Tuesday, January 6, 2015

6-இயக்குநரின் உயரிய பண்பு




1970 ஆம் ஆண்டு...

கவிஞரும், தனது நண்பருமான ஆலங்குடி சோமு அவர்களுக்காக பாலசந்தர் உருவாக்கிய படம் "பத்தாம் பசலி"ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் நாகேஷ் நடித்திருந்தனர்.

உண்மைகள் கசப்பானவையானாலும், அவற்றை மறைக்கமுடியாதல்லவா? கேபியின் தோல்வி படங்களை கைவிட்டு எண்ணிவிடலாம்.அதில் முதலிடம் பிடித்தது இப்படம்.அந்நாளில், ஒரு தமிழ்ப் பத்திரிகை, பட விமரிசனங்களை வெளியிட்டு, அதற்கான பதிலையும் அப்பட இயக்குநரிடம் பெற்று வெளியிட்டு வந்தது.அப்பத்திரிகையின் "பத்தாம் பசலி' படவிமரிசனத்திற்கு நம் இயக்குநரின் ஒரே வரி பதில்"I Plead Guilty" என்பதாகும்.இவ்வாறு. தன் படத்தின் உண்மை நிலையை உணர்ந்து, அதை ஒப்புக்கொள்ளும் பண்பு..இவரைத்தவிர வேறு எவரிடமும் இந்நாள் வரை இல்லை என உறுதியாய் சொல்லலாம்.

அடுத்ததாக இவ்வாண்டு படம் "எதிரொலி" சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில் வந்தது.கேபி இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த ஒரே படம் இது.மற்றும் இப்படத்தில் கே.ஆர்.விஜயா, சுந்தரராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

சந்தர்ப்பம் சூழ்நிலைக் காரணமாக ஒரு நல்லவன் எப்படி கெட்டவனாகி, ஒரு கொலையும் செய்யும் அளவிற்குச் செல்கிறான் என்பதே படத்தின் மையக்கரு. இப்படத்தைப் பற்றிச் சொல்ல வேறு ஏதுமில்லை.

தனது பல நாடகங்கள், திரைப்படங்களாகி வெற்றி பெற்றுள்ளதால் "நவக்கிரகம்" என்ற நாடகத்தையும் திரைப்படமாக்கினார்.கிட்டத்தட்ட எதிர்நீச்சல் பாணியிலேயே படமும் இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.இப்படத்தில்தான் ஒய்.ஜி.மகேந்திரனை அறிமுகப்படுத்தினார் இயக்குநர்.

மாபெரும் வெற்றி ஏதும் பெறாத இவ்வருடம் கடைசியில், சௌகார் ஜானகிக்காக இயக்கிய "காவியத்தலைவி" படம் வந்தது.

காமுகன் ஒருவனால் ஜானகிக்கு பிறக்கிறது ஒரு பெண் குழந்தை.அதை தன் நண்பனிடம் ஒப்படைத்து கௌரவப்பிரஜையாக வளர்க்கச் சொல்கிறாள் தாய்.சிறையிலிருந்து வெளிவரும் கணவன் வருகிறான்.பிளாக்மெயில் செய்கிறான்.மகளுக்கு தன் தாய் யார் எனத் தெரிந்ததா?தாயின் நிலை என்ன? அவள் கணவன் என்ன ஆகிறான்? என்பதையெல்லாம் சற்றும் விறுவிறுப்புக் குறையாது உணர்ச்சிபூர்வமாய் தந்தார் இயக்குநர். படம் வெற்றி பெற்றது.

ஜெமினி கணேசன், சௌகார் (இரட்டை வேடங்களில்) எம்.ஆர்.ஆர்.வாசு ஆகியோர் நடித்திருந்தனர்.ஜெமினியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இவற்றைத் தவிர்த்து, பாலசந்தர் சம்பந்தப்பட்ட,"sambarala rambabu" என்ற தெலுங்குப் படமும், சத்யன், மது, ஷீலா நடித்திருந்த "Beekara nimishangal"(நாணல்) என்ற மலையாளப்படமும் இவ்வாண்டு வந்தன.   .

No comments:

Post a Comment