Saturday, January 24, 2015

26-சிந்து பைரவி

                       

1985 ல் வந்த இயக்குநரின் மாபெரும் வெற்றிபடம் "சிந்து பைரவி".

ஜே.கே.பாலகணபதி..மக்களால் ஜேகேபி என்று அழைக்கப்பட்ட மாபெரும் இசைக் கலைஞன் அவன்.ஆனால் அவன் மனைவி பைரவிக்கோ சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவு ஞானம்.அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஜேகேபியின் குழுவில் மிருதங்கம் வாசிப்பவர் குருமூர்த்தி தம்பூரா போடுபவர் கஜபதி.ஒருநாள் குருமூர்த்தி கச்சேரியில் குடித்துவிட்டு மிருதங்கம் வாசிக்க, அதைக் கண்ட ஜேகேபி அவரை வாசிக்க வேண்டாம் என திருப்பி அனுப்பிவிட்டு..மிருதங்கமே இல்லாமல் பாடினார்.குடிப்பழக்கத்தை அறவே வெறுப்பவர் ஜேகேபி.

ஒரு பள்ளியில் பாட்டு வாத்தியாராக வேலையில் இருப்பவர் சிந்து.அவர் ஒருநாள் ஜேகேபி கச்சேரியைக் கேட்க வருகிறாள்.தியாகராஜர் கீர்த்தனையை ஜேகேபி தெலுங்கில் பாட..மக்கள் அதை ரசிக்காமல் பேசிக்கொண்டிருக்கு, சிந்து எழுந்திருந்து மக்களுக்கு புரியும் வண்ணம் தமிழில் பாடச்சொல்ல, கோபம் மேலிட ஜேகேபி அவளையேப் பாடச் சொல்கிறார்.அவளும் மேடை ஏறித் தமிழ்ப் பாட்டொன்று பாட கைத்தட்டல் அரங்கையே அதிர வைக்கிறது.இந்நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் நட்புத் தொடர்கிறது.

பொய் பேசுவதையேத் தொழிலாகக் கொண்ட கஜபதி, ஜேகேபி, சிந்துவிற்குமான நட்பை , கொச்சைப்படுத்தி பைரவியிடம் சொல்கிறான்.இதனிடையே சிந்துவும் ஜேகேபியை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.ஒருநாள் ஜேகேபி, சிந்துவின் வீட்டிற்கு சென்றுவருவதை பைரவி பார்த்துவிடுகிறாள்.சிந்துவும் கருவுற்றிருக்கிறாள்.நிலைமை மோசமாவதை அறிந்த சிந்து ஊரைவிட்டுச் செல்கிறாள்.அவளை மறக்கமுடியாமல் ஜேகேபி குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். கச்சேரிக்கு குடித்துவிட்டு வருகிறார்,பாதியிலே அக்கச்சேரி நிற்கிறது.மக்கள், சபாக்கள் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறார், சிந்துவை, ஜேகேபிக்கு மணமுடிக்கவும் பைரவியும் தயாராகிறாள். ஜேகேபி குடியை விட வேண்டும், பழையமாதிரி கச்சேரி செய்தால் தான் வருவதாகக் கூறிய சிந்து..அதன்படியே கச்சேரிக்கு வருகிறாள். பின்னர், ஜேகேபி, பைரவிக்கு ஒரு பரிசை அளிக்கிறாள்.அந்தப் பரிசு அவளுக்கு, ஜேகேபிக்கும் பிறந்த குழந்தை. அதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் வாழ்விலிருந்து விலகுகிறாள்.

சிந்துவின் தாய் யார்..என்பதற்கான ஒரு கிளைக்கதையும் படத்தில் உண்டு.

ஜேகேபியாக சிவகுமார், சிந்துவாக சுஹாசினி இருவரும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டனர்.பைரவியாக சுலக்க்ஷணா, கஜபதியாக ஜனகராஜ், குருமூர்த்தியாக டில்லி கனேஷ், சிந்துவின் தாயாக மணிமாலா மற்றும் ராகவேந்தர்,சிவசந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரகுநாத்ரெட்டி ஒளிப்பதிவு.

இப்படத்திற்கான இசை இளையராஜா..    அனைத்துபாடல்களும் இன்றும் தேனாய் இனிப்பவை.

மகாகணபதிம்   - கே,ஜே,ஜேசுதாஸ்
மரி மரி நின்னே - கே.ஜே.ஜேசுதாஸ்
பூமாலை வாங்கி வந்தேன்" _ கேஜே ஜேசுதாஸ்
மோகம் என்னும் - கேஜே ஜேசுதாஸ்
கலைவாணியே - கே ஜே ஜேசுதாஸ்
தண்ணீ தொட்டி_ கே ஜே ஜேசுதாஸ்
நான் ஒரு சிந்து _ சித்ரா
பாடறியேன் -சித்ரா

இப்படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்து, "பாடறியேன் பாடலில்"

என்னையேப் பாரு எத்தனைப் பேரு

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு

என எழுதியிருந்தார்...

அதை பாலசந்தர்..

"தமிழ்ப் பாட்டும் பாடு' என மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டாராம்.

"ப்" மாற்றி "ம்" போட்டவுடன் அர்த்தம் மாறுகிறது பாருங்கள்.

இயக்குநர் எப்படிப்பட்ட மேதை?!

இப்படத்தில் நடித்த சுகாசினிக்கு சிறந்த நடிக்கான தேசிய விருதும், இசை அமைத்த இளையராஜாவிற்கு..இசைக்கான தேசிய விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் கிடைத்தன.
சிறந்த நடிகருக்கான விருதை சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் சிவகுமார் இழந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படம்.

2003ல்..அதாவது சிந்து பைரவி படம் வெளிவந்து 18 ஆண்டுகள் கழித்து சிந்துபைரவியின் பாகம் இரண்டை எடுக்க பாலசந்தர் விரும்பினார்.ஆனால் இம்முறை தொலைக்காட்சித் தொடராக.ஆனால், சிவகுமார், ஜேகேபியாக நடிக்க இயலாத நிலையில், சுஹாசினி சிந்துவாக நடிக்கத் தயாராய் இருந்தும்...அவர்கள் இருவரையும் மறக்காத மக்கள் சுஹாசினியுடன், வேறு ஒருவரை ஜேகேபியாக ஒப்புக்கொள்வார்களா என்ற எண்ணம் கேபிக்கு இருந்தமையால்..சுஹாசினியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

ஆகவே சிந்து பைரவி -2 ஐ "சகானா" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக ஆக்கினார்

அதே நேரம், திறமையும், அனுபவமும் மிக்க நடிகர்...26 ஆண்டுகளுக்கு முன் தன்னால் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை ஜேகேபியாக நடிக்க வைத்தார்.அவருக்கு ஜோடி பைரவியாக திரைப்படத்தில் நடித்த சுலக்க்ஷணாவையே தொடரிலும் நடிக்க வைத்தார்.பிரபல கர்நாடக இசைப் பாடகரான அனுராதா கிருஷ்ணமூர்த்தியை சிந்து வேடத்தில் அறிமுகப் படுத்தினார்.

இத்தொடரில், பைரவிக்கு, சிந்து குழந்தையை விட்டுச் சென்றதும்.மற்றொரு குழந்தை பிறப்பது போலவும்..இப்போது ஜேகேபி, பைரவி க்கு இரண்டு பதின்மவயது குழந்தைகள் இருப்பதுப் போல கதையமைப்பு.மேலும் ஜேகேபியும் பைரவியும் இப்போது ஒற்றுமையாய் உள்ளது போலவும் அமைக்கப்பட்டது.

திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இத்தொடருக்கும் கிடைத்தது.

ராஜேஷ் வைத்யா இதற்கு இசை அமைக்க பாலமுரளிகிருஷ்ணாவும், சுதா ரகுநாதனும் பாடல்களைப் பாடினர்.

2 comments:

  1. சிந்து பைரவி தொடர் எந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பானது?

    ReplyDelete
  2. ஜெயா டிவியில் சகானா என்ற பெயரில் வந்தது

    பதிவிலும் அதற்கேற்றாற் போல மாற்றிவிட்டேன்

    ReplyDelete