Saturday, January 31, 2015

36- கல்கி

                   

செல்லம்மா ஒரு பாடகி.ஆனால் அவளது கணவன் பிரகாஷோ அவளை மிகவும் கொடுமைப் படுத்துபவன்.அவர்களுக்கு குழந்தை இல்லை.அதனாலேயே அவனும், அவனது தாயும் அவளைப் படாத பாடு படுத்துகின்றனர்.அவள் பாடுவதை நிறுத்த வேண்டும் என்கின்றனர்.ஆனால்..ஒரு கட்டத்தில் அவனது ஹிம்சை பொறுக்க முடியாமல் அவள் விவாகரத்து பெற்று விடுகிறாள்.

அவன், இரண்டாவதாகக் கற்பகம் என்பவளை மணக்கிறான்.அவளோ அப்பாவி.பிரகாஷின் அனைத்து கொடுமைகளையும் பொறுத்து கொள்கிறாள்.

செல்லம்மா, தனியாக கோகிலா என்னும் சமையல்காரப் பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாள்.

கல்கி என்னும் பெண் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள்.அவளுடன் வேலைப் பார்க்கும் பரஞ்சோதி என்பவன் அவளை விரும்ப, அவள் தவிர்த்து வருகிறாள்.

செல்லம்மாவிற்கு கல்கியின் நட்புக் கிடைத்ததும், கல்கி அவளது வீட்டிலேயே, பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாகிறாள்.

செல்லம்மாவின் கதையைக் கேட்டதும், கல்கி, பிரகாஷூடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறாள்.பின், அவனை மணந்து கொண்டு... அவனை துன்புறுத்த ஆரம்பிக்கிறாள்.பிரகாஷ் அவளுக்கு அடங்கிப் போகும் நிலை.அவன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு, அவனது வாழ்விலிருந்து விலகுகிறாள்.

அந்தக் குழந்தையை செல்லம்மாவிற்கு பரிசாகக் கொடுக்கிறாள்.

குழந்தைப் பெற்றுத் திரும்பிய கல்கியை, முற்போக்குச் சிந்தனையுடன் பரஞ்சோதியும் மணக்கத் தயாராய் இருக்கிறான்.

பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும்,பாலசந்தரின் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்தது.

தேவா இசை.

இப்படத்தில் கீதா, செல்லம்மாவாகவும், கற்பகமாக ரேணுகாவும், கல்கியாக ஸ்ருதியும், பிரகாஷாக ,பிரகாஷ்ராஜும், பரஞ்சோதியாக ரஹ்மானும் நடித்தனர்.

பாலசந்தர் சினிமா இயக்குநராக ஒரு காட்சியில் வருவார்.

No comments:

Post a Comment