசிய ஒற்றுமைக்கான நர்கிஸ் (தேசிய)விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது இளையராஜாவிற்கு
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு
ஆந்திர மாநில சிறந்த நடிகருக்கான நந்தி விருது சிரஞ்சீவிக்குக் கிடைத்தது.
தவிர்த்து 12 ஆவது உலக ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது.

இப்படம் தமிழில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் அதே ஆண்டு வந்தது.

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை பிரபல கர்நாடக இசைக்கலைஞன்.அவருக்கு இரண்டு மகன்கள்.மூத்த மகன் (பிரசாத் பாபு) வாய் பேச முடியாதவன்.ஆகவே நாதஸ்வரம் வாசிக்கக் கற்றுக் கொண்டான்.இளைய மகன் உதயமூர்த்தி (கமல்ஹாசன்) இளம் வயதில் உருப்படியாய் எந்த வேலையும் செய்யாமல் பணக்காரத் திமிரில் இருப்பவன்.ஒருநாள் அவன் கண் தெரியாத பிச்சைக்காரப் பெண்ணிற்கு உதவி செய்யாமல் போவதைப் பார்த்து, ஒருவர் அப்பெண்ணிற்கு உதவுகிறார்.பின், உதயமூர்த்தியிடம், இது போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என அறிவுரை சொல்கிறார்.

வளர்ந்ததும் உதயமூர்த்தி வீட்டிற்கு உபயோகமற்றவனாய் இருப்பதைக் கண்டு தந்தை அவனைக் கடுமையாகக் கண்டிக்கிறார்.அதனால் மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொள்வது போல நடிக்கிறான்.உதயமூர்த்தியின் அண்ணிக்கோ, தான் உதயமூர்த்தியை சரியாக வளர்க்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகிறது.இதைக்கண்ட உதயமூர்த்தி மனம் மாறி, தந்தையிடம் இசை பயில ஒப்பு கொள்கிறான்.

ஒருநாள் உதயமூர்த்தி அரசு அலுவலகம் ஒன்றில் ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்த லலித கமலம் (சீதா) என்ற பெண் தன் விண்ணப்பத்தில் அவள் ஜாதி, மதத்தைக் குறிப்பிடாததால் மறுக்கப் பட்டதற்காக போராடுவதைப் பார்க்கிறான்.அப்பெண்ணின் தைரியம் உதயமூர்த்தியை அவளிடம் ஈர்க்கிறது.அவன் அவளை விரும்ப ஆரம்பிக்கிறான்.ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலைக் கேட்டவன் தன் தந்தையிடம் இசைப் பயிலுவதை நிறுத்துகிறான்.தந்தையும் வேறு ஒரு மாணவனைத் தேர்ந்தெடுக்கிறார்.இதனால் தந்தைக்கும், மகனுக்கும் சண்டை வருகிறது.தந்தை, "அவன் சமூக அவலங்களைத் தீர்க்கட்டும்.அவனால் ஒரு பாடகனாக ஆக முடியாது" என்கிறார் தீர்மானமாக.

வேறு ஒரு சமயத்தில், இறக்கும் நிலையில் உள்ள ஒருவனுக்கு, தன் தந்தை உதவாவது கண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

குடித்துவிட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பல குடும்பங்களைப் பார்க்கிறான்.குடிக்க வேண்டாம் என்று அவன் போதிப்பதை அவர்கள் கேட்கவில்லை.அதனால் அவர்கள் வீட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறான். அவர்கள் மதுக்கடையை அடித்து நொறுக்குகின்றனர்."லலித கமலத்தை அவன் மணக்கக் கூடாது. அதற்கு அவன் சம்மதித்தால், தாங்கள் குடியை விடுவதாக குடிமக்கள் கூற ,அதற்கு
சம்மதிக்கிறான் உதயமூர்த்தி.. அதனால் லலித கமலமும், அவனும் சேர்ந்து, அம்மக்களுக்காக "அமைதிப் புரட்சி இயக்கம்" ஆரம்பிக்கின்றனர்.

உதயமூர்த்தியின் புகழ் பரவுகிறது.

அவன் கதையை ஒரு எம்.பி., (வி.கே.ராமசாமி) கேட்பதைப் போல கதை ஆரம்பிக்கிறது.

தன் மகன் அவன் நினைத்ததை முடித்தது கண்டு மார்த்தாண்டம் பிள்ளை மகிழ்வதுடன், லலித கமலத்தை அவனுக்கு மணமுடிக்கிறார்.மேலும்..மார்த்தாண்டத்தின் மகன் அல்ல உதயமூர்த்தி, உதயமூர்த்தியின் தந்தை மார்த்தாண்டம் என மகிழ்கிறார்.

இளையராஜா இசை அமைக்க,"என்ன சமையலோ; (எஸ்.பி.பி.,சித்ரா, சுனந்தா), புஞ்சை உண்டு (எஸ்.பி.பி), உன்னால் முடியும் தம்பி (எஸ்.பி.பி.,) ஆகிய பாடல்கள் ஹிட்.

பிரபல சமுக சேவகர் எம்.எஸ்.உதயமூர்த்தி, பாலசந்தரின் கல்லூரித் தோழர்.அவரது "உன்னால் முடியும் நம்பு" என்ற சொற்றடரையே சற்று மாற்றி 'உன்னால் முடியும் தம்பி" என்ற பெயரை படத்திற்கு வைத்ததுடன், படத்தின் நாயகனுக்கும் உதயமூர்த்தி என்று பெயரிட்டது இயக்குநரின் சிறந்த பண்புக்கு எடுத்துக் காட்டு எனலாம்.

Monday, January 26, 2015

29-மனதில் உறுதி வேண்டும்

                 

பாலசந்தரின் கதை வசனம் இயக்கத்தில் 1987ல் வெளிவந்த படம் "மனதில் உறுதி வேண்டும்"

சுஹாசினி ஒரு நர்ஸாக வந்து, தன் அருமையான நடிப்பால் மக்களைக் கவர்ந்த படம் எனலாம்.வீட்டிலுள்ள எட்டு அங்கத்தினர்களைக் காக்கும் பொறுப்பு நந்தினிக்கு.
அவள் வாழ்க்கைப் பாதையில் எவ்வளவு இடையூறுகள்?

கணவனுடன் விவாகரத்து,தம்பியின் இழப்பு,நோய்வாய்ப்பட்ட சகோதரி, காதல் தோல்வி, தனது கிட்னியைத் தானமாகக் கொடுக்க வேண்டிய நிலை.எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன்.


கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத திரைப்படத்துறையில்...பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களால் எதையும் செய்ய முடியும், எதையும் சாதிக்க முடியும் என தன் படங்களில் சொன்னவர் கேபி மட்டுமே! அதே சமயத்தில் ஆணாதிக்கத்திற்கும் பெண்கள் எப்படி பலியாகின்றனர் என்பதையும் சொன்னது அவரது படங்கள்.

விவேக், இப்படத்தின் மூலம்தான் நந்தினியின் தம்பியாக அறிமுகமானார்.

நந்தினியின் மற்றொரு சகோதரனான ரமேஷ் அரவிந்த் பாத்திரம் தாக்கம் மிக்கது.அக்கதாபாத்திரம் மூலம் ஒரு கட்சியில் அரசியல்வாதிகளுக்கு, கடைசிவரை ஒரு அடிமட்டத் தொண்டன் எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்புக ளுடன் இருக்கிறான் என்பதைச் சொல்வார்.

தன் தலைவன் பற்றி தம்பி விவேக் கூற அவரை கொல்லவே முயல்வார் ரமேஷ் அரவிந்த்.தலைவன் கைது என்ற செய்தி கேட்டதும் தீக்குளித்து இறப்பார்.

இப்படத்தில் நர்ஸ்களின் சேவைகளை உயர்வாக சித்தரிப்பதுடன்..நந்தினியின் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மனதில் உறுதி வேண்டும் என்று காட்சியில் வைத்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், தலைமை மருத்துவராக திரையில் அறிமுகம் ஆன படம்.வாழ்வில் ஏற்பட்ட துயரை மறந்து கர்நாடக சங்கீதம் பாடியபடியே உள்ள நகைச்சுவைப் பாத்திரம்.

ரஜினிகாந்த்,சத்யராஜ், விஜய்காந்த் ஆகியோர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவது சிறப்பு.

இளையராஜா இசை. மனதில் உறுதி வேண்டும், கண்ணின் மணியே,கண்ணா வருவாயா ஆகிய பாடல்கள் ஹிட்.

Sunday, January 25, 2015

28-புன்னகை மன்னன்



1986 ஆம் ஆண்டு வந்த மற்றொரு வெற்றி படம் "புன்னகை மன்னன்".பாலசந்தர் கதை, இயக்கம்.இப்படம் பின் "டேன்ஸ் மாஸ்டர்" என தெலுங்கிலும், "சாச்சா சேப்ளின்" என்ற பெயரில் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சேதுவும், நந்தினியும் காதலர்கள்.சேது ஏழை என்பதால் ரஞ்சினியின் பெற்றோர் இவர்கள் காதலை எதிர்க்கின்றனர்.ஆகவே அவர்கள் இருவரும் மலையுச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.ஆனால் உச்சியில் இருந்து விழும் போது, சேது, ஒரு மரக்கிளையில் மாட்டிக் கொண்டு உயிர் பிழைக்கிறான்.ஆனால் ரஞ்சினி உயிர் இழக்கிறாள்.தற்கொலை செய்து கொள்ள முயன்றக்  குற்றத்திற்காக சேதுவிற்கு ஓராண்டு தண்டனைக் கிடைக்கிரது.

சிறையிலிருந்து வெளியே வந்த சேது, முதிர்கன்னியான பத்மினி நடத்தும் நடனப்பள்ளியில் டேன்ஸ் மாஸ்டராக சேர்கிறான்.ஒருநாள் ரஞ்சினி இறந்த இடத்திற்கு அவன் செல்லும் போது அங்கு மாலினி என்ற இலங்கைப் பெண் , பரீட்சையில் தோற்றதற்காக தற்கொலை செய்து கொள்ள வர..அவளைக் காப்பாற்றுவதுடன் அறிவுரையும் சொல்கிறான் சேது.

பின், அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கிறது.ஆனால் சேது அவளை விட்டு விலகியேச் செல்கிறான்.அப்படி ஒருநாள் மாலினி சேதுவின் சித்தப்பா  சாப்ளின் செல்லப்பாவைப் பார்க்கிறாள்.காதல் தோல்வியால் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.ஆனாலும், அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருந்ததால் மாலினி அவரை அடிக்கடி சந்திக்கிறாள்.இதனால் சேதுவிற்கும் அவள் மீது கோபம் உண்டாகிறது.

பின்,சாப்ளின் காதல் தோல்வி பற்றி அறிந்த சேது..பத்மினியை, சாப்ளினுக்கு மணமுடிக்கிறான்.சேது,மாலினி காதலை அறிந்த சேப்ளின் அவர்களுக்கு மணமுடிக்கத் தீர்மானிக்கிறார்.மாலினியின் பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொள்கின்றனர்.சேது-மாலினி நிச்சயதார்த்தம் அன்று சேதுவை பழிவாங்க ரஞ்சினியின் தந்தை ஒரு கூடை ஆப்பிளை பரிசாக அளிக்கிறார்.அந்தக் கூடையை சேதுவின் தந்தை சாப்ளின் காரில் வைக்க, சேதுவும், மாலினியும் அக்காரில் மலையுச்சிக்குச் செல்கின்றனர்.ஆனால், ஆப்பிள் கூடையில், ரஞ்சினியின் தந்தை "பாம்" வைத்துள்ளதை அறிந்த சாப்ளின் அவர்களை துரத்த...அதற்குள் பாம் வெடித்து சேதுவும், மாலினியும் உயிர் இழக்கின்றனர்.

இளையராஜா இசைக்கு, பாடல்களை வைரமுத்து எழுதினார்.கீழ்கண்ட பாடல்கள் சூபர்ஹிட்

என்ன சத்தம் இந்த நேரம் - எஸ்,பி.பி.
காலகாலமாய் வாழும் - எஸ்.பி.பி., சித்ரா
சிங்களத்து சின்னக் குயிலே - எஸ்.பி.பி., சித்ரா
மாமாவுக்கு குடுமா குடுமா _ மலேசியா வாசுதேவன்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்- சித்ரா
வான் மேகம் பூப் பூவாய்- சித்ரா



சேதுவாகவும், சேப்ளின் செல்லப்பாவாகவும் கமல் ஹாசன், ரஞ்சினியாக ரேகா, மாலினி யாக ரேவதி, பத்மினியாக ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர். பட வெள்ளிவிழா கொண்டாடியது.

இதே ஆண்டு,மணியனின் கதையில் பாலசந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கிறேன்  "sundara swapnagalu" என்ற பெயரில் ரமெஷ் அரவிந்த் நடிக்க கன்னடத்தில் வெளியானது.

Saturday, January 24, 2015

27- நாசரின் அறிமுகம்



1985ல் வெளீயான மற்றொரு படம் "கல்யாண அகதிகள்".கவிதாலயா தயாரிப்பு.

ஆறு பெண் நண்பர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும், பாலியல் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, ஜாதிப்பிரச்னை இப்படி ஏதோ ஒரு காரணத்தால் மணவாழ்வு பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் "கல்யாண அகதிகள்" என்ற பெயரில் இசைக் குழு ஒன்று அமைத்து..பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு உதவுகின்றனர்.

இவர்களுடன் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்ட அம்முலு என்ற பெண்ணும் இணைகிறாள்.

அவரவர் வாழ்வில் ஏற்படும் திருப்புமுனைகள் அவர்களுக்கு, வாழ்க்கை என்றால் என்ன என்றும், உண்மைக் காதலையும் புரியவைக்கின்றன.

சரிதா, ஒய்.விஜயா, சீமா ஆகியோர் நடிக்க, நாசர்...நாசர் முகம்மது என்ற பெயரில் இப்படத்தில் அறிமுகமானார்.

வைரமுத்து பாடல்கள் எழுத வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.

தவிர்த்து..இவ்வாண்டு வந்த மற்றொரு படம்.."mugila mallige" என்ற கன்னடப் படம்.இது தாமரை நெஞ்சம் படத்தின் ரீமேக்.ஸ்ரீநாத், சரிதா நடித்திருந்தனர்.கதை, இயக்கம் கேபி ஆவார்.

26-சிந்து பைரவி

                       

1985 ல் வந்த இயக்குநரின் மாபெரும் வெற்றிபடம் "சிந்து பைரவி".

ஜே.கே.பாலகணபதி..மக்களால் ஜேகேபி என்று அழைக்கப்பட்ட மாபெரும் இசைக் கலைஞன் அவன்.ஆனால் அவன் மனைவி பைரவிக்கோ சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவு ஞானம்.அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஜேகேபியின் குழுவில் மிருதங்கம் வாசிப்பவர் குருமூர்த்தி தம்பூரா போடுபவர் கஜபதி.ஒருநாள் குருமூர்த்தி கச்சேரியில் குடித்துவிட்டு மிருதங்கம் வாசிக்க, அதைக் கண்ட ஜேகேபி அவரை வாசிக்க வேண்டாம் என திருப்பி அனுப்பிவிட்டு..மிருதங்கமே இல்லாமல் பாடினார்.குடிப்பழக்கத்தை அறவே வெறுப்பவர் ஜேகேபி.

ஒரு பள்ளியில் பாட்டு வாத்தியாராக வேலையில் இருப்பவர் சிந்து.அவர் ஒருநாள் ஜேகேபி கச்சேரியைக் கேட்க வருகிறாள்.தியாகராஜர் கீர்த்தனையை ஜேகேபி தெலுங்கில் பாட..மக்கள் அதை ரசிக்காமல் பேசிக்கொண்டிருக்கு, சிந்து எழுந்திருந்து மக்களுக்கு புரியும் வண்ணம் தமிழில் பாடச்சொல்ல, கோபம் மேலிட ஜேகேபி அவளையேப் பாடச் சொல்கிறார்.அவளும் மேடை ஏறித் தமிழ்ப் பாட்டொன்று பாட கைத்தட்டல் அரங்கையே அதிர வைக்கிறது.இந்நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் நட்புத் தொடர்கிறது.

பொய் பேசுவதையேத் தொழிலாகக் கொண்ட கஜபதி, ஜேகேபி, சிந்துவிற்குமான நட்பை , கொச்சைப்படுத்தி பைரவியிடம் சொல்கிறான்.இதனிடையே சிந்துவும் ஜேகேபியை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.ஒருநாள் ஜேகேபி, சிந்துவின் வீட்டிற்கு சென்றுவருவதை பைரவி பார்த்துவிடுகிறாள்.சிந்துவும் கருவுற்றிருக்கிறாள்.நிலைமை மோசமாவதை அறிந்த சிந்து ஊரைவிட்டுச் செல்கிறாள்.அவளை மறக்கமுடியாமல் ஜேகேபி குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். கச்சேரிக்கு குடித்துவிட்டு வருகிறார்,பாதியிலே அக்கச்சேரி நிற்கிறது.மக்கள், சபாக்கள் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறார், சிந்துவை, ஜேகேபிக்கு மணமுடிக்கவும் பைரவியும் தயாராகிறாள். ஜேகேபி குடியை விட வேண்டும், பழையமாதிரி கச்சேரி செய்தால் தான் வருவதாகக் கூறிய சிந்து..அதன்படியே கச்சேரிக்கு வருகிறாள். பின்னர், ஜேகேபி, பைரவிக்கு ஒரு பரிசை அளிக்கிறாள்.அந்தப் பரிசு அவளுக்கு, ஜேகேபிக்கும் பிறந்த குழந்தை. அதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் வாழ்விலிருந்து விலகுகிறாள்.

சிந்துவின் தாய் யார்..என்பதற்கான ஒரு கிளைக்கதையும் படத்தில் உண்டு.

ஜேகேபியாக சிவகுமார், சிந்துவாக சுஹாசினி இருவரும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டனர்.பைரவியாக சுலக்க்ஷணா, கஜபதியாக ஜனகராஜ், குருமூர்த்தியாக டில்லி கனேஷ், சிந்துவின் தாயாக மணிமாலா மற்றும் ராகவேந்தர்,சிவசந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரகுநாத்ரெட்டி ஒளிப்பதிவு.

இப்படத்திற்கான இசை இளையராஜா..    அனைத்துபாடல்களும் இன்றும் தேனாய் இனிப்பவை.

மகாகணபதிம்   - கே,ஜே,ஜேசுதாஸ்
மரி மரி நின்னே - கே.ஜே.ஜேசுதாஸ்
பூமாலை வாங்கி வந்தேன்" _ கேஜே ஜேசுதாஸ்
மோகம் என்னும் - கேஜே ஜேசுதாஸ்
கலைவாணியே - கே ஜே ஜேசுதாஸ்
தண்ணீ தொட்டி_ கே ஜே ஜேசுதாஸ்
நான் ஒரு சிந்து _ சித்ரா
பாடறியேன் -சித்ரா

இப்படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்து, "பாடறியேன் பாடலில்"

என்னையேப் பாரு எத்தனைப் பேரு

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு

என எழுதியிருந்தார்...

அதை பாலசந்தர்..

"தமிழ்ப் பாட்டும் பாடு' என மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டாராம்.

"ப்" மாற்றி "ம்" போட்டவுடன் அர்த்தம் மாறுகிறது பாருங்கள்.

இயக்குநர் எப்படிப்பட்ட மேதை?!

இப்படத்தில் நடித்த சுகாசினிக்கு சிறந்த நடிக்கான தேசிய விருதும், இசை அமைத்த இளையராஜாவிற்கு..இசைக்கான தேசிய விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் கிடைத்தன.
சிறந்த நடிகருக்கான விருதை சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் சிவகுமார் இழந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படம்.

2003ல்..அதாவது சிந்து பைரவி படம் வெளிவந்து 18 ஆண்டுகள் கழித்து சிந்துபைரவியின் பாகம் இரண்டை எடுக்க பாலசந்தர் விரும்பினார்.ஆனால் இம்முறை தொலைக்காட்சித் தொடராக.ஆனால், சிவகுமார், ஜேகேபியாக நடிக்க இயலாத நிலையில், சுஹாசினி சிந்துவாக நடிக்கத் தயாராய் இருந்தும்...அவர்கள் இருவரையும் மறக்காத மக்கள் சுஹாசினியுடன், வேறு ஒருவரை ஜேகேபியாக ஒப்புக்கொள்வார்களா என்ற எண்ணம் கேபிக்கு இருந்தமையால்..சுஹாசினியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

ஆகவே சிந்து பைரவி -2 ஐ "சகானா" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக ஆக்கினார்

அதே நேரம், திறமையும், அனுபவமும் மிக்க நடிகர்...26 ஆண்டுகளுக்கு முன் தன்னால் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை ஜேகேபியாக நடிக்க வைத்தார்.அவருக்கு ஜோடி பைரவியாக திரைப்படத்தில் நடித்த சுலக்க்ஷணாவையே தொடரிலும் நடிக்க வைத்தார்.பிரபல கர்நாடக இசைப் பாடகரான அனுராதா கிருஷ்ணமூர்த்தியை சிந்து வேடத்தில் அறிமுகப் படுத்தினார்.

இத்தொடரில், பைரவிக்கு, சிந்து குழந்தையை விட்டுச் சென்றதும்.மற்றொரு குழந்தை பிறப்பது போலவும்..இப்போது ஜேகேபி, பைரவி க்கு இரண்டு பதின்மவயது குழந்தைகள் இருப்பதுப் போல கதையமைப்பு.மேலும் ஜேகேபியும் பைரவியும் இப்போது ஒற்றுமையாய் உள்ளது போலவும் அமைக்கப்பட்டது.

திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இத்தொடருக்கும் கிடைத்தது.

ராஜேஷ் வைத்யா இதற்கு இசை அமைக்க பாலமுரளிகிருஷ்ணாவும், சுதா ரகுநாதனும் பாடல்களைப் பாடினர்.

Thursday, January 22, 2015

25- பாலசந்தருக்குப் பிடித்தப் படம்


1983 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தின் ரீமேக் கன்னடத்தில் "Benkiyalli avalita hoovu" என்ற பெயரில் வந்தது.இப்படத்தில் சுகாசினி , தமிழில் சுஜாதா செய்த பாத்திரத்தில் நடித்தார்.இப்படத்தின் இயக்கத்தை பாலசந்தரே கவனித்துக் கொண்டார்.சுகாசினிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

ஹிந்தியில் , வறுமையின் நிறம் சிவப்பு, "zara si zindagi" என்ற பெயரில் வந்தது.கமல் ஹாசன், அனிதா ராஜ் நடித்தனர்.லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் இசை அமைத்திருந்தார். இயக்கம் கேபி.

கோகிலாம்மா என்ற தெலுங்கு படம், சரிதா நடிப்பில், கேபி இயக்கத்தில் வந்தது.இப்படத்திற்கு  சிரந்த திரைக்கதைக்கான நந்தி விருதும், ஸ்பெஷல் ஜூரி விருதும் கிடைத்தது.

கலைவாணி புரடக்க்ஷன் சார்பில், தமிழ் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்த, கிரேசி மோகன் எழுதிய 'மேரேஜ் மேட் இன் சலூன்' என்ற நகைச்சுவை நாடகத்தை, "பொய்க்கால் குதிரை" என்ற பெயரில் படமாக்கினார் பாலசந்தர்.

இப்படத்தில் விஜி,ரவீந்திரன்,ராதாரவி ஆகியோருடன், பாடலாசிரியரான வாலியும் முதன்முறையாக நடிகன் ஆனார்.பந்தயம் சம்பந்தம் என்னும் பாத்திரத்தில் கமல்ஹாசனின் சிறப்புத் தோற்றம் இப்படத்தில்.

1984 ஆம் ஆண்டு "கவிதாலயா" சார்பில், ராஜம் பாலசந்தர்,புஷ்பா கந்தசாமி தயாரிக்க பாலசந்தர் கதை, திரைக்கதை, வசனம்,இயக்கத்தில் வந்த படம் "அச்சமில்லை அச்சமில்லை"

தேன்மொழி , ஒரு கிராமத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியான தந்தையுடன் வசித்து வருபவள்.அதே கிராமத்தில், மக்கள் நலனே..தன் உயிர்மூச்சாய் கொண்டு செயல் படும் உலகநாதன் என்பரோடு அவளுக்கு பழக்கம் ஏற்படுகிறது.ஒரு சுதந்திர நாள் அன்று இருவரும் மணக்கின்றனர்.

தேர்தல் வரும் நேரம்.. சில கட்சிகள் உலகநாதனை தன் கட்சிக்கு இழுக்கப் பார்க்கின்றனர்.மந்திரி பதவியை அவனுக்குத் தருவதாக ஒரு கட்சி வாக்குறுதியும் தருகிறது.இதனிடையே, கருவுற்றிருந்த தேன்மொழி பேறுகாலத்திற்கு தந்தையின் இல்லம் வருகிறாள்.அங்கு அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது.

இந்நிலையில், உலகநாதன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறான்.ஆனால்..எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காத நிலை.ஆகவே உலகநாதனிடம் கட்சிகள் பேரம் பேசுகின்றன.குழ்ந்தையுடன், உலகநாதன் இல்லம் வந்த தேன்மொழி, உலகநாதனின் நடவடிக்கைகளில் மாறுதல் காண்கிறாள்.உலகநாதனும், அலங்காரி என்னும் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருகிறான்.அலங்காரமும், அவளது தாயும் அந்த வீட்டை தன் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.இதனால், தேன்மொழி வீட்டை விட்டுச் செல்ல நேரிடுகிறது.

உலகனாதனின் செயல்கள் நாளடைவில் பொறுத்துக் கொள்ளும் எல்லையை மீறுகிறது.அவன், கிராமத்தில் ஜாதிக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த முயலுகிறான்.தேன்மொழி அவனை சந்தித்து அறிவுரைக் கூற..அரசியலில் கொலையெல்லாம் சர்வ சாதாரணம் என்கிறான்.

ஒரு சுதந்திர நாள் அன்று, காந்திஜியின் சிலை திறப்பு விழாவிற்கு வந்த உலகநாதனை, மாலை அணிவிக்க வருவது போல மேடை ஏறிய தேன்மொழி கொல்கிறாள்.

ராஜேஷ், உலகநாதனாகவும், சரிதா, தேன்மொழியாகவும் நடித்தனர்.குள்ளமான நடிகர் ஒருவரை நடிக்கவைத்து அவருக்கு "சுதந்திரம்" என்ற பெயரும் வைத்திருப்பார் இயக்குநர்(சுதந்திரம் வளரவில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவது போல இருக்கும்)

வி.எஸ்.நரசிம்மன் இசையில், எஸ்.பி.பி., சுசீலா பாடிய "ஆவாரம் பூவு" , கையிலே காசு, "ஓடுகிற தண்ணியிலே" (மலேசியா வாசுதேவன், சுசீலா) ஆகிய பாடல்கள் ஹிட்.

1985ல் நடந்த 10ஆவது உலக சினிமா விழாவில் இப்படம் திரையிடப் பட்டது.

ஆனந்தவிகடன் தனது விமரிசனத்தில், "சினிமாவை பொழுது போக்காக பயன்படுத்துபவரிடையே,சமுக அவலங்களை தோலுரித்து காட்டும் ஆயுதமாக பாலசந்தர் உபயோகித்துள்ளார்" என்ற பொருள் பட விமரிசித்திருந்தது.

பாலசந்தரும் பத்திரிகை பேட்டி ஒன்றில், தான் எடுத்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று" என்று கூறினார்.

சிறந்த தமிழ்ப் படம் என தேசிய விருதும், ஃபிலிம் ஃபேரின் சிறந்த தமிழ்ப்பட விருதும்,சிறந்த தமிழ் இயக்குநர் விருந்தும், சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் இப்படம் பெற்றுத் தந்தது.

இதே ஆண்டு, அபூர்வ ராகங்கள் பாலசந்தரின் கதை, இயக்கத்தில், கமல், ஹேமமாலினி நடிக்க "Ek nai pahEli" என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது

"Eradu rekhegalu" என்ற பெயரில் கன்னடத்தில் இருகோடுகள்: கேபி இயக்கத்தில் வந்தது

24- கவிதாலயா



இதுநாள் வரை கலாகேந்திரா (கோவிந்தராஜன் மற்றும் துரைசாமி), ஸ்ரீ ஆண்டாள் ஃபிலிம்ஸ் (இராம அரங்கண்ணல்), பிரேமாலயா (வெங்கட்ராமன்) ஆகியோருக்கு அதிக அளவில் திரைப்படங்களை எழுதி இயக்கி வந்தார்  கேபி..தவிர்த்து..நண்பர்களான, திரு ஆலங்குடி சோமு,(பத்தாம் பசலி). சித்ராலயாவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாய் இருந்த சர்மா (நான்கு சுவர்கள்), ஏ.கே.வேலன் (நீர்க்குமிழி) ஆகியோருக்கும் படங்களை இயக்கினார் பாலசந்தர்.

1981ஆம் ஆண்டு, பாலசந்தர், ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோர் சேர்ந்து "கவிதாலயா" என்ற நிறுவனத்தைத் துவங்கினர்.பாலசந்தரின் படங்கள் "கவிதாலயா" தயாரிப்பில் வர ஆரம்பித்தன.

1982ல் அக்னி சாட்சி படம் வெளிவந்தது.இப்படத்தில் சிவகுமார், சரிதா ஆகியோர் நடித்தனர்.சரிதாவிற்கு, "SCHIZOPHRENIA" (எண்ணம். செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் கோளாறு).அதனால் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு.சரிதா இப்படத்தில் மிகவும் அருமையாய் நடித்திருந்தார்.இருந்தாலும், படம் சரியான அளவில் மக்களை சென்று அடையவில்லை எனலாம்.

இதே படம் , பல ஆண்டுகள் கழித்து திரைக்கு மீண்டும் வந்தபோது பெரும் வரவேற்பு இருந்தது. .இது இயக்குநரின் திறமை இல்லாமல் வேறென்ன. பத்து ஆண்டுகள் பிந்தைய நிகழ்வுகளை பத்து ஆண்டுகள் முன்னரே சொன்ன தீர்க்கதரிசி கேபி எனலாம்.

சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.

Wednesday, January 21, 2015

23- சிவசங்கரியின் நாவல்

                       
 

 வார இதழ் ஒன்றில் சிவசங்கரி எழுதிய நாவல் "47 நாட்கள்".அதை அதே பெயரில், சிரஞ்சீவி, ஜெயபிரதா,ரமாபிரபா,சரத்பாபு நடிக்க திரைப்படமாக்கினார் பாலசந்தர்.ஒரே நேரத்தில் தெலுங்கில் "47 ரோஜுலு" என்ற பெயரிலும் தயாரானது இப்படம்.தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

வைஷாலியின் வாழ்க்கைப் படமாக வர இருக்கிறது.அப்படத்தில் நடிக்க இருக்கும் சரிதா, வைஷாலியைக் காண வருகிறார்.ஆனால் யாரையும் பார்க்க விரும்பாத வைஷாலி கதவை அடைக்கிறாள்.அதனால் வைஷாலியின் சகோதரன் சரிதாவிற்கு வைஷாலியின் கதையைச் சொல்வது போல படம் ஆரம்பமாகிறது.

பிரான்ஸில் வசிக்கும் குமார், வைஷாலியை மணந்து பிரான்ஸிற்கு அழைத்துச் செல்கிறான்.ஆனால் அங்கு அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே மேல் மாடி ஒன்றில் அவன் முதல் மனைவி லூசி வசிக்கிறாள்.அவளிடம் வைஷாலியைத் தன் சகோதரி என அறிமுகப் படுத்துகிறான்.ஆனால் வைஷாலியிடமோ, லூசியை தன் சிநேகிதி என்கிறான்.ஒருகட்டத்தில் வைஷாலிக்கு, லூசி அவனின் முதல் மனைவிதான் எனத் தெரியவருகிறது.குமாருடன் வாழ வைஷாலி விரும்பவில்லை.ஆனால் பிரஞ்ச், ஆங்கிலம் ஏதும் அறியா வைஷாலி என்ன செய்வது என அறியாது கலங்குகிறாள்.குமாரோ, வைஷாலியை மிகவும் கொடுமைப் படுத்துகிறான்.அதை பிக்பாக்கெட் திருடியாக வரும் ரமாபிரபா பார்த்து குமாரைக் கடிந்துக் கொள்வதுடன், அவளை அந்த ஊரில் உள்ள ஷங்கர் என்ற மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள்.இதனிடையே வைஷாலி கருவுற்றிருப்பது தெரிகிறது.குமார் கருவை கலைக்கச் சொல்கிறான்.அவள் மறுக்கிறாள். இந்த விஷயமெல்லாம் லூசிக்குத் தெரியவர அவள் குமாரை விட்டுப் பிரிகிறாள்.ஷங்கரும் லூசியை இந்தியா அழைத்து வந்துவிடுகிறார்..

வைஷாலியின் கதையைக் கேட்ட சரிதா..அவள் ஏன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறாள்.

அதற்கு வைஷாலியோ, "பெண் என்றால் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?" என வினவுவதோடு, திரைப்படத்தில் மணமுடிப்பது போல காட்சி அமைத்தால் தனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை" என்கிறாள்.

வைஷாலியாக ஜெயபிரதாவும், குமாராக சிரஞ்சீவியும், டாக்டர் ஷங்கராக சரத்பாபுவும் நடித்திருந்தனர்.சரிதா...சரிதாவாகவே வந்தார்.

அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் நல்லவர்கள் போல நடித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சித்ரவதை செய்து துரத்திவிடுவது அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி ஆக இருந்தது.

இவ்வாண்டு வந்த மற்றொரு படம் 'எங்க ஊரு கண்ணகி" .இதில் சரிதா, சீமா, சரத்பாபு நடித்திருந்தனர்.

இவற்றைத் தவிர "akali raajyam" "adavaalu meeku joharulu""tholikodi koosindi"(நந்தி விருது பெற்ற படம்) ஆகிய 3 தெலுங்கு படங்களும், "ஏக் துஜே கேலியே" ஹிந்தி படமும் வந்தன.  

Tuesday, January 20, 2015

22-தண்ணீர் தண்ணீர்

                 

1981 ஆண்டு வெளியான தண்ணீர் தண்ணீர்..ஒரு திருப்புமுனை படமாய்த் திகழ்ந்தது.கோமல் சுவாமினாதன் அவர்களால் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.மிகவும் பாராட்டப் பட்ட இந்நாடகம் பாலசந்தர் கைவண்ணத்தில் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியையும், மக்களின் அமோக பாராட்டுதல்களையும் பெற்றது.

கோவில்பட்டியின் அருகில் உள்ள கிராமம் அத்திப்பட்டு.வானம் பார்த்த பூமி.குடிநீருக்கே மக்கள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து அரசியல்வாதிகளோ, அரசோ எவ்வளவு மனுக்களைக் கொடுத்தபோதும் , அவை வீணாகவே போடப்பட்டன.அந்த ஊர் மக்கள் அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாக ஆனது.

மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டுவர முயல்கின்றனர்.

இதனிடையே, பண்ணையார் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு , காவல்துறையால் தேடப்பட்டு வந்த ஒருவன்.கிராமத்தினுள் நுழைந்து, மக்களுக்கு பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர முயலுகிறான்.

அதுவரை, அத்திப்பட்டு பற்றி கவலைப்படாத அரசு அதிகாரிகள், மக்கள் சட்டத்திற்கு விரோதமாக மக்கள் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

கிராமங்களில் நிலவும் முதலாளித்துவம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி, அரசின் சிவப்புநாடாத்தனம் ஆகிய அனைத்தையும் தோலுரித்து காட்டப்படுகிறது இப்படம்.

சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கான தேசிய விருதையும் கேபிக்கு பெற்றுத் தந்த படம்.

சிறந்த தமிழ்ப்படம், மற்றும் சிறந்த தமிழ்ப்பட இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் கேபி பெற்றார்.

இப்படத்தில் சரிதா, ராதாரவி தவிர மற்ற பெரும்பாலான நடிகர்கள்..மேடையில் நடித்தவர்களே.கேபியின் நாடகப் பற்றிற்கு இதுவும் ஒரு சான்றாகச் சொல்லலாம்.

கதை, வசனத்தை கோமல் சுவாமினாதனை வைத்தே எழுதச் கொன்னது..இயக்குனரின் பெருந்தன்மை எனலாம்.

பாடல்கள் கண்ணதாசன், வைரமுத்து எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

கலாகேந்திரா தயாரிப்பான இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் பொறுப்பை கேபி ஏற்றார். 

Monday, January 19, 2015

21-தில்லுமுல்லு படமும் ரஜினியும்



ஹிந்தியில் 1979ஆம் ஆண்டு அமல்பாலேகர் நடிக்க ரிஷிகேஷ்முகர்ஜி இயக்கத்தில் வந்த "கோல்மால்" என்ற படத்தின் கதையே 1981ல் விசு வசனம் எழுத பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா தயாரிப்பில் வந்த  "தில்லுமுல்லு" ஆகும்

சந்திரன், அவரது குடும்ப நண்பர் சொல்ல...ஸ்ரீராமசந்திரமூர்த்தி நடத்தும் அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறார்.அவரிடம் நற்பண்புடையவராகவும்,ஆன்மீகவாதியாகவும் நடித்து நல்ல பெயர் எடுக்கிறார்.ஒருநாள் ராமசந்திர மூர்த்தி, சந்திரனை ஒரு ஃபுட்பால் மேட்சில் பார்க்கிறார்.சந்திரன் அவரிடம் அவர் பார்த்தது தன் தம்பி இந்திரனை என பொய் சொல்கிறார்.மேலும், தாங்கள் இரட்டையர்கள் என்றும் தன் சகோதரனுக்கு மீசை கிடையாது என்றும் கூறுகிறார்.

இதைக்கேட்ட ராமசந்திரமூர்த்தி, சந்திரன் மீது தான் பட்ட சந்தேகத்திற்கு வருத்தப்பட்டு, தன் சகோதரன் என சந்திரன் கூறிய இந்திரனை தன் மகள் சரோஜினிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டுகிறார்.சந்திரனும் ஒப்புக் கொள்கிறான்.  நாளடைவில் சரோஜினி அவனிடம் காதல் கொள்கிறாள்.இது விஷயமாக, மேலும் என்ன செய்வது என அறியாமல் சந்திரன் தன் நண்பரை (நாகேஷ்) ஆலோசனைக் கேட்கிறார்.

நல்ல நகைச்சுவைக் காட்சிகள்...இந்திரன் ,சந்திரன் என மாறி மாறி வருகையில் உருவாகி..நகைச்சுவை நடிப்பிலும் தான் சூப்பர் என ரஜினி நிரூபித்துள்ளார்.மாதவி சரோஜினியாக நடிக்கிறார். தேங்காய் ஸ்ரீனிவாசன் ராமசந்திரமூர்த்தியாக வந்து நகைக்கவைக்கிறார் தன் அனுபவமிக்க நடிப்பால்.

பாலசந்தர், ரஜினிக்கு கரடுமுரடான பாத்திரங்களிலேயே நடிக்க வைத்திருப்பதால்...உன்னாலும் நகைச்சுவைப் பாத்திரத்தில் பிரகாசிக்கமுடியும் எனச் சொல்லி ரஜினியை நடிக்கவைத்துள்ளார்.

கமல்ஹாசன் போலி வக்கீலாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

படம் வெற்றி பெற்றது.

சமிபத்தில் இப்படம் சிவா , கோவை சரளா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. 

Sunday, January 18, 2015

20- வறுமையின் நிறம் சிவப்பு

                             

பாலசந்தருக்கு சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டும், சிறந்த இயக்குநராக தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதையும் வாங்கிக் கொடுத்த ஆண்டு 1980.

படம்- வறுமையின் நிறம் சிவப்பு.பிரேமாலயா வெங்கட்ராமனுக்காக பலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்தப் படம்.

கமல்ஹாசன், ஸ்ரீதேவி,எஸ்.வி.சேகர், திலீப்..பூர்ணம் விஸ்வநாதன்,பிரதாப் போதன்,தேங்காய் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மூன்று படித்த வேலையில்லா இளைஞர்கள் பற்றிய படம்.

ரங்கனும் அவனது நண்பனும் தில்லியில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்.அவர்களுடன் தம்பு என்னும் நண்பனும் சேர்கிறான்.ரங்கன் நேர்மையானவன்.மனதில் சரி என நினைப்பதை "பட்"டென சொல்லிவிடுபவன்.மூன்று நண்பர்களுக்கும் வேலையில்லை.பலநாட்கள் உண்ண உணவும் இருப்பதில்லை.ஒருநாள் ரங்கனிடம் பொய் சொல்லி ,அவனிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்கிச் செல்பரை துரத்துகிறான் ரங்கன்.அவர் தேவியின் வீட்டினுள் நுழைகிறார்.தேவியின் தந்தை அவர்.குதிரைப் பந்தயத்தில் கலந்துக் கொள்ள பணத்திற்காக எந்த பொய்யையும் சொல்லக்கூடியவர்,தன் பெண் இறந்துவிட்டதாகக் கூறி ரங்கனிடம் பணத்தை வாங்கியுள்ளார்.அதை அறிந்த தேவி, ரங்கனுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கிறார்.இதன் மூலம் ரங்கனும், தேவியும் நண்பர்கள் ஆகின்றனர்.தேவி ஒரு நாடக நடிகை.அவள் ரங்கனின் மீது இரக்கப்பட்டு, நாடக இயக்குநரை ரங்கனுக்கு அறிமுகப் படுத்துகிறாள்.ஆனால்...அந்த இயக்குநரின் திறமை ரங்கனைக் கவரவில்லை.இதனிடையே நாடக இயக்குநர் தேவியை விரும்ப, தேவை ரங்கனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தால் அவனை மணப்பதாகக் கூற, ரங்கன் இதை அறிந்து கோபப்பட, தேவி, " தான்..ரங்கனையே விரும்புவதாகக் கூறுகிறாள்" இதனிடையே, பரணி என்னும் வாய்பேசமுடியா ஒரு பாத்திரம் இவர்களுக்கு உதவுகிறது.ரங்கனின் தந்தை மகனைத் தேடி தில்லி வர..மகன் ஒரு முடிதிருத்தும் கடையில் வேலை செய்வதைப் பார்க்கிறார்."இந்த வேலையில் தான் திருப்தியாக இருப்பதாய்" ரங்கன் கூறுகிறான்.ரங்கனின் தந்தை இதற்கும், ரங்கன் தேவியை மணப்பதற்கும் சம்மதிக்கிறார்.

ரங்கனின் நண்பன், ஒரு பணக்கார விதவையை மணக்கிறான்.தம்பு  பைத்தியக் காரனாக அலைகிறான்.

இப்படி பல சம்பவங்கள்,,பல முடிச்சுகள் கொண்ட கதையே வறுமையின் நிறம் சிவப்பு.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கீழ்கண்ட அனைத்து பாடலும் ஹிட்.

"சிப்பி இருக்குது" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி)
"தீர்த்தகரையினிலே" ( எஸ்.பி.பாலசுப்ரமனியம்)
"நல்லதோர் வீணை" (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
"பாட்டு ஒன்னு பாடு" (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

இந்த படம் 1981ல் கமல், ஸ்ரீதேவி நடிக்க "akali rajyam' என்ற பெயரில் தெலுங்கிலும், 1983ல் "Zara si zindaki' என்ற பெயரில் கமல், அனிதாராய் நடிக்க ஹிந்தியிலும் பாலசந்தர் இயக்கத்தில் வெளியானது.

Saturday, January 17, 2015

19- நூல்வேலி

                                     

தனது மகளைப் போல பாசம் காட்டி வளர்த்த இளம்பெண்ணைத் தாயாக்கிய கதை நூல்வேலி.

இப்படமும் 1979ல் வந்த..சர்ச்சைக்குரிய, பாலசந்தரின் கூரிய வசனங்களுடன் வந்த படம் எனலாம்.

துணைநடிகை ஒருவரின் அப்பாவி வெகுளிப் பெண் சரிதா.இவர்களது பக்கத்து வீட்டில் குடிவருகிறார் சரத்பாபு.அவரது மனைவி சுஜாதா.அவர் ஒரு எழுத்தாளர்.இவர்கள் வெளீயே செல்லும் போது இவர்களது குழந்தையுடன் விளையாடுவார் சரிதா.அப்பாவியான சரிதாவை தன் வீட்டில் சுதந்திரமாக வலம் வர அனுமதித்தனர் தம்பதிகள்.

சரிதாவின் தாயார் இறந்ததும்,ஆதரவின்றி இருக்கும் சரிதாவை தன் மகளைப் போல வளர்க்கிறார் சுஜாதா.சரத்பாபுவும் அவள் மீது பாசத்துடன் இருக்கிறார்.ஒருநாள் கொட்டும் மழையில் நனைந்தவாறே வருகிறார் சரிதா.மழையில் நனைந்த சரிதாவின் இளமை சரத்பாபுவின் காமத்தைத் தூண்ட, சரிதா ஒரு வெகுளி என்பதையும், தனது மகள் போன்றவள் என்பதையும் மறந்து வெறித்தீர்க்கிறார்,

இது சுஜாதாவிற்குத் தெரியவர அவர் தன் குழந்தையுடன் வெளியேறுகிறார்.சரிதா, குழந்தையைப் பெற்றுவிட்டு, அதை சரத்பாபுவிடமும், சுஜாதாவியமும் ஒப்படைத்துவிட்டு..அவர்கள் குடும்பத்தில் அமைதித் திரும்ப வேண்டுமென்றால் அது தனது மரணத்தால் மட்டுமே முடியும் என 9ஆம் மாடியில் இருந்து விழுந்து இறக்கிறாள்.

"படிச்சவங்க இல்லையா? அவங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்" என இப்படத்தில் பாலச்ந்தரின் வசனம் அக்காட்சிக்கு மிகவும் அருமையாய் இருக்கும்.

வெகுளிப் பெண்ணாக சரிதாவின் நடிப்பு சூப்பர்.தவிர்த்து சரத் பாபு. சுஜாதா ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்திருப்பர்.மௌலியும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பார்.

கமல் ஹாசன் சிறப்புத் தோற்றம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" என்ற கண்ணதாசன் பாடல் காலம் கடந்தும் நினைவை விட்டு அகலாதது.தவிர்த்து வாணிஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமனியம் பாடிய ''நானா பாடுவது நானா" பாடலும். எஸ்.பி.பி. தனித்து பாடிய "தேரோட்டம் " பாடலும் குறிப்பிடத்தக்கவை.

ஒரே சமயத்தில் இப்படம்"guppedu manasu" என்று தெலுங்கில் எடுக்கப்பட்டது.

பாலசந்தர் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் இதுவும் ஒன்று.

Friday, January 16, 2015

18-நினைத்தாலே இனிக்கும்

                             

1979ஆம் ஆண்டு வந்த இயக்குநரின் படங்கள்

நினைத்தாலே இனிக்கும்

Andamaina Anubavam (தெலுங்கு) (நினைத்தாலே இனிக்கும்)

நூல்வேலி

"guppedu manasu" (நூல்வேலி _ தெலுங்கு)

"Idi Katha kaadu" (அவர்கள்) தெலுங்கு) இதில் கமல்,ஜெயசுதா,சரிதா, சரத் பாபு நடித்தனர்.

"கழுகன்" (தப்புத்தாளங்கள் மலையாளம்)

நண்பர் வெங்கட்ராமனுக்கு, பிரேமாலயா சார்பில் இயக்குநர் கேபி இயக்கத்தில் வந்த படம் நினைத்தாலே இனிக்கும். சுஜாதா எழுதி இருந்த கதை.இப்படத்தின் பெரும் பகுதி சிங்கப்பூரிலேயே எடுக்கப்பட்டது.

சந்துரு ஒரு பாடகன்.அவனதி இசைக்குழு சிங்கப்பூர் செல்கிறது.அங்கிருக்கும் சந்துருவின் காதலி சோனா..நோய்வாய்ப் படுகிறாள்.துயரமான முடிவுடன் படம் முடியும்.இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம்.பாலசந்தர் பாணி படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்தது.எஸ்.வி.சேகர் இப்படம் மூலம் அறிமுகமானார்.சந்துருவாக கமலும், தீபக் என்னும் பாத்திரத்தில் ரஜினியும், சோனாவாக ஜெயபிரதாவும் நடித்திருந்தனர்.இப்படத்தில் வரும் இசைக்குழு அந்நாளில் பிரபலமாக இருந்த பீட்டில்ஸ் குழுவை நினைவுப் படுத்தும் விதத்தில் இருந்தது.

எம்.எஸ். விஸ்வனாதன் இசையில், அனைத்துப் பாடல்களுமே ஹிட்.

"பாரதி கண்ணம்மா". எங்கேயும் எப்போதும்,நம்ம ஊரு சிங்காரி,யாதும் ஊரே" சம்போ சிவ சம்போ'  ஆகிய பாடல்கள் இன்றும் முணுமுணுக்க வைப்பவையாக இருப்பவை.



நினைத்தாலே இனிக்கும் பற்றி தி இந்துவில் வந்த விமரிசனம் 2013ல்
-------------------------------------------------------------------------------------------------------------

1960- களில், பீட்டில்ஸ் ராக் இசைக்குழு இசையுலகில் மிகவும் பிரபலம். ஜான் லென்னன், பால் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகிய மாபெரும் இசை ஜாம்பவான்களை கொண்டது அந்த இசைக்குழு. மேடை, ஆடைகள், இசைக்கருவி, நடனம், பாடும் விதம் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி அசத்திய குழு அது.

இப்படி ஒரு இசைக்குழு தமிழில் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில், 1979-ல் கே.பாலசந்தர் எடுத்த இளமைதுள்ளும் படம் 'நினைத்தாலே இனிக்கும்'. நகைச்சுவையோடு அழகான காதல் பயண அனுபவமாக வெளிவந்த இந்த படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். மற்றொரு நாயகனாக கலகலப்பான காமெடியால் பின்னியிருப்பார் ரஜினி. மையமாகத் தலையாட்டி கமலையும் ரசிகர்களையும் குழப்பும் அழகு தேவதையாக ஜெயப்பிரதா. இது எம்.எஸ்.விஸ்வநாதனின் படம் என்றே சொல்லும் அளவுக்கு பாடல்களில் அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். இளமைக்கொண்டாட்ட வரிகளுக்கு கண்ணதாசன். 'பாரதி கண்ணம்மா', 'நினைத்தாலே இனிக்கும்', 'யாதும் ஊரே' பாடல்கள் இன்றும் கொண்டாடப்படும் மெல்லிசை சொர்க்கங்கள்.

படத்தின் பின்னணி நாயகன் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். கமலுக்கு மயக்கும் குரலிலும், ரஜினிக்கு அதிரடி குரலிலும் பாடி அசத்தியிருப்பார். சண்டைக்காட்சியில் கூட ஒரு பாடல் உண்டு.

படத்தில் இடம்பெற்ற 'சம்போ சிவ சம்போ', 'நம்ம ஊரு சிங்காரி', 'எங்கேயும் எப்போதும்' போன்ற பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களின் பெருவிருப்பத்துக்கான பாடல்கள். சுஜாதாவின் வசனங்களில், ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை இழையோடும்.

Thursday, January 15, 2015

17-மரோ சரித்திராவின் மாபெரும் வெற்றி

                                   

"மரோ சரித்ரா" வந்த ஆண்டு 1978.பாலசந்தரின் நண்பர் இராம அரங்கண்ணலுக்காக பாலசந்தரின் திரைக்கதை வசனம் இசையில் வெளிவந்த படம்..இல்லையில்லை காவியம் எனலாம்.

ஒரு தமிழ் இளைஞனுக்கும், தெலுங்கு பெண்ணிற்கும் உண்டாகும் காதல்..அதற்கு பெற்றோர் போடும் தடை.நிபந்தனை ..ஆகியவையே படம்.கமல் தமிழ் இளைஞனாகவும், சரிதா தெலுங்குப் பெண்ணாகவும் நடித்திருப்பார்.

படம் ஆந்திராவில் மாபெரும் வெற்றியைப் பெற, அதை தமிழுலும், கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யாது வெளியிட்டனர்.இது 1979ல் நடந்தது.பின் 1981ல் ஹிந்தியில் "ஏக் துஜே கேலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டது.அதில் கமல் ஹாசனே கதாநாயகனாக நடிக்க, சரிதாவின் பாத்திரத்தில் ரதி அக்னிஹோத்ரி நடித்தார்.ஹிந்தியிலும் வெற்றி.சிறந்த நூறு படங்கள் வரிசையில் சிஎன் என் - ஐபிஎன் வெளியிட்ட பட்டியலில் தெலுங்கு, ஹிந்தி இரண்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமலை முக்கிய நாயகனாகத் ததெலுங்கில் காட்ட வேண்டும் என்றே எடுக்கப்பட்டப் படம் எனலாம்.அவருக்கு ஜோடியாக 162 பெண்களிலிருந்து 19ஏ வயதான அபிலாஷாவைத் தேர்ந்தெடுத்தார். கருப்பாகவும், சற்று குண்டாகவும் இருந்த அபிலாஷா சரிப்பட்டு வருவாரா? என பலரும் சொன்னாலும், பாலசந்தர் அதில் பிடிவாதமாக இருந்தார்.அபிலாஷாவின் பெயரை சரிதா என மாற்றி வைத்தார்.வேறொரு பாத்திரத்தில் மாதவியும் நடித்தார்.

படம் முழுதும் விசாகப்பட்டிணத்திலேயே எடுக்கப் பட்டது.இந்தக் காலக்கட்டத்தில் பல வண்ணப் படங்கள் வந்தாலும், கருப்பு வெள்ளைப் படமாகவே இதை எடுக்க எண்ணினார் பாலசந்தர்.

தெலுங்கு மரோசரித்ரா 9-5-78ஆம் ஆண்டு வெளிவந்தது.ஆந்திராவில் மாபெரும் வெற்றி.இப்படத்தை அப்படியே தமிழிலோ, கன்னடத்திலோ மொழிமாற்றம் செய்யாமல், தமிழகத்திலும், கர்நாடகாவிலும் வெளியிட்டனர்.தமிழில், சென்னை சஃபையர் திரையரங்கில் 596 நாட்கள் ஓடியது.கர்நாடகாவில் 300 நாட்களுக்கு மேல் ஓடியது.

படம், ஹிந்தியில் "ஏக் துஜே கேலியே" என்ற பெயரில் தயாரானது.ஹிநிதியில் கமல், மாதவி ஆகியோரும், சரிதாவின் பாத்திரத்தில் ரதி அக்னிஹோத்ரி (ஹிந்திப் பெண்ணாக)யும் நடித்தனர்.கமல், மாதவி ஆகியோரும், பின்னணிப் பாடகராக எஸ்.பி.பி.யும் ஹிந்தியில் அறிமுகமாயினர்.

"மரோ சரித்ரா" வும், ஏக் துஜே கேலியே வும் பெற்ற வெற்றி போல இதுநாள் வரை திரையுலகில் வெற்றியை வேறு ஏதேனும் இயக்குநர்கள் சுவைத்திருப்பரா? என்பது சந்தேகமே!

தெலுங்கில், சிறந்த இயக்குநர் என இவ்வாண்டு ஃபிலிம் ஃபேர் விருது கேபிக்குக் கிடைத்தது.

ஹிந்தி பதிப்பில் எஸ்.பி.பி., பாடிய :தேரே மேரே பீச் மே" என்ற பாடல் இன்றும் பல மேடைகளில் பாடிவருவது சிறப்பு,

1978ல் இயக்குநரின் தப்புத் தாளங்கள் தெலுங்கு "தப்பிடத் தாளா"வும், இவர் கதைக்கான பொறுப்பேற்க "Bala Brikshnam" (பூவா தலையா)என்ற மலையாளப் படங்களும் வந்தன.

Wednesday, January 14, 2015

16- நிழல் நிஜமாகிறது..தப்புத்தாளங்கள்

1978 ஆம் ஆண்டு வந்தவை

வெங்கடாச்சலம், இந்துமதி இருவரும் உடன்பிறப்புகள்.இந்துமதி ஆண்களை வெறுப்பவள்,.திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என இருப்பவள்.சஞ்சீவி என்னும் அவர்கள் நண்பன் அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வருவான்.இந்துமதியை சீண்டி விளையாடுவான்.சஞ்சீவி, அவளை விரும்புகிறான்.இந்துவும் அவனை விரும்பினாலும், அவளது கொள்கை தடுக்கிறது.

திலகம் என்னும் பெண் வெங்கடாச்சலம் வீட்டு வேலை செய்யும் பெண்.அவளது, கள்ளம் கபடம் அற்ற மனது வெங்கடாச்சலத்திற்குப் பிடிக்கிறது.அவளை விரும்புகிறான்.ஒருநாள், திலகம் தன்னால் கருவுற்று இருப்பதை அறிந்தவன், சமூகத்திற்கு பயந்து அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.ஆனால், சஞ்சீவி அவளை வெங்கடாச்சலம் வீட்டில் வேலை செய்யும்  மற்றொரு வேலையாள் காசியின் வீட்டில் தங்க வைக்கிறான்.அங்கு அவளுக்குக் குழந்தை பிறக்கிறது.

சஞ்சீவியின் ,தூண்டுதலால் வெங்கடாச்சலம் தன் தவற்றை உணர்ந்து திலகத்தை ஏற்க சம்மதிக்கிறான்.ஆனால் அவளோ, தான் கருவுற்றிருந்த வேளையில் தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட காசியுடனேயே இருக்க முடிவெடுக்கிறாள்

சஞ்சீவியை இந்துமதி மணக்கிறாள்.இப்படத்தில் வெங்கடாச்சலமாக சரத்பாபுவும்,திலகமாக ஷோபா வும், இந்துவாக சுமித்ராவும், சஞ்சீவியாக கமலும், காசியாக ஹனுமந்துவும் நடித்தனர்.மௌலியும் இப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

திரைக்கதை வசனம் இயக்கம் பாலசந்தர்.இது "chilakamma cheppindi" என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

எம்.எஸ்.விஸ்வனாதன் இசையில் எஸ்.பி.பி. பாடிய , கண்ணதாசனின் பாடல்"கம்பன் ஏமாந்தானும்" வாணிஜெயராமுடன் பாடிய "இலக்கணம் மாறுதோ" பாடலும் பெரும் வரவேற்பப் பெற்றன.

1978ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்துடன் ,அதே ஆண்டு வந்த மற்றொரு படம்"தப்புத் தாளங்கள்"

ரஜினி,சரிதா,பிரமிளா ஆகியோர் நடித்திருந்தனர்..கன்னடத்தில் தப்பிடத்தாளா என்ற பெயரிலும், தெலுங்கில் கழுகன் என்ற பெயரிலும் வந்த படம்.

விஜயபாஸ்கர் இசையில் வாணிஜெயராம் பாடிய "அழகான இளமங்கை" என்ற பாடலும், எஸ்.பி.பி.யின் "என்னடா பொல்லாத வாழ்க்கை' என்ற பாடலும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இப்படத்திற்கு சிறந்த வசனகர்த்தாவாக  பாலசந்தருக்கு தமிழக ஸ்டேட் ஃபில்ம் விருது கிடத்தது.

சரசு ஒரு விலை மகள்.ரஜினி, கூலிப்படையைச் சேர்ந்தவர்.பணத்திற்கேற்றாற் போல எந்த சமூகவிரோதச் செயல்கள் செய்யவும் தயங்காதவர்.அவர்களுக்குள்ளே பிறக்கும் அன்பும்...அதற்குப் பின் சரசு விலைமகளாய் இருப்பதால் படும் பாடும்...ரஜினி செய்த குற்றத்திற்கு சிறை செல்வதும் ....கதை இப்படியாகப் போகும்..பல புரட்சிகரமான கருத்துகளை தனது கூர்மையான வசனங்களில் சொல்லியிருப்பார்.

இதில் கமல் சரசுவிடம் வரும் வட இந்திய வாடிக்கையாளராக வருவார்

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.ஆயினும்..சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாராட்டப்பட்டது.மக்கள் வரவேற்பைப் பெற்றது.

இது, பாலச்ந்தர் ஒரு தீக்கதரிசி என்பதும்...பத்தாண்டுகளுக்குப் பின் யோசிக்க வேண்டியதை முன்னரே யோசித்தார் என்பதும் தெளிவு..

Tuesday, January 13, 2015

15- சிறந்த படங்களில் ஒன்று



அவர்கள், பட்டிணப்பிரவேசம்,aayina (ஹிந்தி) ஆகியவை பாலசந்தரின் பெயரைத் தாங்கி 1977ல் வந்தவை.

அவர்கள் படத்தில் சுஜாதா, கமல் ஹாசன்,ரஜினி, ரவிகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.பாலசந்தரின் மிகச் சிறந்த படங்களில் ஒதுவும் ஒன்று.

அனு, பரணியைக் காதலிக்கிறாள்.அவளது தந்தைக்கு பம்பாய் (இன்றைய மும்பை)க்கு மாற்றலாகிறது.ஆகவே குடும்பமே பம்பாய்க்குக் குடிப் பெயர்கிறது.அங்கிருந்து பரணிக்கு அனு எழுதிய கடிதங்களுக்கெல்லாம் பதில் இல்லை.இதற்கிடையே, அனுவின் தந்தை நோய்வாய்ப்படுகிறார்.அப்போது, அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ராமனாதன் மிகவும் உதவியாய் இருக்கிறான்.இதுவே..அவன் அனுவை மணமுடிக்கக் காரணமாய் இருக்கிறது.அனுவும், ராமனாதனை மணக்கையில், தனது முந்தைய காதலைப் பற்றியும் சொல்கிறாள் அவனிடம்.அது வினையாகிறது.ராமநாதன் அனுவை வேதனைப் படுத்தி ரசிக்கிறான்.அனு அவனிடமிருந்து விவாகரத்து பெற்று, கையில் குழந்தையுடன் சென்னை வருகிறாள்.

சென்னையில் வேலைப் பார்க்கும் அனுவிற்கு, ராமநாதனே மேலதிகாரியாய் வருகிறான்.அனுவுடன் வேலை செய்யும் சக ஊழியர் ஜனார்தனம் மனைவியை இழந்தவர்.அவர் அனுவை விரும்புகிறார்.அனு பரணியையும் சந்திக்க, தான் எழுதிய கடிதங்கள் அவனிடம் போய்ச் சேரவேயில்லை என அறிகிறாள்.மனம் திருந்திய ராமனாதனும், மீண்டும் அவனை மணக்க விரும்புகிறான்.

ஒரு பக்கம் அனு..மறுபக்கம் ராமனாதன், ஜனார்தனம், பரணி.....

அனு என்ன முடிவெடுக்கிறாள் ..என பாலசந்தருக்கே உரித்தான பாணியில் கதை முடிகிறது.

இப்படத்தில், சுஜாதா, அனுவாகவும், ராமனாதனாக ரஜினியும், ஜனர்தனாக கமலும், பரணியாக ரவிகுமாரும் நடித்தனர்.

எம்,எஸ்.விஸ்வனாதன் இசையில் ஜானகி பாடிய, "காற்றுக்கென்ன வேலி" "இப்படியே ஒரு தாலாட்டு" பாடல்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சதனும் சேர்ந்து பாடிய "ஜூனியர்" பாடலும் பட வெற்றியில் பங்கேற்றன எனலாம்.

சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது சுஜாதாவிற்குக் கிடைத்தது.

அடுத்து வந்த படம் "பட்டிணப்பிரவேசம்"

விசு அவர்கள் நாடகம் இது.அதே பெயரில் பாலசந்தர் திரைப்பட மாக்கினார். டெல்லி கணேஷ்..பெரியத் திரைக்கு அறிமுகமான படம்.

கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் பிழைப்புத் தேடி பட்டிணம் வருகிறது. ஆனால் பட்டிணப்பிரவேசம் அவர்களுக்கு இன்பத்தைத் தரவில்லை.மேலும், மேலும் துன்பங்களையேத் தருகிறது.முடிவில் அக்குடும்பம் மீண்டும் கிராமத்திற்கேச் செல்கிறது.

மீண்டும் அவர்கள் செல்லும் போது, "நன்றி..மீண்டும் வருக" என்ற பலகையைக் காட்டி..பாலசந்தர் படத்தை முடித்திருப்பது பேசப்பட்டது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பி., பாடிய "வான் நிலா...நிலா அல்ல" என்னும் பாடல் ஹிட்.

அடுத்து வந்த Aaina என்னும் ஹிந்திப்படம் (கதை பாலசந்தர்) அரங்கேற்றம் படக்கதையாகும்.இதில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் நடித்தனர்.

Monday, January 12, 2015

14-மன்மத லீலையும், மூன்று முடிச்சும்



மன்மத லீலை, மூன்று முடிச்சு,Anthuleni katha (தெலுங்கு) (இப்படம் அவள் ஒரு தொடர்கதை), தூர்பு படமரா (அபூர்வ ராகங்கள் தெலுங்கு) ஆகியவை 1976ல் வந்த படங்கள்.

மன்மத லீலை படத்தில் பெண்களை ஏமாற்றி அவர்கள் கற்பை சூறையாடும் நெகடிவ் பாத்திரத்தை கமல் ஏற்றிருப்பார்.இப்படம் ரசிகர்கள், ஊடகங்கள் பாராட்டுகளையும், அதே அளவிற்குக் கண்டனங்களையும் பேற்றது.பத்து, இருபது வருடங்களுக்குப் பின் வரவேண்டிய படம் என்று ஒரு சாரார் விமரிசித்தனர்.அது உணமை என காலம் சொல்கிறது இப்போது.

இப்படத்தில் கமல், ஹாலம், ஜெயபிரதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்  நடித்திருந்தனர்.ராதாரவி இப்படத்தில் அறிமுகமானார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், மனைவி அமைவதெல்லாம் என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலும், ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "ஹலோ மை டியர் ராங் நம்பெர் பாடலும், "நாதமெனும் கோயிலிலே" என்ற வாணி ஜெயராம் பாடிய பாடலும் பட வெற்றிக்கு வலு சேர்த்தது.

அடுத்து வந்த படம் "மூன்று முடிச்சு"

பிரசாத், பாலாஜி இருவரும் நண்பர்கள்.பாலாஜி செல்வியைக் காதலிக்கிறான்.செல்வியும் பாலாஜியை விரும்புகிறாள்.ஆனால் பிரசாத்திற்கு செல்வியின் மீது ஒரு கண்.பாலாஜியின் காதலை பிரசாத் சீர்குலைக்கச் செய்வதை செல்வி பாலாஜியிடம் சொன்னாலும்..பாலாஜி அதை நம்புவதில்லை.அந்த அளவிற்கு நண்பனை , நட்பை விரும்புபவன் அவன்.

ஒருநாள் அவர்கள் சுற்றுலா செல்கையில்..ஒரு ஏரியில் படகு சவாரி செய்கிறார்கள்.அப்போது பாலாஜி தவறி ஏரியில் விழ அவனைக் காப்பாற்றவில்லை பிரசாத்.பாலாஜி இறக்கிறான்.பிரசாத்தின் வீட்டிற்கு வேலைக்கு வரும்செல்வி, பிரசாத்தின் தந்தையை மணக்க நேரிடுகிறது.பிரசாத் வீட்டிற்கு வருகையில் இது தெரிகிறது.அம்மா என்னும் நிலையில் செல்வி பிரசாத்தை பழி வாங்குகிறாளா? எப்படி? என்பதே கதை.

பிரசாத்தாக ரஜினியும், பாலாஜியாக கமலும் செல்வியாக ஸ்ரீதேவியும் நடித்தனர்.இப்படத்தில் ரஜினியின் நடிப்பு பிரமாதம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "வசந்தகால நதிகளிலே" என்ற ஜெயசந்திரன், வாணி ஜெயராம் பாடிய பாடல் குறிப்பிடத்தக்கது.

இப்படம் மலையாளத்தில் "மட்டொரு சீதா' என்ற பெயரில் வந்தது.அதில் தமிழில் ரஜினி ஏற்ற பாத்திரத்தை கமல் ஏற்றார்.

தெலுங்கில் "ஓ சீதா கதா" என்ற பெயரில் வந்தது. 

Sunday, January 11, 2015

13- அபூர்வராகம் பெற்ற விருதுகள்



அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை ஆகிய படங்களுக்குப் பிறகு 'அ' வரிசையில் வந்த படம் அபூர்வராகம்.ஆண்டு 1975.

கமல்ஹாசன்,ஸ்ரீவித்யா,சுந்தரராஜன்,ஜெயசுதா,நாகேஷ் இவர்களுடன் சிவாஜிராவ் என்ற நடிகர் இப்படத்தில் அறிமுகமானார்.மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், மேஜரின் இரண்டு மகன்களில் ஒரு மகனின் பெயர் "ரஜினிகாந்த்.அந்தப் பெயரையே சிவாஜிராவிற்கு திரைப்படப் பெயராக்கினார் பாலசந்தர்.மோதிரக் கைகளால் குட்டப்பட்ட அந்நடிகர் பின்னர் மக்களால் சூப்பர் ஸ்டாராக ஆக்கப்பட்டார்.பாடகியாக வந்த ஸ்ரீவித்யாவின் கச்சேரி நடைபெறும் அரங்கில், அவரை விட்டு ஓடிய கணவனாக ரஜினி..அரங்கின் பெரும் கதவுகளைத் திறந்து அரங்கினுள் வருவது போன்ற முதல் காட்சி அவருக்கு.பின்னாளில் அவரை திரையுலகம் வரவேற்கப் போவதை முன்னதாகச் சொல்வது போல இக்காட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அபூர்வராகங்கள் படக்கதையின் கரு கொஞ்சமும் கற்பனையும் செய்துப் பார்க்க முடியாதது.

பிரசன்னா, தன்னைவிட மிகவும் மூத்த இசைப்பாடகி பைரவியைக் காதலிக்கிறான்.இருவரும், ஒரு கட்டத்தில் மணமுடிக்கலாம் என எண்ணுகையில், பிரசன்னாவின் தந்தை ஒரு இளம் பெண்ணை விரும்புகிறார்.அப்பெண் பைரவியின் மகள்.இந்நிலையில்..என்னவாகும்..என்பதை பாலசந்தர் தனக்கே உரித்த பாணியில் படத்தை முடித்திருப்பார்.

பிரசன்னாவாக கமல்ஹாசனும், பைரவியாக ஸ்ரீவித்யாவும், அவரது மகளாக ஜெயசுதாவும், பிரசன்னாவின் தந்தையாக மேஜரும் நடித்திருப்பர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் எழுதியிருந்த, "அதிசய ராகம்" என்ற பாடலை ஜேசுதாசும்,"கேள்வியின் நாயகனே" என்ற பாடலை வாணி ஜெயராமும், "ஏழு ஸ்வரங்களில்' என்ற பாடலை வாணி ஜெயராமுடன், சசிரேகாவும் பாடியிருப்பர்.

இப்படம் தெலுங்கில், தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் "Thoorpu Padamara" என்ற பெயரில் வந்தது.

ஹிந்தியில், பாலசந்தர் இயக்கத்திலேயே "Ek nai paheli" என்ற பெயரில் வந்தது.

1975ஆம் ஆண்டு தமிழில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது இப்படம்.அதைத்தவிர,  சிறந்த இயக்குநர் என கேபிக்கும்,சிறந்த பட விருதையும், கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் ஃபிலிம் ஃபேர் பெற்றுத் தந்தது.

இப்பட ஒளீப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்திற்கும், சிறந்த பெண் பாடகியென வாணி ஜெயராமுக்கும் தேசிய விருதினை இப்படம் பெற்றுத் தந்தது.

பாலசந்தரின் மறக்க முடியா படைப்புகளில் இப்படத்திற்கும் முக்கிய இடமுண்டு.

Saturday, January 10, 2015

12- நான் அவனில்லை



இந்த ஆண்டு வந்த மற்றொரு படம் "நான் அவனில்லை"

ஆஸ்தான கதாநாயகனாய் இருந்த ஜெமினி கணேசன் சொந்தப் படம் இது.ஸ்ரீ நாராயணி ஃபிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் ஜெமினி, லட்சுமி, கமல்ஹாசன், ஜெயபாரதி, ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், S.P. பாலசுப்ரமணியம் பாடிய "ராதா காதல் வராதா" என்றபாடலும், "மந்தார மலரே" என ஜெயசந்திரனும், பி.சுசீலாவும் பாடிய பாடல்கள் ஹிட் ஆகின.

ஜெமினி கணேசன்..ஒரு பெண்பித்தன்.பல ஊர்களில் பெண்களை ஏமாற்றி மணந்தவர்.ஆனால் நீதிமன்றத்தில் "நான் அவனில்லை" என வாதாடுகிறார்.இப்படத்தில் கமல்ஹாசன் ஜெயசுதாவை மணக்கும் வாலிபனாய் வருவார்.

மற்றபடி..இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

பாலசந்தர் இயக்கத்தில் இந்த ஆண்டு வந்த மற்றொரு படம், "ஜீவித ரங்கம்" ஆகும்.இது அரங்கேற்றத்தின் தெலுங்கு படைப்பு.சாவித்ரி இதில் நடித்திருந்தார்.

11- ஒரு படம்...ஐந்து மொழிகளில்...



1974ஆம் ஆண்டு பாலசந்தருக்கு மிக முக்கியமான ஆண்டு எனலாம்.

கலைமகள் மாத இதழில் எம்.எஸ்.பெருமாள் என்பவர் எழுதியக் கதையை மூலக்கதையாக்கி, தன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில், அவரது நண்பரான இராம.அரங்கண்ணல் தயாரிக்க வெளிவந்தப் படம்"அவள் ஒரு தொடர்கதை" .இது வெள்ளிவிழா படம்.

இப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் பட இயக்குநருக்கான ஃபில்ம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

சுஜாதா, விஜயகுமார்,ஸ்ரீபிரியா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஜெய்கணேஷ் ,விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

சுஜாதாவிற்கு தமிழில் இது முதல் படமாக அமைந்தது.இப்படம் ஐந்து மொழிகளில், டப்பிங் ஆகவோ ரிமேக் ஆகவோ வந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் "அந்துலேனிக் கதா".இயக்கமும் பாலசந்தரே. இப்படத்தில் தமிழில்  ஜெயகணேஷ் ஏற்ற வேடத்தை ரஜினி ஏற்றார்.
"அவள் ஒரு தொடர்கதா" என மலையாளத்தில் படம் டப் செய்யப்பட்டது..

வங்காளத்தில் "கபிதா" என்று ரீமேக் ஆனது.கமல்ஹாசன், தமிழில் தான் ஏற்றப் பாத்திரத்தையே இதிலும் ஏற்றார்.கமலுக்கு வங்காளத்தில் இது முதல் படமாய் அமைந்தது.

ஜீவன்தாரா என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது.

"benkiyalli avalita hoov" என கன்னடத்தில் சுஹாசினி நடிக்க வெளி வந்தது.கன்னடத்தில், பஸ் கண்டக்டராக சிறு வேடத்தில் கமல் நடித்தார்.

படத்தின் கதைச்சுருக்கம் இதுதான்-

கவிதா...நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் பெண்.அவள் வேலைக்குச் சென்று, கணவனை இழந்து வீட்டில் உள்ள சகோதரி,கல்யாணத்திற்கு இருக்கும் மற்றொரு சகோதரி, கண் பார்வையற்ற தம்பி,அவளது தாயார்,தவிர்த்து குடுபத்தின் கஷ்டம் தெரியா குடிகார சகோதரன் ஆகியோரைக் காப்பாற்றியாக வேண்டும்.அவளது தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டவர்.குடிகார சகோதரன் குடும்பத்திற்கு உதவாக்கரையாக இருப்பதோடு மட்டுமன்றி அவ்வப்போது பிரச்னைகளையும் கொண்டு வருபவனாக இருக்கிறான்.

கவிதாவைக் காதலிப்பவன், அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ளக் கூற அவளோ, குடும்பப் பொறுப்பிற்காக மறுக்கிறாள்.அதனால், அவளது காதலன், கணவனை இழந்த அவளது மற்ற சகோதரியை மணக்கிறான்.தான் காதலித்த கவிதாவின் சகோதரிக் கிடைக்காததால்..கவிதாவின் தோழியைக் கமல்ஹாசன் மணக்கிறார்.

கடைசியில், கவிதாவின் பொறுப்பற்ற சகோதரன் திருந்த, தன்னுடைய அலுவலக அதிகாரியை கவிதா மணக்க சம்மதிக்கிறாள்.ஆனால்..அவளது எண்ணம் நிறைவேறியதா...என்பதை பாலசந்தருக்கே உரித்தான திருப்புமுனைகளுடன் அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர்.

இப்படத்தில் கமல் நடித்தப் பாத்திரம் மிமிக்ரி செய்யும் பாத்திரம்.அதற்காகவே கமல் அக்கலையைக் கற்றார்.

எம்.எஸ்.விஸ்வனாதன் இசையில்..

எஸ்.பி.பி., பாடிய "கடவுள் அமைத்து வைத்த மேடை", எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "அடி..என்னடி உலகம்", ஜேசுதாஸ் பாடிய "தெய்வம் தந்த வீடு" ஆகிய பாடல்கள், இன்றும் ரசிகர்களை முணுமுணுக்க வைப்பவை ஆகும்.

கேபி, முந்தைய படத்திலும், குடும்பத்திற்காக உடலை விற்ற பெண்ணையும், இப்படத்தில் குடும்பத்திற்காக தன் எதிர்கால வாழ்வையே தியாகம் செய்த பெண்ணையும் படைத்து...திரையில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Friday, January 9, 2015

10-சொல்லத்தான் நினைக்கிறேன்



1973 ஆம் ஆண்டு வந்த மற்றொரு படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்".

ஆனந்த விகடனில் மணியன் எழுதியத் தொடர் "சொல்லத்தான் நினைக்கிறேன்'.இக்கதையை மணியனே..வித்வான் வே.லட்சுமணனுடன் சேர்ந்து திரைப்படமாக எடுக்கத் தீர்மானித்தார்,.இக்கதைக்கு..பாலசந்தரே சரியான இயக்குநராய் இருப்பார் என்று எண்ணிய மணியன் அப்பொறுப்பை கேபியிடம் ஒப்படைத்தார்.

திரைக்கதை,வசனம், இயக்கம் பொறுப்பை ஏற்ற பாலசந்தர்,இப்படத்தில் நடிக்க சிவகுமார்,ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, சுபா ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்.

மூன்று சகோதரிகள்..அவர்களது வீட்டில் தங்கியுள்ள சிவகுமாரை விரும்புகின்றனர்.ஆனால். அவர்களில் சிவகுமாரோ, ஜெயசித்ராவை விரும்புகிறார்.ஆனால் ஜெயசித்ராவோ, தன் சகோதரி ஜெயசுதாவை, play boy ஆக இப்படத்தில் நடித்த கமல்ஹாசனிடமிருந்து காப்பாற்ற தன் காதலைத் தியாகம் செய்கிறார்.

பாலசந்தர் படங்களுக்கே ஆன பல முக்கியத் திருப்பங்களுடன் படம் அருமையாய் வந்தது.

காதலன்..தான் விரும்பிய காதலியையே மணக்க வேண்டும் என்ற சினிமா உலகின் விதியை மாற்றி புதுக்கருத்தொன்றை அமைத்தார் பாலசந்தர் இப்படம் மூலம்.

கமல்ஹாசனின் play boy நடிப்பில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது சிறப்பு.

Thursday, January 8, 2015

9-புதுமை இயக்குநர்



1973 பாலசந்தருக்கு மிகப்பெரிய திருப்பத்தைத் தந்த ஆண்டு எனலாம்.

இதுவரை அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த வழக்கமான நடிகர்களிடமிருந்து விலகி, சிவகுமா, பிரமிளா,எம்.என்.ராஜம், ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடிக்க "அரங்கேற்றம்" என்ற படம் வெளியானது.

என்னைக் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதால் , சற்று விளக்கமாகவே அதன் கதை.

குடும்பத் துன்பங்களைத் தீர்க்கவென தன் உடலை விற்கும் ஒரு பெண்ணின் கதையே அரங்கேற்றம்.

ஏழை பிராமணன் எஸ்.வி.சுப்பையா..அவரது மனைவி எம்.என்.ராஜம்.வத வதவென குழந்தைகள்.மூத்தப் பெண் பிரமிளா.ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு லட்சியத்தை அடைய நினைக்கின்றனர்.ஆனால் வறுமை ..ஒரு வேளை சாப்பாட்டுக்கே பஞ்சம்.இந்நிலையில் மூத்தவள் பிரமிளா..அவர்கள் லட்சியத்தையடையவும்.குடும்பம் துன்பத்திலிருந்து விடுபடவும் விலைமகளாகிறாள்.

அப்படி அவளை துரத்தியதும்...குடும்பத்தில்..தன் தம்பியின் மருத்துவராக வேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற ஒரு அரசியல்வாதியை அவள் சந்திக்கையில்..அவனால் சீரழிக்கப்படுகிறாள்.அவளின் ஒரு தங்கை தன் ஆசைப்படி பாடகி ஆகிறாள்.தம்பி மருத்துவம் படிக்கிறான்.குடும்பம்.ஒரு த்ங்கைக்குக் கல்யாணம் ஆகிறது. மகிழ்ச்சியில்  மிதக்கிறது குடும்பம்.

ஆனால்...ஒருநாள், அவள் எப்படி பணம் சம்பாதிக்கிறாள் என்பதை அறிந்த  குடும்பம் அவளை ஒதுக்குகிறது.ஆனால் அவள் மீது இரக்கப்பட்டு, அவளை மணக்க வருகிறான் ஒருவன்.ஆனால், அவளோ பைத்தியமாகி ஒடுகிறாள்.

இக்கதையை அற்புதமாக படமாக்கி திரையில் புதுமையைப் புகுத்தி புதுமை இயக்குநர் ஆனார் கேபி.படத்திற்கு சென்சார் "A" செர்டிஃபிகேட் வழங்கினர்.முன்னதாக பலவருடங்களுக்கு முன் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படம் "ஏ" செர்டிஃபிகேட் பெற்றது.

குழந்தை நட்சத்திரமாக, "களத்தூர் கண்ணம்மா" "பார்த்தால் பசி தீரும்" ஆனந்த ஜோதி ஆகிய படங்களில் நடித்திருந்த "கமல்ஹாசன்" இப்படத்தில் இளைஞனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலசந்தரின் கூர்மையான வசனங்கள் படத்தில் நிறையக் காணப்பட்டது.

உதாரணத்திற்கு..

,பிரமிளாவின். மேலாடை நழுவ..அம்மா..ஆண்கள் இருக்கும் போது இப்படி மேலாடை நழுவுவதைக் கண்டிக்கையில் அவர்< "ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சு' என்று சொல்லும் வசனமும்..பின்னர் ஓரிடத்தில், "நாங்க எல்லாம் தமிழ் நாட்டு பொம்பளைங்க...தலை நிமிர்ந்து வீதிக்கு வெளியே பார்க்கும் வழக்கம் நமக்கில்லை' என்ற வசனமும் ஒரு பானை சோத்திற்கான பதம்.

வி.குமார் இசையில் கண்ணதாசன் பாடல்களும் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தன.

"ஆண்டவனின் தோட்டத்திலே"
"மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா?"
+மூத்தவள் நீ கொடுத்தாய்"

ஆகிய பாடல்களின் வரிகளும்..இசையும்..படமாக்கியவிதமும் அருமை.

மொத்தத்தில் பாலசந்தருக்கு மாபெரும் திருப்புமுனை இப்படம் எனலாம். 

8-வெள்ளிவிழாவும் கண்ணாநலமாவும்



ஒரு கதாநாயகன்..இரு கதாநாயகிகள்

பாலசந்தரின் ஆரம்பகாலப் படங்களில் ஒரு கதாநாயகன், இரு கதா நாயகியர் இருப்பர்.பெரும்பாலான அவர் படங்கள் இப்படி அமைந்தது..எதேச்சையாக, கதையமைப்புக்கு ஏற்ப இருந்த்து எனலாம்.

1972 ஆம் ஆண்டும் இதற்கு விதி,விலக்கல்ல

இவ்வாண்டு வந்த படங்கள் இரண்டு தமிழ்ப்படங்கள், ஒரு ஹிந்தி, ஒரு மலையாளப்படம்.

ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ ஆகியோர் நடித்து 'வெள்ளிவிழா" என்ற படம் இவ்வாண்டு வந்தது."காதோடுதான் நான் பாடுவேன்" என ரகசியக்குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ..வி.குமார் இசையில் வந்த இப்பாடல் அருமையாய் இருந்தது.

அடுத்து வந்த படம் "கண்ணா நலமா?" ஜெமினி, ஜெயந்தி நடித்தது.

மற்றபடி வழக்கமான பாலசந்தரின் ஃபார்முலா படங்களாகவே இவை அமைந்தன எனலாம்.

"haar jeet"  என்ற ஹிந்திப்படத்தின்  கதை இவருடையது ரெஹ்னா சுல்தான், அனில்தவான் நடித்திருந்தனர்.

அடுத்து பாலசந்தரின் கதையில் வந்த மற்றொரு படம்.மலையாளப் படமாகும்.பிரேம் நசீர்,மது, ஷீலா நடித்திருந்தனர்.  படம் Aaradimanninte Janmi(நீர்க்குமிழி)

ஆரம்பகாலங்களில் கேபியின் அதிகப் படங்களில், ஜெமினி கணேசன்,நாகேஷ்,சுந்தரராஜன், ஜெயந்தி,சௌகார் ஜானகி ஆகியோரே பெரும் பங்கு பெற்றிருந்தனர் எனலாம்.

Wednesday, January 7, 2015

7-ஒரே ஆண்டில் ஏழு படங்கள்


1971ல் வந்த பாலசந்தரின் படங்கள் ஏழு.

அவற்றில் மூன்று தமிழ்ப் படங்கல்.இரண்டு தெலுங்கு படம், இரண்டு ஹிந்தி படங்கள்.

தமிழில் "நூற்றுக்கு நூறு "என்ற படம் வந்தது.ஜெயஷங்கர், லட்சுமி,ஸ்ரீவித்யா, விஜயலலிதா ஆகியோர் நடித்திருந்தனர்.கல்லூரி விரிவுரையாளரான ஜெயஷங்கரை..மாணவிகள் மூவர் காதலிப்பதும்..இடையே ஒரு கொலை நடந்துவிட..அது ஜெயஷங்கர் செய்தார் என்று சொல்லிவிட, மேலும் ஒரு பெண்ணிடம் அவர் தவறுதலாய் நடந்தார் என்றும் செய்திவர அதிலிருந்தெல்லாம் எவ்வாறு அவர் மீண்டார் என்பதே படத்தின் மையக்கரு.திரைக்கதை அமைப்பும், வசனங்களும், இயக்கமும் படத்தை வெற்றிப் படமாக்கின. நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் என்ற பாடல் இப்படத்தில் குறிப்பிடத்தக்கது.

பாலசந்தரின் படங்கள் ஒவ்வொன்றிலிருந்தும், ஒவ்வொன்று மாறுபட்டது, இது இவரால் எப்படி சாத்தியமாயிற்று என்ற வியப்பு ஏற்படுகிறது.

அடுத்த பாலசந்தர் படம், "நான்கு சுவர்கள்" திரைக்கதை வசனம் இயக்கம் இவரே.

முற்றிலும் மாறுபட்ட படம்.மேற்கத்திய பாணியைப் பின்பற்றியிருந்தார்.தவிர்த்து இவரின் முதல் வண்ணப்படமும் இதுதான். ஜெயஷங்கர்,ரவிசந்திரன்,வாணிஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.படம்...பத்தாம்பசலிக்கு ஆன கதிதான்.இப்படத்தில் எங்கே தப்பு செய்தோம் என பாலசந்தர் வியந்ததுண்டு.இப்படத்திற்குப் பின் மீண்டும் கருப்பு வெள்ளை படத்திற்கு மாறினார்.

அடுத்து, சத்யகம் என்னும் ஹிந்திப் படக்கதையத் தழுவி, கதை, வசனம் எழுதி இயக்கி இருந்த படம் "புன்னகை". ஜெமினி கணேசன், ஜெயந்தி, வி.எஸ்.ராகவன் ஆகியோர் நடித்திருந்தனர்.பொய்யே பேசாத கதாபாத்திரத்தில் ஜெமினி நடித்திருந்தார்.அருமையான நடிப்பு அவரது இப்படத்தில்.படம் வெற்றியா..தோல்வியா என ஆராயாமல் அனைவரும் பார்க்க வேண்டிய படமாய் இது அமைந்தது.இவரது படங்களில் எனக்குப் பிடித்தப் படங்களில் இதுவும் ஒன்று எனலாம்.

"bomma borusa" தெலுங்குப் படம் இவ்வாண்டில் வந்தது. பூவாதலையாவின் தெலுங்கு வடிவம்.ஏ.வி.எம்., தயாரிக்க சந்திரமோகன்,வரலட்சுமி, சலம் ஆகியோர் நடித்திருந்தனர்.

"moogabrama" என்ற பாலசந்தரின் கதையை மையமாகக் கொண்டு தெலுங்கு படம் ஒன்றும் இவ்வாண்டு வந்தது.

"lakhon mein ek" கே.பி., எழுத்தில், எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் ஜெமினி தயாரித்த ஹிந்திப்படம் வந்தது.இது "எதிர்நீச்சல்" படமாகும்.

"mein sunhthar hoon' பாலச்ந்தர் எழுத்தில், கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் ஏ.வி.எம்., தயாரித்த ஹிந்திப்படம் சர்வர் சுந்தரத்தின் ஹிந்திவடிவம் ஆகும்.இதில் மெஹ்மூத் நடித்திருந்தார்.

Tuesday, January 6, 2015

6-இயக்குநரின் உயரிய பண்பு




1970 ஆம் ஆண்டு...

கவிஞரும், தனது நண்பருமான ஆலங்குடி சோமு அவர்களுக்காக பாலசந்தர் உருவாக்கிய படம் "பத்தாம் பசலி"ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் நாகேஷ் நடித்திருந்தனர்.

உண்மைகள் கசப்பானவையானாலும், அவற்றை மறைக்கமுடியாதல்லவா? கேபியின் தோல்வி படங்களை கைவிட்டு எண்ணிவிடலாம்.அதில் முதலிடம் பிடித்தது இப்படம்.அந்நாளில், ஒரு தமிழ்ப் பத்திரிகை, பட விமரிசனங்களை வெளியிட்டு, அதற்கான பதிலையும் அப்பட இயக்குநரிடம் பெற்று வெளியிட்டு வந்தது.அப்பத்திரிகையின் "பத்தாம் பசலி' படவிமரிசனத்திற்கு நம் இயக்குநரின் ஒரே வரி பதில்"I Plead Guilty" என்பதாகும்.இவ்வாறு. தன் படத்தின் உண்மை நிலையை உணர்ந்து, அதை ஒப்புக்கொள்ளும் பண்பு..இவரைத்தவிர வேறு எவரிடமும் இந்நாள் வரை இல்லை என உறுதியாய் சொல்லலாம்.

அடுத்ததாக இவ்வாண்டு படம் "எதிரொலி" சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில் வந்தது.கேபி இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த ஒரே படம் இது.மற்றும் இப்படத்தில் கே.ஆர்.விஜயா, சுந்தரராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

சந்தர்ப்பம் சூழ்நிலைக் காரணமாக ஒரு நல்லவன் எப்படி கெட்டவனாகி, ஒரு கொலையும் செய்யும் அளவிற்குச் செல்கிறான் என்பதே படத்தின் மையக்கரு. இப்படத்தைப் பற்றிச் சொல்ல வேறு ஏதுமில்லை.

தனது பல நாடகங்கள், திரைப்படங்களாகி வெற்றி பெற்றுள்ளதால் "நவக்கிரகம்" என்ற நாடகத்தையும் திரைப்படமாக்கினார்.கிட்டத்தட்ட எதிர்நீச்சல் பாணியிலேயே படமும் இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.இப்படத்தில்தான் ஒய்.ஜி.மகேந்திரனை அறிமுகப்படுத்தினார் இயக்குநர்.

மாபெரும் வெற்றி ஏதும் பெறாத இவ்வருடம் கடைசியில், சௌகார் ஜானகிக்காக இயக்கிய "காவியத்தலைவி" படம் வந்தது.

காமுகன் ஒருவனால் ஜானகிக்கு பிறக்கிறது ஒரு பெண் குழந்தை.அதை தன் நண்பனிடம் ஒப்படைத்து கௌரவப்பிரஜையாக வளர்க்கச் சொல்கிறாள் தாய்.சிறையிலிருந்து வெளிவரும் கணவன் வருகிறான்.பிளாக்மெயில் செய்கிறான்.மகளுக்கு தன் தாய் யார் எனத் தெரிந்ததா?தாயின் நிலை என்ன? அவள் கணவன் என்ன ஆகிறான்? என்பதையெல்லாம் சற்றும் விறுவிறுப்புக் குறையாது உணர்ச்சிபூர்வமாய் தந்தார் இயக்குநர். படம் வெற்றி பெற்றது.

ஜெமினி கணேசன், சௌகார் (இரட்டை வேடங்களில்) எம்.ஆர்.ஆர்.வாசு ஆகியோர் நடித்திருந்தனர்.ஜெமினியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இவற்றைத் தவிர்த்து, பாலசந்தர் சம்பந்தப்பட்ட,"sambarala rambabu" என்ற தெலுங்குப் படமும், சத்யன், மது, ஷீலா நடித்திருந்த "Beekara nimishangal"(நாணல்) என்ற மலையாளப்படமும் இவ்வாண்டு வந்தன.   .

5- முதல் தேசிய விருது




1969ல் வந்த KBயின் படங்கள்...

பூவா தலையா, இரு கோடுகள்,sattekalapu satteya (telegu), chiranjeevi (telegu)

பூவா தலையா பாலசந்தரின் நண்பர் அரங்கண்ணல் தயாரிப்பில் வந்த படம்.பாலச்சந்தர் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியும் இருந்தார்.இதில் ஜெமினி கணேசன்,ஜெயஷங்கர், நிர்மலா, ராஜஸ்ரீ, வரலக்ஷ்மி மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பணக்கார,ஆணவம் நிறைந்த மாமியாரை ஜெயஷங்கரும் நாகேஷும் அடக்குவது போன்ற கதையமைப்பைக் கொண்ட இப்படம் மாபெரும் வெற்றியை  பெற்றுத் தந்தது.

"மதுரையில் பிறந்த மீன் கொடியை" என்று ஆரம்பித்த, ஒரு பெண்ணை தமிழகத்திற்கு ஒப்பிட்டுப் பாடப்பட்ட , வாலி எழுதி, சௌந்தரராஜன் பாட விஸ்வனாதன் இசை அமைத்திருந்த பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

அடுத்ததாக...

சென்னை நாடக மேடைகளில், நடிகை பண்டரிபாய் நடிக்க, ஜோசப் ஆனந்தன் என்பவர் எழுதியிருந்த இருகோடுகள் என்ற நாடக உரிமையைப் பெற்று அதே பெயரில் திரைப்படமாக்கினார் கேபி.

இப்படத்தில், ஜெமினி கணேசன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.சுகமோ, துக்கமோ, படிப்போ எதுவாயினும் அது ஒரு சிறு கோடாய் இருந்தால்..அதன் அருகே சற்று பெரியகோடு இட்டால்..சுகமெனில் அதிகரிக்கும், துன்பமெனில் குறையும்..படிப்பு எனில் படிப்பறிவு வளரும்..சின்னக்கோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்னும் தத்துவத்தை உணர்த்தியது இப்படம்.

ஜெமினி, சௌகாரை காசியில் இருந்த போது காதலித்து மணமுடிக்கிறார்.ஆனால் சௌகார் பிள்ளைப்பேறு அடைந்த வேளையில் அவரிடமிருந்து ஜெமினி பிரிய நேரிடுகிறது.துக்கத்தில் இருந்த சௌகாரை, அவரது தந்தை வி.எஸ்.ராகவன் மேல் படிப்புப் படிக்கச் சொல்லி ஐ,ஏ.எஸ்., ஆக்குகிறார்.சென்னை வந்த ஜெமினி, ஜெயந்தியை மணமுடிக்கிறார்.அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராக ஜெமினி பணிபுரிகிறார்.இந்நிலையில், சென்னைக்கு கலெக்டராக வரும் சௌகார், ஜெமினியைப் பார்க்கிறார்.ஒருசமயம், தண்ணீரில் சௌகார் குழந்தையும், ஜெயந்தியின் குழந்தையும் நீந்தி விளையாடுகையில் ஜெயந்தியின் குழந்தை மூழ்கி இறக்கிறது.அதே நேரம், சௌகாரைப் பற்றி அறிந்த ஜெயந்தி,அவரைத்  தன் சகோதரியாய் ஏற்கிறார்.கடைசியில், சௌகார் தன் குழந்தையை ஜெயந்தியிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு செல்வதாகக் கதையமைப்பு இருக்கும்.

"புன்னகை மன்னன் பூ விழி கண்ணன்' என்ற பாடல் இவர்கள் கதையை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது போல அமைந்தது இப்பாடலின் சிறப்பு.இசை வி.குமார்.பாலசந்தர் தன் நாடகங்களுக்கு இசையமைத்த குமாருக்கு தன் ஆரம்பகாலப் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை அளித்தார் என்பது இங்கே பதிவு செய்கிறேன்.மேலும், என்.பாலகிருஷ்ணன் இவரது பல படங்களுக்கு ஒளிப்பபதிவாளராக இருந்தார்.

நான் ,முன்னரே சொன்னாற்போல திராவிட இயக்கத் தலைவர்களிடம் பாலசந்தருக்கு இருந்த பற்றிற்கு மற்றுமொரு உதாரணம்.

இப்படத்தில், கலெக்டர், முதலமைச்சரை சந்திப்பது போல ஒரு காட்சி.

அக்காட்சியில், முதல்வரைக் காட்டாது, அவரது மேசையில் அவரின் மூக்குக் கண்ணாடியை வைத்துவிட்டு, சிவகங்கை சேதுராஜன் என்பவரை, அறிஞர் அண்ணா போல பேசச் சொல்லி படமாக்கியிருப்பார் கேபி.அது அந்நாளில் மிகவும் பாராட்டப்பட்டது.

இருகோடுகள் படம் சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.பாலசந்தர் பெற்ற முதல் தேசிய விருது இதுவாகும். 

Monday, January 5, 2015

4- எதிர் நீச்சல்



மேடையில் மாபெரும் வெற்றி பெற்றிருந்த "எதிர்நீச்சல்" திரைப்படமானது 1968ல். பாலசந்தரின் கதை, வசனம் ,இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் இது.

நாகேஷ், ஜெயந்தி,சௌகார் ஜானகி,ஸ்ரீகாந்த்,முத்துராமன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மாது ஒரு ஆதரவற்றவன்.பல குடியிருப்புகளைக் கொண்ட ஒரு வீட்டு மாடிப்படியின் அடியில் உள்ள இடத்தில் வசிப்பவன்.அந்த வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் வேண்டிய வேலைகளைச் செய்து கொடுப்பவன்.அப்படியே படிப்பையும் தொடர்பவன்.அவனை, அனைவரும் படுத்தும் பாட்டை எண்ணி வருத்தப்பட்ட மேஜரும், முத்துராமனும் , அவன் திடீரென பணக்காரன் ஆகிவிட்டதாக ஒரு பொய்யைச் சொல்லப் போக நிலைமையே மாறுகிறது.இதனிடையே, மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தியை மாதுவிற்கு மணமுடிக்கும் ஏற்பாடும் நடக்கிறது.இப்படத்தில் முத்துராமன், மலையாள நாயராக நடித்திருப்பார். (நாடகத்தில் இப்பாத்திரத்தை நடித்த ராமன் என்பவர் பின்னாளில் நாயர் ராமன் என்றே குறிப்பிடப்பட்டார்).பாலசந்தரின் ஒவ்வொரு படத்திலும் சிறுசிறு பாத்திரங்களும் மக்களால் ரசிக்கப்படும், பேசப்படும் பாத்திரங்களாகவே அமையும்.

"அடுத்தாத்து அம்புஜம்" சேதி கேட்டோ.." "வெற்றி வேண்டுமா..போட்டுப்பாரடா எதிர்நீச்சல்" ஆகிய பாடல்கல் குறிப்பிடப்பட வேண்டியன ஆகும்.

இதே ஆண்டு வந்த இவரது மற்றொரு வெற்றிப்படம், "தாமரை நெஞ்சம்" வங்கப் படக்கதை ஒன்றை தழுவியது ஆனாலும், தமிழில் பாலசந்தரின் வசனங்களும், இயக்கமும் இப்படத்தையும் வெற்றிப் படமாக்கின.ஜெமினி கணேசன்,சரோஜா தேவி,வாணிஸ்ரீ, நாகேஷ் ஆகியோர் பங்கேற்றி இருந்தனர்.

வானிஸ்ரீயும், சரோஜா தேவியும் தோழிகள்.ஜெமினியை , சரோஜாதேவி விரும்ப வாணிஸ்ரீயும் விரும்புகிறார்.தோழிக்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறார் சரோஜாதேவி.ஒரு கட்டத்தில் விஷயம் வெளியே தெரிய, எழுத்தாளரான சரோஜாதேவி, கதையின் கடைசி அத்தியாயத்தை நாகேஷிற்கு சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு தூக்க மாத்திரையை விழுங்குகிறார்.படத்தில் நடித்த பாத்திரங்கள் மட்டுமின்றி, தியேட்டரில் ஒவ்வொரு ரசிகனும் இருக்கையின் நுனிக்கு வரும் அளவு அழகாக படமாக்கப்பட்டிருந்த்து கிளைமாக்ஸ்.

இப்படத்தில், :"அடிப்போடி பைத்தியக்காரி' என்ற பாடல் ஹிட் சாங்க் ஆகும்.ஒரிடத்தில், நீ எப்படிம்மா இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிற என்ற கேள்விக்கு, சரோஜாதேவி பதில் சொல்கிறார்.

"துக்கம் மேலிடுகையில் "மட மட' என ஒரு சொம்பு தண்ணீரை குடிச்சுடுவேன்.துக்கம் அடங்கிடும்..சிரித்திடுவேன்" .இந்த வசனம் விமரிசனங்களில் பாராட்டப் பட்டது.

இவ்வாண்டு இந்த இரண்டு படங்களுக்குமான சிறந்த வசனகர்த்தா விருதை தமிழக அரசு பாலசந்தருக்கு வழங்கியது.

இதே ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசன்  பாமாவிஜயத்தை தெலுங்கில் ("Bhalekodalu") பாலசந்தர் இயக்கத்தில் தயாரித்தார். ஹிந்தியில் "teen bahuraniyan' என்ற பெயரிலும் வந்தது.

இதே ஆண்டு பாலசந்தரின் "சுகதுக்கலு' என்ற தெலுங்கு படமும் வந்தது

Sunday, January 4, 2015

3-பாமா விஜயமும், அனுபவி ராஜாவும்



1966 ஆம் ஆண்டு' 'urandhakallu oesthunaaru jackraga' என்ற இவர் எழுத்தில் ஒரு தெலுங்கு படம் மட்டுமே வந்தது.

1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

நிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.

பாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.

பாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் "வரவு எட்டணா..செலவு பத்தணா" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.

இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் "அனுபவி ராஜா அனுபவி"

பாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த  படம் "அனுபவி ராஜா அனுபவி". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.

இப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

டி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த "முத்துக் குளிக்க வாரீயளா?" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.

தவிர்த்து, "அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..

அன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.

மொத்தத்தில் இந்த ஆண்டு வெளியான இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம். 

Friday, January 2, 2015

2-இயக்குநர் ஆனார்



ஆண்டு 1965

சாதாரணமாக ஒரு கலைஞனுக்கு, சிறந்த ஒரு படைப்பைப் பார்த்தால், அது போன்ற ஒன்றை தன்னால் படைக்க முடியவில்லையே என்ற எண்ணமும், அதே போல ஒன்றை தன்னாலும் படைக்கமுடியும் என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.

இது போட்டி, பொறாமையால் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.கலைத்தாகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பாலசந்தரும் ஒரு கலைஞன் தானே..அவரும் பாராட்டும் மற்றவர் படிப்பும் உண்டல்லவா?

ஸ்ரீதரின், "நெஞ்சில் ஒரு ஆலயம்' மருத்துவமனை ஒன்றிலேயே நடைபெறுவது போல எடுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத் தயாரிப்பு.அந்த வெற்றிப் படத்தை அன்று ரசித்த மக்கள் ஏராளம். பாலசந்தரும் ஒருவராய் இருந்திருப்பார்.தானும் அப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என விரும்பியிருப்பார் போலும்.


அவரது "நீர்க்குமிழி" நாடகம் அப்படித்தான் இருந்தது.ஒரு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

இந்நாடகம் திரைப்படமாய் எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.பாலசந்தர் முதன் முதல் இதன் மூலம் இயக்குநராக அறிமிகப்படுத்தப்பட்டார்.அதற்கு பின் அவரது திரையுலக கிராஃப் மேல் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

நீர்க்குமிழியில் அவர் இயக்குநர் என்றதுமே முக்தா ஸ்ரீனிவாசனை சந்தித்தார்.அவர் தைரியமளித்தார்.

இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாய் அமைந்தது போல, நாகேஷூம் குணசித்திர வேடங்களில் பட்டையைக் கிளப்ப முடியும் என்று நிரூபித்தப் படம்.இப்படத்தில் அவரைத்தவிர, சுந்தரராஜன்,சௌகார் ஜானகி, வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.

இப்படத்தில் உவமைக் கவிஞர் சுரதா எழுதி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய..

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா" என்ற பாடல் படமாக்கப் பட்ட விதம், நாகேஷின் நடிப்பு ஆகியவை அற்புதமாய் அமைந்தன.

முதல் படத் தலைப்பே "நீர்க்குமிழி" என உள்ளதே..என சில நண்பர்கள் கூறியும்..அதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கையில்லை.

இதே ஆண்டு அவரது "நாணல்" என்ற நாடகமும் இவரது இயக்கத்திலேயே பட ஆனது.இந்த படமும் பெரும்பான்மைக் காட்சிகள் ஒரே வீட்டிற்குள் அமைந்தது போல கதை அமைப்பு.

ஆக, 1964ல் தெய்வத்தாய், சர்வர் சுந்தரம் மூலம் திரைக்கு வந்த பாலசந்தர் அடுத்த ஆண்டே "ஊஞ்சே லாக் (ஹிந்தி) பூஜைக்கு வந்த மலர்,நீலவானம் ஆகிய படங்களுக்கு வசனமும், நீர்க்குமிழி,நாணல் என இரு படங்களுக்கு திரைக்கதை, வசனம்.இயக்கமும்..ஆக ஐந்து படங்களில் இவர் பங்கேற்றார்.

1-பாலசந்தரும்..நாடகங்களும்..



தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) அருகே உள்ள நல்லமாங்குடி என்னும் கிராமத்தில் 1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி கைலாசம் தம்பதியருக்கு மகனாக பாலசந்தர் பிறந்தார்.

அவருக்கு எட்டு வயதாக இருக்கையிலேயே அப்போது சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களை விரும்பிப் பார்ப்பார்.பன்னிரெண்டு வயதில் நாடகங்கள் மீது பற்று ஏற்பட, தனது நடிப்பு,எழுத்துத் திறமையை வளர்த்துக் கொண்டார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. ஜுவாலஜி 1949ஆம் ஆண்டு படித்து முடித்த இவர் முத்துப்பேட்டை பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடர்ந்தார்.

1950ஆம் ஆண்டு மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னைக்கு வந்தவர், அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.அச்சமயம், திரு ஒய்,ஜி.பார்த்தசாரதி,மற்றும் பட்டு ஆகியோர் நடத்தி வந்த யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்ஸ் என்ற நாடகக் குழுவில் இணைந்தார்.(இன்றும் ஒய்.ஜி.பி., மகன் ஒய்.ஜி.மகேந்திரன் இக்குழுவை நடத்தி வருகிறார்).

அலுவலகத்தில் இருந்த ரெக்ரியேசன்ஸ் கிளப்பில், ஒரு சமயம் "புஷ்பலதா" என்றொரு நாடகத்தை நடத்தினார்.அதில் வரும் பெண் பாத்திரமான புஷ்பலதா பற்றி அனைவரும் பேசுவர்.ஆனால் கடைசிவரை அப்பாத்திரம் மேடையிலேயே வராது.அந்த நாடகத்தின் ஞாபகமாகவே தன் பெண்ணிற்கு புஷ்பா என்ற பெயரைச் சூட்டினார்.


பின்னர், ராகினி ரிக்ரியேசன்ஸ் என்ற பெயரில் தனது சொந்த நாடக் குழுவை ஆரம்பித்தார்.முதன் முதலாக மேஜர் சந்திரகாந்த் என்னும் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றினார்.ஆனாலும்..அந்நாளில் தமிழ் நாடகங்களுக்கு இருந்த ஆதரவைக் கண்டு அந்நாடகத்தையே தமிழில் மேடையேற்றினார்.இந்நாடகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாய் மெட்ராஸ் டெலிஃபோன்சில் வேலை செய்து வந்த சுந்தராரஜன் என்னும் நண்பர் நடித்தார்.பின்னாளில் அவரே மேஜர் சுந்தரராஜன் என்று அழைக்கப்பட்டு 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார்.மேலும் இவர்களுடன் நாகேஷ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்து வந்தனர்.

அலுவலகத்தில் இருக்கையிலேயே, 1964ல் இவரது நாடகங்களால் கவரப்பட்ட திரு ஆர்.எம். வீரப்பன், பாலசந்தரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்த, அவர் சத்யா மூவிஸிற்காக தான் நடிக்க இருந்த "தெய்வத்தாய் " என்ற படத்திற்கான வசனங்களை இவரை எழுதச் சொன்னார்.அப்படத்தின் இயக்குநர் பி.மாதவன் பின் நீலவானம் என்ற தன் படத்திற்கும் வசனம் எழுதும் பொறுப்பை பாலசந்தருக்குத் தந்தார்.அப்படத்தில் இவர் எழுதிய...

"ஆறுல சாகலாம் அறியாத வயசு
அறுபதிலே சாகலாம் அனுபவித்த வயசு..
ஆனால்..பதினாறில் சாகறது என்பது...'

என்ற வசனம் மக்களிடம் பிரபலமானதுடன்..இதை எழுதியது யார்? என மக்கள் பாலசந்தரை அறிந்தனர்.

பாலசந்தர் அடுத்து சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி,மெழுகுவர்த்தி, எதிர் நீச்சல், நவக்கிரகம், நாணல் ஆகிய வெற்றி நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.இவர் நாடகங்களுக்கு ரசிகர்கள் சினிமாவிற்காக திரையரங்குகளில் கள்ளமார்க்கெட்டில் டிக்கட் வாங்குவது போல டிக்கெட் வாங்கி வந்தனர் என்பது இங்கே கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவரின், சர்வர் சுந்தரம் நாடகத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அதற்கான உரிமைகளை அவரிடம் இருந்து வாங்கினார்.பாலசந்தர் கதை ,வசனம் எழுத அந்நாளில் பிரபலமாய் இருந்த இரட்டையர்கள் என அழைக்கப் பட்ட கிருஷ்ணன்- பஞ்சு ஆகியோரை படத்தை இயக்கச் சொன்னார்.இந்தப் படம் மூன்றாவது சிறந்தப் படமாகத் தேர்வாகி அதற்கான சான்றிதழைப் பெற்றது.மேலும் அந்த ஆண்டு சிறந்த தமிழ்ப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றது.

உணவகத்தில் சர்வராய் இருந்த அழகற்ற வாலிபன் ஒருவன் , அந்த உணவகத்தின் முதலாளி மகள் தன்னை விரும்புவதாய் நினைத்து காதல் வயப்படுவதும், அதனால் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அவனது நண்பன் உதவ சினிமா நடிகன் ஆவதாய் கதை
 பாலசந்தரின் ஒவ்வொரு படைப்பும் மனித உறவுகளுக்கு இடையே ஆன சிக்கல்கள், பிரச்னைகள் ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டே அமைந்தவை ஆகும்.


மேஜர் சந்திரகாந்த் நாடகம் ஹிந்தியில் "ஊஞ்சே லாக்" என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.

இதனிடையே முக்தா ஃபிலிம்ஸின் "பூஜைக்கு வந்த மலர்" என்ற படத்திகான வசனம் எழுதும் வாய்ப்பினையும் பெற்றார்.

நாடகம், நாடகக் கலைஞர்கள் என்றால் பாலசந்தருக்கு கடைசிவரை பிரியமாய் இருந்தது.