பாலசந்தரின் கதை வசனம் இயக்கத்தில் 1987ல் வெளிவந்த படம் "மனதில் உறுதி வேண்டும்"
சுஹாசினி ஒரு நர்ஸாக வந்து, தன் அருமையான நடிப்பால் மக்களைக் கவர்ந்த படம் எனலாம்.வீட்டிலுள்ள எட்டு அங்கத்தினர்களைக் காக்கும் பொறுப்பு நந்தினிக்கு.
அவள் வாழ்க்கைப் பாதையில் எவ்வளவு இடையூறுகள்?
கணவனுடன் விவாகரத்து,தம்பியின் இழப்பு,நோய்வாய்ப்பட்ட சகோதரி, காதல் தோல்வி, தனது கிட்னியைத் தானமாகக் கொடுக்க வேண்டிய நிலை.எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத திரைப்படத்துறையில்...பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களால் எதையும் செய்ய முடியும், எதையும் சாதிக்க முடியும் என தன் படங்களில் சொன்னவர் கேபி மட்டுமே! அதே சமயத்தில் ஆணாதிக்கத்திற்கும் பெண்கள் எப்படி பலியாகின்றனர் என்பதையும் சொன்னது அவரது படங்கள்.
விவேக், இப்படத்தின் மூலம்தான் நந்தினியின் தம்பியாக அறிமுகமானார்.
நந்தினியின் மற்றொரு சகோதரனான ரமேஷ் அரவிந்த் பாத்திரம் தாக்கம் மிக்கது.அக்கதாபாத்திரம் மூலம் ஒரு கட்சியில் அரசியல்வாதிகளுக்கு, கடைசிவரை ஒரு அடிமட்டத் தொண்டன் எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்புக ளுடன் இருக்கிறான் என்பதைச் சொல்வார்.
தன் தலைவன் பற்றி தம்பி விவேக் கூற அவரை கொல்லவே முயல்வார் ரமேஷ் அரவிந்த்.தலைவன் கைது என்ற செய்தி கேட்டதும் தீக்குளித்து இறப்பார்.
இப்படத்தில் நர்ஸ்களின் சேவைகளை உயர்வாக சித்தரிப்பதுடன்..நந்தினியின் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மனதில் உறுதி வேண்டும் என்று காட்சியில் வைத்தார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், தலைமை மருத்துவராக திரையில் அறிமுகம் ஆன படம்.வாழ்வில் ஏற்பட்ட துயரை மறந்து கர்நாடக சங்கீதம் பாடியபடியே உள்ள நகைச்சுவைப் பாத்திரம்.
ரஜினிகாந்த்,சத்யராஜ், விஜய்காந்த் ஆகியோர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவது சிறப்பு.
இளையராஜா இசை. மனதில் உறுதி வேண்டும், கண்ணின் மணியே,கண்ணா வருவாயா ஆகிய பாடல்கள் ஹிட்.
சிறப்பான அறிமுகம். இன்று தான் நான் படம் பார்த்தேன். அருமையாக இருந்தது.
ReplyDeleteசங்கத்தமிழ் கவியே பாடலை கூற மறந்து விடாதீர்கள்... அருமையான பாடலும் இருவரின் நடனமும்.